கண்ணீருடன் கடந்த ஒரு மாதம் !

இலங்கையில் மீண்டும் எது இடம்பெறக்கூடாதென மக்கள் நினைத்தார்களோ அது மீண்டும் நடந்து முடிந்து இன்றுடன் ஒரு மாதம் கனத்த மனத்துடனும் கண்ணீருடனும் கடக்கின்றது.

கடந்த 30 வருடகால உள்நாட்டுப்போர் ஓய்ந்து குண்டுச் சத்தங்களுக்கும் ஆயுதங்களுக்கும் ஓய்வுகொடுத்த இலங்கை, பத்து வருட நிறைவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த வேளை, மீண்டும் இலங்கையை அதிரவைத்த மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதல்கள்.

 

 

 

இலங்கை மக்களாலோ ஏன் உலக மக்களாலோ ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இடம்பெற்ற அந்த மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதல் சம்பவங்கள் இலங்கையின் சுதந்திரத்தையும் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் மறுபக்கம் புரட்டிப்போட்டுள்ளது. இலங்கை மக்களின் வாழ்வில் மீண்டும் இரத்தக்கறை படிய அச்சம் தொற்றிக்கொண்டுள்ளது.

 

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதுவும் கத்தோலிக்கர்களுக்கு விசேடமான ஞாயிற்றுக்கிழமை நாள்.  40 நாட்கள் கத்தோலிக்கர்கள் உபவாசம் இருந்து யேசுக் கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து விட்டு உயிர்ப்பு ஞாயிறு திருப்பலியில் கலந்துகொள்வதற்காக அதிகாலை எழுந்து ஆலயங்களுக்கு சென்றனர்.

எதிர்பாராதவிதமாக அன்றைய தினம் காலை 8.30 மணிக்கும் 8.45 மணிக்கும் இடையில் நாடெங்கும் மரண ஓலங்கள். அனைவர் மனத்திலும் பீதிகள் தொற்றிக்கொண்டது.

கொழும்பு, மட்டக்களப்பு, கட்டுவாப்பிட்டிய ஆகிய இடங்களில் தேவாலயங்கள் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் 9 மனித வெடிகுண்டுதாரிகளால் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலும் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய சென்.செபஸ்தியார் ஆலயத்திலும் மட்டக்களப்பு சீயோன் ஆலயத்திலும் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் கொழும்பு சங்கரில்லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், சினமன் கிரான்ட் ஆகிய ஹோட்டல்களிலும் தெஹிவளையிலுள்ள ரிபிகல் இன் இலும் தெமட்டகொடை வீடமைப்புத் திட்டத்திலும் குறித்த தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் பிஞ்சுக்குழந்தைகள் பெரியோர்கள் என 250 க்கும் மேற்பட்டவர்கள் உடல்சிதறிப் பலியாகினர். சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுக்குள்ளாகினர்.

 

இந்த கோரச் சம்பவத்தில் சுமார் 53 சிறுவர், சிறுமிகள் இறந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதைவிட இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட பல வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளின் உயிர்களும் காவுகொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் தலைவர்கள் பலரும் தமது கண்டனங்களையும் அஞ்சலிகளையும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் நிறைவுற்றுள்ள நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கல்விச் செயற்பாடுகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் இனவன்முறைகளும் நாட்டில் ஆங்காங்கே கட்டவிழ்த்துவிடப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதம் கால ஆகின்ற நிலையில், தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டோரில் 69 பேர்  குற்றப்புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.  இதேபோன்று ஏனைய 20 சந்தேக நபர்கள் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் உட்பட 3 அமைப்புக்களை தடை செய்து ஜனாதிபதி வர்த்தமானியை வெளியிட்டதுடன் புர்கா ஆடைக்கும் இலங்கையில் தடைவிதித்து ஜனாதிபதி வர்த்தமானியை வெளியிட்டிருந்தார். இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலுக்கு உலக பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ் அமைப்பு உரிமைகோரியது.

தற்போது நாடு மெதுவாக அமைதியான நிலைமையை நோக்கி நகர்ந்து செல்கின்றது. குறிப்பாக மக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை வழமைபோல் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி மற்றும் 19 ஆம் திகதிகளில் வெசாக் உற்சவத்தை முன்னிட்டு பௌத்த விகாரைகளுக்கும், நகரங்களுக்கும் பெரும்பாலான மக்கள் வருகை தந்திருந்தனர். இதன் மூலம் நாட்டில் அமைதி நிலவுகின்றமை படிப்படியாக உறுதியாகின்றது.

எவ்வாறிருப்பினும் பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் விஷேட தேடுதல்கள், சுற்றிவளைப்புக்கள் மற்றும் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளும் இன்று வழமைக்கு திரும்பியுள்ளன. பாதுகாப்பு தொடர்பில் முப்படையினர் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருகின்ற நிலையில் நாட்டு மக்களாகிய நாமும் பாதுகாப்பிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இலங்கையில் இனியொருபோதும் கனவிலும் இடம்பெறக்கூடதென நினைத்த விடயம் நிகழ்ந்தேறியுள்ளது. இதற்கு ஒவ்வொரு இலங்கைப் பிரஜைகளும் பொறுப்புக்கூற வேண்டும். குறிப்பாக அரசியல்வாதிகள் மாறிமாறி ஒருவர் மீதொருவர் விரல்கள் நீட்டி குற்றம் கண்டுபிடிப்பதைவிடுத்து ஒரே நாடு ஒரே இனம் என்ற ரீதியில் நாட்டுமக்களுக்கு முன்மாதிரியாக செயற்பட வேண்டும்.

அரசியல் தலைமைகள் நாட்டின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி குறித்து சிறந்ததொரு முடிவெடுத்து செயற்பட முன்வர வேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற வழிகோலாது அனைவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

உயர்ப்பு ஞாயிறு தினத்தில் உயிரிழந்த அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யும் அதேவேளை, உறவுகளை இழந்து துயரில் வாடும் ஒவ்வொரு உறவுகளுடனும் இணைந்து எம் கவலைகளை பகிர்ந்து, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு துணைநிற்போம்.

நாமனைவரும் இலங்கையர்கள் என்ற ரீதியில் ஒன்றுபட்டு நாட்டை முன்கொண்டு செல்ல அனைவரும் பாடுபடுவோம் !

– வீ.பிரியதர்சன்