தாமரை ஏன் நனி சைவத்தைப் பின்பற்றுகிறார்? 

இறைச்சி, பால் பொருள்களின் தேவை குறையும்போது பண்ணைகளின் எண்ணிக்கை குறையும். இவையனைத்தையும் யோசித்துதான் நான் இந்த உணவுமுறைக்குத் திரும்பினேன். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ஒரு நனிசைவர். உலகளவில் பலர் இந்த உணவு முறையைப் பின்பற்றுகிறார்கள்.

‘முன்பெல்லாம் காபி இல்லாமல் என் பொழுதுகள் விடியாது, முடியாது. அந்த அளவுக்குக் காபி என் வாழ்க்கையோடு கலந்திருந்தது. குறிப்பாகப் பாடல் எழுதும் நேரங்களில் ஆவி பறக்க காபி வேண்டும். ஆனால், இப்போது முற்றிலும் காபியைத் தவிர்த்துவிட்டேன். காபி மட்டுமல்ல பால், நெய், மோர், தயிர் எனப் பால் சார்ந்த எந்தப் பொருளையும் பயன்படுத்துவதில்லை. ‘நனிசைவம்’  (வீகன்) எனும்  உணவுப்பழக்கத்துக்கு நான் மாறிவிட்டேன்…” புன்னகையோடு தொடங்குகிறார் கவிஞர் தாமரை.

கவிஞர் தாமரை

ஆங்கிலக் கலப்பில்லாமல், ஆபாசமில்லாமல், கவித்துவமாக எழுதும் பாடல்களால் தமிழ்த் திரையுலகில் தனித்துவம் பெற்றவர் தாமரை. உணவு விஷயத்தில் மிகவும் கட்டுக்கோப்பு.

வீகன்

தாமரை ஏன் நனி சைவத்தைப் பின்பற்றுகிறார்? 

” ‘வீகன் டயட்’ எனும் இந்த உணவுப் பழக்கத்தை ‘நனிசைவம்’ எனத் தமிழில் மொழி பெயர்த்தது நான்தான். சிறுவயது முதல் நான் அசைவ உணவுகளைச் சாப்பிடுவதில்லை. அதேவேளை, கடந்த ஓராண்டுக்கு முன்புவரை பால் பொருள்களைச் சாப்பிட்டு வந்தேன். ‘வீகன் டயட்’  உணவுமுறையைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு, பாலுக்காக எப்படியெல்லாம் விலங்குகள் வதைக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொண்டேன். விலங்குகளைக் கொல்லக்கூடாது, சித்ரவதை செய்யக்கூடாது என்கிற ‘அறம்’தான், நான் இந்த உணவுமுறையைப் பின்பற்ற முழுமுதற்காரணம்.

இறைச்சி, பால்பொருள்களால் உடல்பருமன், உயர் ரத்தஅழுத்தம், மாரடைப்பு, சர்க்கரைநோய், பெண்கள் சீக்கிரம் பூப்பெய்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உயிர்களைக் கொல்லாமை, துன்புறுத்தாமை மட்டுமல்ல, தனிப்பட்ட நம் உடல் நலனுக்கும் இந்த உணவுமுறை மிகவும் உகந்தது. நனி சைவத்தைப் பின்பற்றுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

நனி சைவ உணவகம்

நாம் என்னதான் ஆரோக்கியமாக இருந்தாலும், சுற்றுச்சூழல் நன்றாக இருந்தால்தான், நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும். உலக வெப்பமயமாதல், பருவநிலை மாறுபாடுகளால் ஏராளமான பாதிப்புகள் உண்டாகின்றன. பருவமழைக் காலத்தில் மழை பெய்வதே இல்லை. பல நாடுகளில் பனிமலைகள் உருகி கடலில் கலக்கின்றன. இன்னும் பத்து ஆண்டுகளில், நிலைமை மோசமாகிவிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். உலகின் பசுமை வாயு வெளியேற்றத்தில் 51 சதவிகிதம் கால்நடை வளர்ப்பால்தான் நிகழ்கிறது. அதாவது, இறைச்சிகளில் இருந்து வெளியேறும் வாயுக் கழிவுகள்தான், குளோபல் வார்மிங்கில் முக்கியப்பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இறைச்சி, பால் பொருள்களின் தேவை குறையும்போது பண்ணைகளின் எண்ணிக்கை குறையும். இவையனைத்தையும் யோசித்துதான் நான் இந்த உணவுமுறைக்குத் திரும்பினேன். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ஒரு நனிசைவர். உலகளவில் பலர் இந்த உணவு முறையைப் பின்பற்றுகிறார்கள். சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்,  நனிசைவ உணவு முறைக்கு எல்லோரும் மாறும்படி கோரிக்கை வைக்கிறார்கள். பல நாடுகளில் இந்த உணவுமுறைக்கு ஆதரவு அதிகரித்துவருகிறது.

நனி சைவ நாடுகள்

அசைவ உணவுகள், பால் பொருள்களைத் தொடர்ச்சியாகச் சாப்பிடுபவர்கள் திடீரென அதை நிறுத்துவது சற்று சிரமமே. அதற்கு மாற்றாக வேறு சில உணவுப் பொருள்களை நனிசைவத்தினர் அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இறைச்சியைச் சாப்பிட்டால் என்ன சுவை கிடைக்குமோ, அதை அப்படியே தாவரங்களில் கிடைக்குமாறு தயாரித்து விநியோகித்து வருகிறார்கள். அதேபோல், பசும்பாலுக்குப் பதிலாக சோயா, முந்திரியில் பால் தயாரித்து விநியோகித்து வருகிறார்கள். தேவைப்படுபவர்கள் அந்த உணவுகளை வாங்கிச் சாப்பிடலாம்.

விலங்குகள், பறவைகளை நாம் சாப்பிடாவிட்டால் உணவுச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுவிடும். அவை அளவுக்கதிகமாகப் பெருகிவிடும் எனச் சிலர் சொல்கிறார்கள். நாளுக்குநாள் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. தேவைகள் அதிகமாவதால் பண்ணைகளும் பெருகிவருகின்றன. அதனால் நம் பூமிக்குப் பேராபத்து ஏற்படும். ஒருவர் தன் வீட்டில் கோழி, ஆடு போன்றவற்றை வளர்த்துச் சாப்பிட்டால் பெரிய அளவில் பிரச்னை ஏதுமில்லை. ஆனால், பண்ணைகள்தான் நாளுக்குநாள் பெருகிவருகின்றன. அங்கே கோழிகளும் கால்நடைகளும் ஹார்மோன் ஊசிகள் போட்டு வளர்க்கப்படுகின்றன.

நனி சைவ முரை பிறந்தநாள் விழா

ஒரு பக்கம் இறைச்சிக் கழிவுகளால் ஆபத்து என்றால், மறுபுறம் அந்த இறைச்சியைச் சாப்பிடுவதாலும் உடல் நலப் பிரச்னைகள் உண்டாகும். 2050-ம் ஆண்டில் உணவுக்காகப் பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ஐ.நா சபையின் அறிக்கை சொல்கிறது. அதனால், தேவைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் முதலில் ஈடுபட வேண்டும்.

தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது. அதைப் பறித்துச் சாப்பிடுவது மட்டும் சரியா எனச் சிலர் கேட்பார்கள். தாவரங்களுக்கு நரம்பு மண்டலங்கள் இல்லை. அவற்றால் வலியை உணர முடியாது. ஆனால், விலங்குகள் அப்படி அல்ல; வலியை உணரக்கூடியவை அவை. எனவே, இரண்டையும் ஒப்புமைப்படுத்திப் பார்ப்பது சரியல்ல.

சமரனுடன்

யாருடைய உணவுப் பழக்கத்திலும் தலையிடுவது சரியல்ல. அதேநேரம் நாம் என்ன உணவு முறையைப் பின்பற்றலாம் என்கிற உரிமையும், அதனால்  ஏற்படும் நன்மையை மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது. அறம் மட்டுமல்ல அறிவியல் ரீதியாகவும் நனிசைவம் சிறந்தது என நிரூபிக்கப்பட்ட ஒன்று. நான் மட்டுமல்ல, என் மகன் சமரனும் நனிசைவ உணவு முறையைத்தான் பின்பற்றுகிறான்” என்கிறார் உற்சாகமாக.