உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் சி.ஐ.டி. விசாரணைகளுக்கு 9 சர்வதேச சிறப்பு விசாரணை நிறுவனங்கள் உதவிக்கு வருவதாகவும், அவர்களது குழுவினர் இங்கிருந்தவாரு இந்த உதவி ஒத்தாசைகளை முன்னெடுப்பதாகவும் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சி.ஐ.டி.யின் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரவி செனவிரத்னவின் கீழ் 15 குழுக்கள் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளுக்கு இந்த 9 வெளிநாட்டு விசாரணை நிறுவங்களும் தொழில்நுட்ப ரீதியாகவும் ஏனைய உதவிகளையும் வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் இவ்வாறு சிறிலங்கா விசாரணையாளர்களுடன் களத்தில் உள்ள வெளிநாட்டு விசாரணை நிறுவனங்களில் எப்.பி.ஐ., ஸ்கொட்லன்ட் யார்ட், அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறை மற்றும் நியூஸிலாந்து ஆகிய சிறப்பு விசாரணையாளர்கள் இணைந்து செயற்படுவதாக காவல்துறை தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்கடடினார்.
இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறை சிறிலங்கா மிக நெருக்கமாக செயற்படுவதாகவும், பயங்கரவாதிகளின் சர்வதேச வலையமைப்பு குறித்த தகவல்களை பறிமாற இன்டர்போலுடன் இணைந்ததாக 24 மணி நேர நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Eelamurasu Australia Online News Portal