மட்டக்களப்பில் கொக்கட்டிச்சோலை காவல் துறை நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய கருணா ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதோடு , மயானத்தில் புதைக்கப்பட்ட சடலத்தை எதிர்வரும் 11ஆம் திகதி தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சி.ஜ.டியினர் தெரிவித்தனர்.
கடந்த 2008 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை காவல் துறை நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த பிரசன்னா என்ற காவல் துறை உத்தியோகத்தர் கடமைமுடிந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவர் காணாமல் போனார்.
இந்நிலையில் கடந்த வருடம் வவுணதீவு இரு காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.ஜ.டி.யினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த 2008 ஆம் ஆண்டு காணாமல் போயுள்ள காவல் துறை உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்டார் என தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறை உத்தியோகத்தாரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கருணா ஆயுதகுழுவின் முன்னாள் உறுப்பினர்களான மகிளன் என்றழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன், மதன், என்றழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன், என்றழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை ஓட்டுமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி, போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் சி.ஜ.டியினர் கைது செய்து அவர்களை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக் கொண்டு செல்லப்பட்டு 3 மாதகாலம் காவல் துறை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டகாவல் துறை உத்தியோகத்தரை கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் புதைக்கப்பட்டதாக சி.ஜ.டியினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சடலத்தை பகுப்பாய்வுக்காக தோண்டி எடுப்பதற்கு சி.ஜ.டி. சப் இன்பொஸ்டர் என். நவரெட்ண மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் வியாழைக்கிழமை அனுமதிகோரியிருந்தார். இதனையடுத்து சடலத்தை எதிர்வரும் 11 திகதி நீதவான் முன்னிலையில் தோண்டி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்ப நீதவான் அனுமதிவழங்கியுள்ளதாக சி.ஐ.டியினர் தெரிவித்தனர்.
Eelamurasu Australia Online News Portal