யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்படவுமில்லை. நிவாரணங்கள் சரியான முறையில் அந்த மக்களை சென்றடையவுமில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களாகவே இருப்பதுடன் நீதிக்காக தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழலில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது முக்கியத்துவமற்றது என யாரும் கருதிவிடக் கூடாது நாட்டின் தற்போதைய நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து மக்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பிரதான மற்றும் முக்கிய பொறுப்பாகக் காணப்படுகிறது.
இந்தச் சூழலில் அவ்வாறு நாட்டை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுவந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் எக்காரணம் கொண்டும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை யாரும் அலட்சியம் செய்துவிட முடியாது. மிக முக்கியமாக யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு இழப்புக்களுடனும் வலியுடனும் வடுக்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே அந்த நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தாமல் இருந்துவிட முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். மிக முக்கியமாக பதவியிலிருக்கின்ற அரசாங்கம் இதுவிடயத்தில் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாட்டின் இக்கட்டான சூழலில் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினரும் பொலிஸாரும் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டியிருந்தார். ஆனால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கருத்து வெளியிட்டிருந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைகள் தாமதிக்காமல் தீர்க்கப்பட வேண்டும் என்ற விடயத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார். அந்தவகையில் தமிழ்த் தேசியப் பிரச்சினை விரைவாகத் தீர்க்கப்பட்டு அந்த மக்களின் அரசியல் தேவைகளை மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வுத் திட்டம் விரைந்து முன்வைக்கப்பட வேண்டும் என்பதுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதனைப் புறக்கணித்தோ அல்லது மறுத்தோ யாரும் செயற்பட முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வது அவசியம்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும் இந்தப் பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவில் எந்தவிடயமும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. விசேடமாக யுத்தம் முடிவடைந்ததும் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக உள்ளகப் பொறிமுறையை ஆராய்ந்து நீதியை நிலைநாட்ட வேண்டிய தேவை காணப்பட்டது. அதேபோன்று அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஆராய்ந்து அதற்கு தீர்வுகாண வேண்டியிருந்தது. முப்பது வருடகால யுத்தத்திற்கு அடிப்படைக் காரணமான தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக் காண வேண்டிய தேவை காணப்பட்டது. காணாமற்போனோரின் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டு அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடித்து உறவினர்களுக்கு வெளிப்படுத்த வேண்டிய தேவை இருந்தது.
அதேபோன்று கணவனை இழந்த மற்றும் குடும்பத் தலைமையைக் கொண்டிருந்த பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவையும் தீர்க்கப்பட வேண்டியிருந்தது. அதுமட்டுமன்றி யுத்தத் தின் போது இழப்புக்களை சந்தித்த மக்களுக்கு இழப்பீடுகளை வழங்க வேண்டியிருந்ததுடன் இனங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் காணப்பட்டது. மேலும் யுத்த காலத்தில் பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.
ஆனால் கடந்த பத்து வருட காலமாக இந்த எந்தவொரு நடவடிக்கையும் சரியாக கையாளப்பட்டு தீர்வுபெற்றுக்கொடுக்கப்பட வில்லை. 2010 ஆம் ஆண்டு கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டு பொதுமக்களின் சாட்சியங்கள் பெறப்பட்டன. அதன் அறிக்கை வெளியிடப்பட்டும் அந்த அறிக்கையின் பரிந்துரைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதன் பின்னர் காணாமற்போனோர் தொடர்பில் ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அந்த ஆணைக்குழு ஊடாகவும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. அதேபோன்று ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் 2012ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு முறையும் இலங்கை தொடர்பில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன. 2014 ஆம் ஆண்டு வரை அவ்வாறு நிறைவேற்றப்பட்ட அனைத்துப் பிரேரணைகளும் அப்போதைய அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டனவே ஒழிய பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பொறிமுறை குறித்து ஆராயப்படவில்லை.
இந்தச் சூழலில் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கியது. அந்த பிரேரணையின் பரிந்துரைகளுக்கு அமைவாக காணாமற்போனோர் குறித்து ஆராயும் அலுவலகமும் இழப்பீடு வழங்கும் அலுவலகமும் அமைக்கப்பட்டன. ஆனால் இதுவரை காணாமற்போனோர் பிரச்சினையும் இழப்பீடு வழங்கும் தேவையும் முழுமையாக தீர்க்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான ஜெனிவா பிரேரணை 2017 ஆம் ஆண்டிலும் 2019 ஆம் ஆண்டிலும் மீள புதுப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. எனினும் இதுவரை அந்தப் பிரேரணை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக காத்திருந்து விரக்தியடைந்த நிலையில் கடந்த சில வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றனர். காணாமற்போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதேபோன்று தம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு கோரியும் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் காணிகளும் இதுவரை முழுமையாக விடுவிக்கப்படாத சூழலே நிலவுகின்றது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களாகவே இருந்து வருகின்றனர். அவர்களின் தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதுடன் அவை தொடர்பில் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதே உண்மையாகும்.
விசேடமாக இந்த மக்களை பொறுத்தவரையில் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு உரிமை உடையவர்கள். இதனை யாரும் மறுக்க முடியாது. தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணப்படுகிறது. அதனை யாரும் புறக்கணிக்க முடியாது. அதேபோன்று தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய உரிமை அந்த மக்களுக்கு காணப்படுகின்றது. அதனையும் யாரும் மறுக்க முடியாது. தற்போதைய இக்கட்டான நிலைமையில் இந்த மக்களின் பிரச்சினைகள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்த்து மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று பத்து வருடங்களாக நீதிக்காக காத்திருக்கும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதும் மிகவும் முக்கியமாகும்.
இங்கு யுத்தத்தின்போது கணவனை இழந்த பெண்கள் இன்று குடும்பத் தலைவிகளாக பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது குடும்பங்களை கொண்டுநடத்த வேண்டிய சூழலில் இருக்கின்றனர். பல்வேறு இன்னல்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டே இந்த மக்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த வேண்டியிருக்கிறது. எனவே இவர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யுத்தம் நடைபெற்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில் வறுமையும் வேலையின்மையும் தலைவிரித்தாடுகின்றன. இங்கு புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு சரியான முதலீட்டுத் திட்டங்கள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
இவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட் மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் மிகவும் பாரதூரமானவையாகும். எனவே இவற்றைத் தீர்த்து வைக்கும் விடயத்தில் யாரும் அலட்சியப் போக்கை கடைப்பிடிக்க முடியாது. பிரச்சினைகளை தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டிருக்க முடியாது. தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வருவதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் வழங்கிய பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். தமது நீண்ட காலப்பிரச்சினைகளுக்கு மற்றும் தமக்கு ஏற்பட்ட அநீதிக்கும் தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே மக்கள் தமது ஆதரவை தற்போதைய அரசாங்கத்திற்கு வழங்கியிருந்தனர். எனினும் மக்களுக்கு தற்போதைய ஆட்சிக் காலத்திலும் ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.
எனவே தொடர்ந்தும் இந்த மக்களின் பிரச்சினைகளை இழுத்தடித்துக் கொண்டிருக்காமல் அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வளவு வேதனையுடனும் துயரங்களுடனும் தமது காலத்தை கடத்திக் கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும். தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது கூடத் தெரியாமலும் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா என்பதும் தெரியாமலும் பாதிக்கப்பட்ட மக்கள் பாரிய துயரத்து டனும் இன்னல்களுடனும் தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டி ருக்கின்றனர். எனவே இந்த நிலைமை தொடர்ந்து நீடிப்பதற்கு இடமளிக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.