சிறிலங்கா அரசிற்கு எதிராகவும் மற்றும் அமைச்சர் ரிசாட் பதீயூதினுக்கு எதிராகவும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரனைகளை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் சூழலுக்கு ஏற்ப ஆராய்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்குமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே சிவஞானம் இவ்வாறு தெரித்துள்ளார்.
இந்நாட்டில் தற்போது இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரனைகள் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் இலங்கை அரசிற்கு எதிராகவும் மற்றும் அரசின் அமைச்சரான ரிசாட் பதியுதினுக்கு எதிராகவுமென இந்த இரண்டு பிரேரனைகள் கொண்டு வரப்பட இருக்கின்றன.
ஆகவே இந்தப் பிரேரனைகளை ஆதரிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் ஆராயந்தே முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதே நேரம் இந்தப் பிரேரனைகள் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டு விவாதத்திற்கு வருகின்ற போது தான் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் அறிவிக்க முடியும். இந்த விடயங்கள் தொடர்பில் நான் சில தலைவர்களுடன் பேசியிருக்கின்றேன்.
இங்கு சூழல்கள் மாறிக் கொண்டிருப்பதால் அந்தச் சுழலுக்கு ஏற்ற வகையில் ஆராய்ந்த முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அதனடிப்படையில் அவசரப்படாமல் கூட்டமைப்பு தனது முடிவுகளை எடுக்கும் என்றார். இதற்காக இந்த அரசாங்கத்தை கூட்டமைப்பு பாதுகாக்கிறது என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும் இந்த நாடாளுமன்றக் காலத்திலே அரசியல் தீர்வு என்பது முன்னெடுக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் மிக மிக குறைவு.நாங்கள் மக்களுக்கு பிழையான தகவல்களைச் சொல்வது சரியல்ல. உண்மையிலையே அதற்கான வாய்ப்புக்கள் குறைவு தான். இந்த நாட்டில் தற்போது தெற்கு உடைந்து நிற்கிறது. அவர்களிடத்தே ஒருமைப்பாடு வரக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனவாதக் கருத்தோடு நிற்கிறார்கள். ஆனபடியால் தீர்வு இப்போது சாத்தியமில்லை என்றார்.
Eelamurasu Australia Online News Portal