நாட்டில் ஜனநாயகம் கோலோச்சுகின்றது. அது ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டது என்று கூறப்படுகின்றது. ஆனால், அந்த ஜனநாயகத்தில், தானே தன்னிகரில்லாத உயர்ந்த சக்தி என்பதை நிறைவேற்று அதிகாரம் மீண்டும் ஒரு முறை உரத்து வெளிப் படுத்தி இருக்கின்றது.
நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, சட்டவாக்கம் ஆகிய மூன்றுடன் சமூகத்தின் காவல் நாய் என வர்ணிக்கப்படுகின்ற ஊடகத்துறையையும் சேர்த்து நான்கு தூண்களில் கட்டி எழுப்பப்பட்டிருப்பதே ஜனநாயகம் என்பதே கோட்பாடு.
இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் நான்கு சக்திகளும் தம்மளவில் தனித்துவமானவை. ஓன்றையொன்று மிஞ்ச முடியாது. ஒன்று மற்றொன்றை மேவிச் செயற்பட முடியாது. இது ஜனநாயகத்தின் தத்துவம்.
ஆனால் நிறைவேற்று அதிகாரமாகிய ஜனாதிபதியின் அதிகாரம் கட்டுக்கடங்காமல், ஏனைய ஜனநாயக சக்திகளை மீறிச் செயற் படுவதை நாட்டில் நாம் அடிக்கடி காணக்கூடியதாக உள்ளது.
இந்த வகையில் விமர்சனத்துக்குரிய பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் பொதுமன்னிப்பு விடுதலை இப்போது அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. அதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் நீதித்துறையை மேவி செயற்பட்டிருக்கின்றது. நீதித்துறையைப் புறக்கணித்து, நிறைவேற்று அதிகாரம் தனது மேலாண்மையை இதன் மூலம் நிலைநாட்டி இருக்கின்றது. இது ஜனநாயகத்திற்கு முரணானது. விரோதமானது.
ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகிய நீதித்துறைக்குள் அத்துமீறி புகுந்து அவமதித்தார். நீதிச் செயற்பாட்டிற்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் 6 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரரை தண்டனைக் காலத்தின் 9 மாதங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி, பொது மன்னிப்பளித்து விடுதலை செய்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் ஜனநாயக நடைமுறையை கேள்விக்கும், கேலிக்கும் உட்படுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறுதின தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலையடுத்து, தேசிய பாதுகாப்பு அவசரகால நிலைமைக்கு ஆளாக்கப்பட்டு, அரசியல் ரீதியாகவும் நாடு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றது. அவசரகால நிலைமை காரணமாக நாட்டின் இயல்பு வாழ்க்கை பல்வேறு தளங்களிலும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றது.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதை யில் போய்க்கொண்டிருக்கின்றது. சாதாரண வியாபார நடவடிக்கைகள், உள்ளூர் வர்த்தகச் செயற்பாடுகள், பிற நாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகள் என்பனவும் பாதிக்கப்பட்டு நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன. அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற உல்லாசப் பயணத்துறை மட்டுமல்லாமல், பங்குச் சந்தைகள், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகள் என்பன ஸ்தம்பித நிலைமைக்கு ஆளாகியிருக்கின்றன.
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால், ரூபாவின் மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து செல்கின்றது. பணவீக்கம் மேலோங் கிச்சென்று கொண்டிருக்கின்றது. நாட்டின் நாளாந்த, மீண்டுவருகின்ற, அத்தியாவசிய செலவினங்கள் கையைக் கடிக்கின்ற அளவில் மோசமடைந்திருக்கின்றன. ஏற்கனவே கடன் சுமையில் மூழ்கியுள்ள நாடு பெற்ற கடன்களைக் குறித்த தவணையில் திருப்பிச் செலுத்துவதற்குத் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. கடன் சுமையையும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளையும் சமாளிப்பதற்காக அந்நிய நாடுகளிடமும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமும் மேலும்மேலும் கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலைமைக்கு அரசாங்கம் ஆளாகியிருக்கின்றது.
மறுபக்கத்தில் உயிர்த்த ஞாயிறுதின குண் டுத் தாக்குதல்களின் மூலம் நாட்டைப் பற்றிப் பிடித்துள்ள சர்வதேச பயங்கரவாதத்தை முறியடித்து, தேசிய பாதுகாப்பை வலுவாக நிலைப்படுத்தி, மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டிய கட்டாய நிலைமைக்கு அரசாங்கம் வலிந்து தள்ளப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு பலதரப்பட்ட பொறுப்புக்களும் கடமைகளும் அரசாங்கத்தின் முன்னால் மலைபோல குவிந்து கிடக்கின்றன. இந்தக் கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்தை வழிநடத்திச் செல்ல வேண்டிய கடப்பாடு, அரச தலைவர்களாகிய ஜனாதிபதியையும், பிரதமரையும் சார்ந்திருக்கின்றது. தேசிய நலன்களை முதன்மைப்படுத்தி இந்தக் கடப்பாடுகளைக் கண்ணும் கருத்துமாக, இருவரும் பதவி வழியில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது. இந்தக் கடப்பாட்டில், ஏனைய அரச கட்டமைப்புக்களையும் அமைச்சரவையையும், எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கி கவனமூன்றிச் செயற்பட வேண்டியுள்ளது.
ஆனால் இது விடயத்தில் அவர்களுடைய கவனம் உரிய முறையில் செலுத்தப்படுகின்றதா என்ற கேள்விக்கு இல்லையென்ற எதிர்மறையான பதிலையே அரச தலைவர்களிடையே காணப்படுகின்ற அதிகாரப் போட்டியும், அரசியல் நிலைப்பாடும் வெளிப்படுத்தி வருகின்றன. இந்தப் பின்னணியில்தான் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.
நடப்பது என்ன?
அவசரகால நிலைமையுள்ள நெருக்கடியான சூழலில், ஞானசார தேரரை பொதுமன்னிப் பளித்து விடுதலை செய்தமைக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிலை விளக்கம் அளித்திருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருக்கின்றது. பன்னாட்டு ஊடகம் ஒன்றிற்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாக அந்தத் தகவலில் விபரம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய முடியுமானால், தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்த கேள்வி குறித்து, பன்னாட்டு ஊடக முகவர் ஒருவர் ஜனாதிபதியிடம் கேட்டதையடுத்தே இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”ஞானசார தேரருக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறு பௌத்த மதபீடங்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களும் என்னிடம் கோரிவந்தன. அதற்கமைய அவருக்கு நான் பொதுமன்னிப்பு வழங்கினேன். ஞானசார தேரர் பயங்கரவாதியல்ல. அவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவுமில்லை. நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டே அவர் மீது சுமத்தப்பட்டு அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. எனவே, எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை நான் விடுதலை செய்ததில் தவறேதும் இல்லை.
ஆனால் சிறைச்சாலைகளில் தடுத்து வைக் கப்பட்டுள்ள மற்றும் தண்டனை அனுபவித்து வருகின்ற அரசியல் கைதிகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள். அவர்களுக்குத் தற்போதைய நிலையில் மன்னிப்பு வழங்குவது கடினம். ஞானசார தேரருடன் அரசியல் கைதிகளை ஒப்பிட வேண்டாம். இவர் செய்த குற்றம் வேறு. அவர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றம் வேறு. இரண்டையும் ஒப்பிட வேண்டாம்” என ஜனாதிபதி அந்த ஊடகவியலாளரிடம் தெரிவித்திருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஞானசார தேரரையும் அரசியல் கைதிகளையும் ஒப்பிட வேண்டாம் என்று ஜனாதிபதி கூறியுள்ள போதிலும், அவ்வாறு ஒப்பிட்டு நோக்க வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது.
ஞானசார தேரர் ஒரு பௌத்த பிக்கு. அஹிம்சையையும், அன்பையும், கருணையையும், பொறுமையையும் போதிக்கின்ற பௌத்த மதத்தின் முன்னணியில் உள்ள ஒருவராகவும், பிரமுகராகவும் அவர் தன்னை அடையாளப் படுத்தியிருக்கின்றார்.
ஒரு பௌத்த பிக்கு என்ற வகையில் அவருடைய செயற்பாடுகளும் அவர் சார்ந்த மதத்தின் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாக உள்ளன. பௌத்த மதம் மாத்திரமே இந்த நாட்டில் இருக்க வேண்டும். அதுவே ஆட்சியில் கோலோச்ச வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் பிற மதங்களை குறிப்பாக கிறிஸ்தவத்தையும், இஸ்லாத்தையும் வெறுத்து ஒதுக்கி, அவற்றை ஏற்றுக்கொள்ளாத ஒருவராகவே அவர் திகழ்கின்றார். கொள்கையளவில் மட்டுமல்லாமல், அந்த மதங்களை நிந்தனை செய்பவராகவும், குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான மத வெறுப்புணர்வைத் தூண்டி, வன்முறைகள் இடம்பெறுவதற்குக் காரணகர்த்தாவாகவும் அவர் காணப்பட்டிருக்கின்றார்.
பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை பெற்ற தும், தனது தாயார் சகிதம் தன்னை வந்து சந்தித்த ஞானசார தேரர் இனி மேல் தவறிழைக்கமாட்டார் என்றும், அவ்வாறு தவறிழைத்தால் பொதுமன்னிப்பளிக்கப்பட்ட அவர் தண்டனைக்கு உள்ளாக நேரிடும் என்பதை அவருக்கு நினைவூட்டியிருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஆனால் சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்றதும், தியான வாழ்க்கையில் ஈடுபடப் போவதாகக் கூறிய ஞானசார தேரர், தியான வாழ்க்கையையும் புண்ணிய காரியங்களையும் பின்னர் செய்து கொள்ள முடியும். இப்போது நாடு உள்ள நிலையில் தனது முன்னைய செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் பௌத்த மத பீடாதிபதிகளைச் சந்தித்ததன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் தனது இந்த நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். இது வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறியதையே நினைவூட்டுகின்றது.
முன்மாதிரியை பின்பற்றிய
நடவடிக்கையா?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னைய ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் முன்னைய நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஞானசார தேரரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்துள்ளதாக ஆய்வாளரும் பத்தி எழுத்தாளருமான லுசியன் ராஜகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் உயர் மட்ட அனுசரணையைப் பெற்றிருந்த களனியைச் சேர்ந்த கொணவெல சுனில் என்பவர் வன்முறை வழக்கொன்றில் பத்து வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர் குழுவில் அப்போதைய முக்கியஸ்தராகவும் சிறைச்சாலை கொலைகள், வன்முறைகளில் முக்கிய வன்முறைச் சம்பவங்களில் முக்கிய பங்கேற்றிருந்தவருமான கொணவெல சுனிலை நீதிமன்றத்தின் தண்டனையில் இருந்து அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்திருந்தார்.
சர்வதேச வாக்குரிமை தினத்தின் பொன்விழா 1981 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டபோது, அந்த கொண்டாட்டத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை விடுதலை செய்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன சிறைவாசம் செய்த சுனிலுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார். விசேட தினங்களில் தண்டனைக் குற்றவாளிகளை விடுதலை செய்யும் மரபுக்கமைய இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.
கொலை, இராஜதுரோகம், சட்டவிரோத ஒன்றுகூடல், வங்கிக் கொள்ளை, பயண வழிக்கொள்ளை, வருமானவரி கட்டத்தவறியமை, இலஞ்சம் போன்ற குற்றங்கள் தவிர்ந்த ஏனைய குற்றங்களுக்கான முதற்தடவையாகத் தண்டனை பெற்றவர்களை விசேட தினங்களை முன்னிட்டு பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யலாம் என்ற நியதியின் அடிப்படையில் வன்முறை குற்றம் புரிந்து தண்டனை அனுபவித்து வந்த கொணவெல சுனிலை ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளை ஏற்று, சட்டபூர்வமாக திட்டமிட்ட வகையில் தந்திரோபாய ரீதியில் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன விடுதலை செய்திருந்தார்.
இந்தப் பொது மன்னிப்பு ’சுனில் பொதுமன்னிப்பு’ (சுனில் சமாவ) என்று அப்போது பிரபலம் பெற்றிருந்ததுடன், அவரை அகில இலங்கை சமாதான நீதவானாகவும் அன்றைய அரசு நியமித்து பெருமையடையச் செய்திருந்தது.
முன்னைய ஆட்சிக் காலத்தில் இரட்டைக் கொலைக் குற்றத்திற்காகத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த, முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் துணைவியார் மேரி ஜூலியட் மொனிக்கா பெர்னாண்டோவை சர்வதேச பெண்கள் தினத்தையொட்டிய சிறைக்கைதிகளுக்கான பொதுமன்னிப்பின் மூலம் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தனது ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்று விடுதலை செய்திருந்தார்.
இந்த இரண்டு பொது மன்னிப்பு நடவடிக்கைகளையும் முன்னுதாரணமாகக் கொண்டே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரரை விடுதலை செய்திருக்க வேண்டும் என்று லூசியன் ராஜகருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கிரிமினல்களையும் கொலைக்குற்றவாளிகளையும் விடுதலை செய்து அவர்களை சமூகத்தில் நடமாட விடுகின்ற இலங்கையின் பொதுமன்னிப்பளிக்கும் கலாசாரத்தை அவர் எள்ளி நகையாடும் வகையில் விமர்சித்திருக்கின்றார்.
குறிப்புணர்த்தல்
நீண்டதொரு யுத்தத்தின் பின்னர் யுத்த அழிவுகளில் இருந்தும், இனங்களுக்கிடையில் சிதைந்து போன, சமூக, சமயம் சார்ந்த உறவையும் சீர்செய்து இன ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் ஏற்படுத்துவதற்காக, அரசு செயற்பட்டு வருகின்ற ஒரு சூழலில் இனங்களுக்கிடையில் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் பிளவுகளை மேலும் ஆழமாக்கி நாட்டில் அமைதிக்கும் சமாதானத்திற்கும் பங்கம் விளைவிக்கும் வகையிலேயே ஞானசார தேரரின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.
பௌத்த மதத்தின் மஞ்சள் அங்கியை அணிந்து கொண்டு இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வையூட்டி, நாட்டில் மதக்கலவரங்களும் இனக்கலவரங்களும் தலைதூக்குவதற்கு வழிகோலுகின்ற ஒருவரை சாதாரண குற்றவாளியாகக் கருத முடியாது. பொது அமைதிக்கும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிப்பது பாரதூரமான குற்றமாகும். அது பயங்கரவாதச் செயற்பாட்டுக்கு ஒப்பானது. அத்தகைய செயற்பாடுகளுக்கு அரசு இடமளிக்கக் கூடாது. மக்கள் அமைதியாக, ஐக்கியமாக வாழ்வதை உறுதிப்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தி, மக்களைப் பாதுகாப்பதற்காக நாட்டில் எத்தனையோ சட்டதிட்டங்களும் வரையறைகளைக் கொண்ட ஒழுங்கு நடை முறைகளும் ஏற்கனவே வகுத்தளிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை சரியான முறையில் இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் தலையாய கடமையாகும். அத்தகைய பொறுப்பையும் கடமைகளையும் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்ற பேரின அரசியல்வாதிகளும் கடைப்பிடிப்பதில்லை. மாறாக அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைக் கவர்ந்து எவ்வாறு அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சிக்கு வரலாம் என்பதிலேயே அவர்களுடைய கவனம் கூர்மையாகக் குவிந்திருக்கின்றது.
அத்தகைய சுயலாப அரசியல் போக்கின் அடியொட்டிய வகையிலேயே பௌத்த மதத் தின் மீது இறுக்கமான பற்றுக்கொண்டுள்ள பேரினமாகிய சிங்கள மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காகவே, நாட்டின் ஐக்கியத்திற்கும் இன நல்லுறவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல குற்றப்பண்பியல் பின்னணியைக் கொண்ட சிங்கள பௌத்த தேசியத்தில் ஊறியுள்ள ஞானசார தேரரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பளித்து விடுதலை செய்துள்ளார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
நெருக்கடிகளில் இருந்து நாட்டையும் மக்களையும் மீட்பதிலும் பார்க்க, வருட இறுதியில் நடத்தப்பட வேண்டிய ஜனாதிபதி தேர்தலையும் தொடர்ந்து இடம்பெற வேண்டிய பொதுத் தேர்தலையும் கவனத்திற் கொண்டு நாட்டு மக்களின் வாக்குகளைக் கவர்ந்திழுக்கின்ற அரசியல் தந்திரோபாயச் செயற்பாடுகளை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார். அதேநேரம் அரசியல் ரீதியாக அவரோடு மல்லுக்கு நின்று போராடுகின்ற பிரதமரும்கூட அதே அரசியல் இலாப நோக்கில் செயற்படு வதையே காண முடிகின்றது.
இந்த அரசியல் அதிகாரப் போட்டியும், அடுத்த தவணைக்கான ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான திட்டமிட்ட சுயலாப அரசியல் செயற்பாடுகளுமே தேசத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தலும், ஆபத்தும் ஏற்பட இருந்ததாக உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பான முன்னெச்சரிக்கையை ஆட்சியாளர்கள் புறக்கணித்து பொறுப்பற்ற முறையில் செயற்பட்டிருந்தார்கள்.
இந்த பொறுப்பற்ற போக்கு அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடைபெற்று மூன்று வாரங்களின் பின்னர் சிலாபம் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருந்த தருணத்தில் கட்டவிழ்ந்த வன்முறைத் தாக்குதல்களையும் ஆட்சியாளர்கள் முன்கூட்டியே உணர்ந்து தடுத்து நிறுத்தத் தவறிவிட்டார்கள். அது மட்டுமல்ல, ஊரடங்கு வேளையில் வெளியிடங்களில் இருந்து வந்து முஸ்லிம் மக்கள் மீது பாய்ந்து வெறியாட்டம் ஆடிய கும்பல்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஆயுதமேந்தித் தயாராக இருந்த பொலிஸார், அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரைப் பயன்படுத்தவும் ஆட்சியாளர்கள் தவறியிருக்கின்றார்கள்.
இத்தகைய ஒரு பின்னணியில்தான் ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன தண்டனை விலக்கீட்டுக் கலாசாரத்தின் வழித்தடத்தில், வன்முறைக் கலாசாரத்தை ஆயுதமாகக் கொண்டு சிங்கள பௌத்த தேசியத்தை முதன்மைப்படுத்தி மேலாண்மை பெறச் செய்வதற்காகத் துடித்துக் கொண்டிருக்கின்ற ஞானசார தேரரை நீதிமன்ற அவமதிப்புக் குற்றத் தண்டனையிலிருந்து விலக்கி பொது மன்னிப்பளித்து விடுதலை செய்துள்ளார்.
விடுதலை பெற்றுள்ள ஞானசார தேரரின் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்த நிலைப்பாடு என்ன என்பதைக் கவனத்திற் கொள்வது முக்கியம். தனது நிலைப்பாடு குறித்து அவர் முக்கிய விடயங்களைக் கூறியுள்ளார்.
”சிறையில் இருந்து வெளியில் வந்துபோது, முதலில் தியான வாழ்க்கையில் ஈடுபடவே நான் விரும்பியிருந்தேன். ஆனால் வெளியில் வந்து இளைஞர்களின் தொங்கிப்போன முகங்களில் காணப்பட்ட தந்தையை இழந்திருந்த சோகத்தைக் கண்டதும், எனது முன்னைய செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நான் தீர்மானித்துவிட்டேன்” என்று அவர் தெரிவித் துள்ளார்.
அத்துடன் அவர் அரசியலில் தீவிரமாக ஈடுபடப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த அரசியல் வரலாற்று ரீதியானது.
”அதற்காக நான் அரசியலில் ஈடுபடத் தீர்மானித்துள்ளேன். அந்த அரசியல் கட்சி அரசியல் அல்ல. அதற்கும் அப்பாற்பட்டது. அது வரலாற்று ரீதியானது. ஐந்து வருடத்திற்கு ஒரு தடவை மாற்றம் பெறுகின்ற கட்சி அரசியலல்ல. அது நிரந்தரமானது. இன் றைய நிலைமைகளில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு அந்த அரசியலே அவசியம்” என்றுஅவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன வழங்கிய பொதுமன்னிப்பு அவரே குறிப்பட்டது போன்று திருந்துவதற்கல்ல; அது பழைய பாதையில் தொடர்ந்து பயணிப் பதற்கான அங்கீகாரம் என்பதையே ஞானசார தேரர் உணர்த்தியிருக்கின்றார்.
பி.மாணிக்கவாசகம்