2009 – 2019 பத்து ஆண்டுகளாயிற்று. இலங்கையில் தமிழர் பகுதியில் நடந்த யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாயிற்று. 2009 மே மாதம் என்பது ஈழத்தமிழர்களின் வாழ்வில் தாங்கவே முடியாத பெரும் வலியை, துயரத்தை அளித்த காலம். இறுதி யுத்தத்தில் ஐ.நா சபை வழிகாட்டிய போர் முறைகள் அரசுத் தரப்பில் அப்பட்டமாக மீறப்பட்டது பின்னாளில் வெளிச்சத்துக்கு வந்தன. மருத்துவமனை, பள்ளிக்கூடங்களில் வானிலிருந்து குண்டு மழை பொழிந்து, ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். இப்போது அந்த நாள்களை நினைவுகூர்ந்தாலும் ஈழத்தமிழர்களின் அழுகையின்றி முடிவதில்லை. அதிகாரபூர்வமாக 40,000 பேர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் 1.5 லட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதே பலரின் கணிப்பு. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழர்களின் வாழ்வு இயல்பு நிலைக்குத் திரும்ப வில்லை. சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் திடீரென்று இறப்பதும் சகஜமாகிவிட்டது.
இறுதிக்கட்டப்போரில் கொல்லப்பட்டவர்களில் இசைப்பிரியாவும் ஒருவர். இலங்கையின் நெடுந்தீவில் 1981-ம் ஆண்டு, மே 1 அன்று பிறந்தவர். இசைப்பிரியா (இயற்பெயர் சோபனா). கல்லூரிப் படிப்பு யாழ்ப்பாணத்தில். அது இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், வன்னிக்கு குடிமாறுகிறார். அங்குதான் மேல்படிப்பை முடிக்கிறார். விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் சேர்ந்து பணியாற்றுகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கவும் செய்திகளை வாசிப்பவராகப் பணிகளைச் செய்கிறார். அங்குதான் சோபனா எனும் பெயரை இசையருவி என்று வைக்கின்றனர். பின்னாளில் அது இசைப்பிரியா என்று மாறியது. அப்போதிருந்து, இறுதி வரை ஊடகப் பணிகளை மட்டுமே செய்தார், ஆயுதங்களைப் பிரயோகிப்பவர் அல்ல என்று பலரும் சொல்லியுள்ளனர்.
இசைப்பிரியாவோடு பழகிய ஈழத்துக் கவிஞர் தீபச்செல்வன், இசைப்பிரியாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள கேட்டபோது, “விடுதலைப் புலிகளின் தமீழத் தொலைக்காட்சியில் பணியாற்றிய ஊடகப் போராளிதான் இசைப்பிரியா. செய்தி அறிவிப்பது, நிகழ்ச்சிகள் செய்வதுதான் அவரின் வேலை. அங்கு நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அறிமுகம். எனக்கு அவரைப் பார்த்து என்ன ஆச்சர்யமென்றால், பாட்டுப் பாடுவார், நடனம் ஆடுவார், நடிப்பார், வீடியோக்களை எடிட் செய்வார், கேமராவில் படம் பிடிப்பார், பின்னணி குரல் கொடுப்பார், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான பிரதிகளை எழுதுவார், சிறுகதைகள் எழுதுவார்… இப்படி இத்தனை துறைகளில் அதுவும் சிறப்பாகப் பணியாற்ற முடியும் என்று வியப்பாக இருக்கும். எந்தவொரு விஷயத்தையும் தெரியாது என்று சொல்ல மாட்டார். இறுதிக்கால யுத்தத்தின்போது அதிகம் செய்திகளை வாசித்தார்.
துயிலறைக் காவியங்கள் என்றொரு நிகழ்ச்சியை இசைப்பிரியா நடத்தினார். அதில், போரில் உயிரை நீத்த மாவீரர்கள் பற்றியது. மாவீரர்களின் தாய், தந்தை, நண்பர்கள் அவரின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதாக கடித வடிவத்திலான நிகழ்ச்சி. இது வழியே மாவீரர்கள் பற்றிய கதை பாதுகாக்கப்படும் என்று இசைப்பிரியா நினைத்து இதை ஆர்வத்தோடு செய்துவந்தார். நான் அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது பொதுவான விஷயங்கள் கதைப்பார். அடிக்கடி என்னிடம் கேட்பது ஒரு கவிதை கொடுங்க… அதைக் காட்சிப்படுத்த வேண்டும்’ என்பார். நான் வேறு வேலைகளில் இருந்ததால் உடனடியாகக் கொடுக்க முடியவில்லை. சில வாரம் கழித்து கொடுத்ததும் அவரே குரல் கொடுத்துக் காட்சிப்படுத்தினார்.
இசைப்பிரியாவின் மரணம் என்பது எங்களின் ஈழ மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியா, உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்னைப் பொறுத்தவரை இசைப்பிரியா ஒரு குறியீடு. 2009-ல் நடந்த இறுதி யுத்தத்தில் ஈழப்பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்தின் குறியீடுதான் இசைப்பிரியா. நீதியைக் கோரும் குறியீடு” என்றார்.
இசைப்பிரியாவைப் பற்றி கவிஞர் தமிழ்நதி எழுதிய கவிதை…
மறுபடியும் மறுபடியும்…
அவள் மறுபடியும் மறுபடியும்
சேற்றிலிருந்து எழுந்து வருகிறாள்
மறுபடியும் மறுபடியும்
‘நானில்லை நானில்லை’ என்று மறுதலிக்கிறாள்
எல்லாக் கனவிலும் அப்பியிருக்கிறது சேறு
எல்லோர்மீதும்
சுழன்று சுழன்று இறங்குகிறது வெள்ளைத்துணி
திறந்த மார்புகளும் விரிந்த கால்களுமாய்
எல்லோரும் நிர்வாணமாகக் கிடக்கிறோம்
எல்லோர்மீதும்
இழிவின் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருக்கின்றன
குற்றவுணர்வோடு மண்டியிட்டிருக்கும்
எல்லோரது தேகங்களும் அதிர்ந்துகொண்டிருக்கின்றன
நினைவின் முடிவற்ற சாலையில்
அவளும் விரைந்து தொலைவாள்
எல்லோரும் தொலைந்ததுபோல்!
– இசைப்பிரியாவின் நினைவாக