ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
அபார வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள மோடிக்கு பல்வேறு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்கும் மோடியை சந்திக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பானில் ஜூன் மாதம் 28, 29ம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார். அப்போது அவர் இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்க உள்ள மோடியை சந்திக்கிறார் என தெரிவித்துள்ளது.
தேர்தலில் அபார வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal