சுதந்திரா கட்சியின் ஸ்காட் மோரிசன் இரண்டாவது முறையாக ஆஸ்திரேலியாவின் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் தேர்தலில் வென்று 11 நாட்களுக்குப் பிறகு இன்று (புதன்கிழமை) நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவி ஏற்றுக் கொண்டார். இவருடன் மைக்கேல் மெக்கார்மாக்கும் துணை பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு விழாவில் அமைச்சர்களுடனான சந்திப்பில் மோரிசன் பேசும்போது,” மக்களுக்கு ஒவ்வொரு நாளும் பணி செய்யக் கூடிய பாக்கியத்தை பெறக் கூடிய வாய்ப்பை அவர்கள் நமக்கு அளித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் நாம் அவர்களுக்காக சிறப்பாக பணியாற்றுவோம்” என்றார்.
புதிதாகப் பதவியேற்றுள்ள ஆஸ்திரேலிய அமைச்சரவையின் ஏழு பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுச் சூழல் அமைச்சராக சூசன் லே பதவியேற்றார்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தொழிலாளர் கட்சி வெற்றி பெறும் என்று கூறிய நிலையில் கணிப்புகளை எல்லாம் உடைத்து மொத்தமுள்ள 150 தொகுதிகளில் 77 இடங்களில் சுதந்திரா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றன. ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொழிலாளர் கட்சிக்கு 68 இடங்கள் கிடைத்தது.
மீதமுள்ள 6 இடங்களில் சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். முன்னதாக, ஆஸ்திரேலியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமராக இருந்த மால்கம் டர்ன்புல்லுக்கு எதிராக மூத்த அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியதால் நாடாளுமன்றத்தில் அவரது ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க எம்.பி.க்களின் வாக்கெடுப்பு நடந்தது. இதில் ஸ்காட் மோரிசன் வெற்றி பெற்று பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் மீண்டும் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக பிரதமராக ஸ்காட் மோரிசன் தேர்வானார்.