தான் முன்வைத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பை பிரதமர் Scott Morrison விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் 46 ஆவது நாடாளுமன்றம் எதிர்வரும் ஜுன் 30 ஆம் திகதிக்கு முன்னர் கூடும்போது வரிக்குறைப்பு தொடர்பாக தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் முன்வைத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அறிவிப்பை பிரதமர் விடுப்பார் என குறிப்பிடப்படுகின்றது.
ஆண்டொன்றுக்கு 126 ஆயிரம் டொலர்கள்வரை வருமானமீட்டுபவர்களுக்கு 1080 டொலர் வரிக்குறைப்பினை வழங்கும் Morrisonனின் திட்டத்தை அவரது நிதியமைச்சர் நடைமுறைப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டம் குறித்த புதிய ஏற்பாடுகளுடன்கூடிய திருத்தம் மற்றும் விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான காப்புறுதித்திட்டம் தொடர்பான சட்டம் ஆகியவற்றையும் உடனடியாக நிறைவேற்றுவதற்கு Morrison அரசு உறுதியளித்துள்ளது.
இதேவேளை, அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமான ஆலோசனைகளில் ஈடுபட்டுவரும் Morrison, புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக இடமளிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை இந்த வார இறுதியில் பதிவியேற்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது ஏற்கனவே கடந்த அரசின்போது இளைப்பாறிச்சென்றவர்களின் இடங்களுக்கு புதியவர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகளில் Morrison தீவிர ஏற்பாடுகளில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
பூர்வீககுடிகள் விவகார அமைச்சு, தொழில்துறை விவகாரம் மற்றும் பொதுச்சேவைகள் அமைச்சுக்கானவர்கள், புதிய பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை நியமிப்பதில் Morrison, கட்சி மட்டத்தில் ஆலோசனைகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.