குண்டுகளை தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை தற்கொலை குண்டுதாரிகள் பெற்றது எப்படி?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குண்டுகளை தயாரிப்பதற்கான பயிற்சிகளை எங்கிருந்து பெற்றனர் என்பதை கண்டறிவதற்கான  விசாரணைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் ஐஎஸ் அமைப்பினர் பயன்படுத்தும்  சாத்தானின் தாய் என அழைக்கப்படும் வெடிபொருட்களை பயன்படுத்தியுள்ளமை இலங்கை குண்டுவெடிப்புகளில் வெளிநாட்டவர்களிற்கு தொடர்புள்ளதை  உறுதி செய்துள்ளது என விசாரணை அதிகாரிகள் ஏஎவ்பி செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு மாதம்முடிவடைகின்ற நிலையில் அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.

ஏப்பிரல் 21 தாக்குதலி;ற்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளை உள்ளுர் தீவிரவாதிகள் வெளிநாட்டு நிபுணத்துவத்தின் உதவியுடன் பயன்படுத்தியுள்ளனர் என விசாரணைகளுடன் தொடர்புபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டீஏடீபீ என்ற வகை வெடிபொருட்களையே குண்டுதாக்குதலை மேற்கொண்டவர்கள் பயன்படுத்தியுள்ளனர்,இலகுவில் தயாரிக்ககூடிய இந்த வகை வெடிபொருட்களை ஐஎஸ் அமை;பினர் சாத்தானின் தாய் என குறிப்பிடுகின்றனர்.

டீஏடீபீ வெடிபொருட்களை தயாரிப்பதற்கு தேவையான  இரசாயனப்பொருட்களையும் களைகொல்லிகளையும் குறிப்பிட்ட குழுவினரால் இலகுவாக பெறமுடிந்துள்ளது என விசாரணைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரியொருவர் ஏஎவ்பீக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் குண்டுகளை தயாரிப்பதற்கு தேசிய தஹ்கீத் ஜமாத் அமைப்பினர் வெளிநாட்டு உதவிகளை பெற்றிருக்கவேண்டும் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த குண்டுகளை யூடியுப்பில் பார்த்து தயாரிக்க முடியாது குண்டுகளை தயாரிப்பது குறித்த தொழில்நுட்பத்தை பெறுவதற்காக அவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்களை நேரிற்கு நேர் சந்தித்திருக்கவேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் பயன்படுத்தும் சி- 4ரக வெடிபொருட்களையே உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்கள் பயன்படுத்தினார்கள் என விசாரணையாளர்கள் முதலில் எண்ணியுள்ளனர்.

 

எனினும் சி 4 விடவும் அதிகளவு ஆபத்தான டீஏடீபீயே பயன்படுத்தப்பட்டுள்ளமை தடயவியல் பரிசோதனைகளின் போது தெரியவந்துள்ளது.

விசாரணைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தற்கொலை குண்டுதாரிகள் மற்றும் வெளிநாட்டு சந்தேகநபர்களின்  பயணங்கள் குறித்த தகவல்களை ஆராய்ந்து வருகின்றனர்.

டீஏடீபி ஜெலிக்னைட் மற்றும் சில இரசாயனங்களை கலந்து வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.