தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து ஓராண்டு முடிந்த நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நினைவுகள் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை.
தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்து ஓராண்டு ஆன நிலையில் இன்னும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து போனது அந்த நிகழ்வு. அதற்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையின் வருகை மற்றும் செயல்பாடுகள், அதன் விளைவால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், போராட்டங்கள், போராட்டத்தின் இறுதியாக நிகழ்ந்த துப்பாக்கி சூடு, ஆலை மூடல், மீண்டும் திறக்க முயற்சி என ஒரு பார்வை!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் கடந்து வந்த பாதை:
* 1990: ஆண்டின் ஆரம்ப காலகட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் மறுப்பு.
* 1992: மராட்டிய மாநிலம் ரத்தினகிரியில் ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி!
* 1993: மராட்டியத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக ஸ்டெர்லைட் வெளியேற்றப்பட்டது.
* 1.8.1994: தென் தமிழகத்தின் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு அனுமதி!
* 14.10.1996: மாசுக்கட்டுப்பாடு வாரியம் நிபந்தனையுடன் அனுமதி!
* 23.11.1998: ஐகோர்ட்டு ஆணைப்படி ஆலை மூடல் (பிறகு அபராதம் கட்டி ஆலை திறக்கப்பட்டது)
* 29.3.2013: ஆலையை மூட முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு.
* 31.5.2013: தமிழக அரசின் உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயம் ரத்து செய்து ஆலையை திறக்க அனுமதி.
* 5.2.2018: ஆலையை மூட மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு.
* 12.2.2018: குமாரரெட்டியாபுரத்தில் மக்கள் 100 நாள் போராட்டம் அறிவிப்பு.
* மார்ச் 2018: தூத்துக்குடி முழுவதும் கடை அடைப்பு, போராட்டம்.
* 9.4.2018: மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு.
* 21.5.2018: போராட்டங்களுக்கு தடைவிதித்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு. ஆனால், மக்களுக்கு செய்திகள் சரியாக சென்று சேரவில்லை.
* 22.5.2018: ஏற்கனவே அறிவித்தபடி போராட்டத்தின் 100-வது நாளை குறிக்கும் வண்ணம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் பேரணி. போலீஸ் துப்பாக்கி சூடு, 13 பேர் பலி! 65 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதி.
* 23.5.2018: அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்க தமிழக அரசு உத்தரவு.
* செப்டம்பர் 2018: மீண்டும் விசாரணை ஆணையத்தின் காலகட்டம் 6 மாதங்கள் நீட்டிப்பு. அந்த 6 மாதமும் கடந்த நிலையில் இன்று வரை விசாரணை அறிக்கை வெளிவரவில்லை.
* 28.5.2018: ஸ்டெர்லைட் ஆலையை மூடி மாவட்ட கலெக்டர் சீல் வைத்தார்.
* 9.10.2018: வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு ஆணை.
* டிசம்பர் 2018: தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி.
18.2.2019: தமிழக அரசின் மேல்முறையீட்டில், சுப்ரீம் கோர்ட்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை.
மன்னார் வளைகுடாவில் இருந்து 25 கிலோ மீட்டர் தள்ளி தான் ஆலை நிறுவப்பட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த கட்டுப்பாட்டை மீறி 14 கிலோ மீட்டரில் அதுவும் மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் ஆலை நிறுவப்பட்டது. ஆண்டுக்கு 4 லட்சம் டன் காப்பர் தயாரிக்கும் திறன் கொண்டது ஸ்டெர்லைட் ஆலை.
இதில் ஒரு டன் காப்பர் தயாரிக்கவே 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியேறுகிறது. இதுவரை மிக பிரமாண்டமாக வெளியேறிய கந்தக டை ஆக்சைடு காரணமாக 82 முறை விஷவாயு கசிந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விஷவாயு கசிவின் போது மக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம், மூச்சுத்திணறல், வாந்தி, தலைவலி போன்றவை ஏற்பட்டு உடல்நலன் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையால் நிலம், நீர், காற்று மாசுபடுவதாக மக்கள் தொடர்ச்சியாக போராடினர்.
ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால். இது ஒரு பிரிட்டன் நிறுவனம். இது தமிழகத்தில் செய்துள்ள முதலீடு ரூ.336 கோடி. கடைசியாக 2017-ம் ஆண்டில் மட்டும் இந்த ஆலையின் லாபம் ரூ.1,657 கோடி!
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரம் ஒரு முக்கிய விவாத பொருளானது. அதன் விளைவு என்ன என்பது மே 23-ல் (நாளை) மக்கள் தீர்ப்பில் தெரியவரும்.
ஸ்டெர்லைட் ஆலை, ஒரு டன் தாமிரத்துக்கு 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வாயுவை உமிழ்கிறது. இதுவரை, 82 நச்சு வாயு கசிவு சம்பவங்கள் நடந்துள்ளன.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களின் 100-வது நாளையொட்டி, கடந்த ஆண்டு மே 22-ந் தேதி போராட்டக்காரர்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.
மக்கள் மனதில் நீங்காத வடுவாக அமைந்த இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.