இலங்கைத்தீவில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பின் உச்சமாக முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய இனப்படுகொலையின் பத்தாவது ஆண்டு நினைவு நிகழ்வும், தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வும் சிட்னியில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை 18 – 05 – 2019 அன்று மாலை 6.30 மணிக்கு தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் நிதர்சன் தலைமையில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை குமார் தம்பிராசா அவர்கள் ஏற்றியதை தொடர்ந்து தேசிய கொடியேற்றல் நிகழ்வு நடைபெற்றது.
அவுஸ்திரேலிய பழங்குடிகளின் தேசியகொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் லிங்கராசா சாந்தன் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய தேசியகொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் ஜெனனி அவர்களும், தமிழீழ தேசிய கொடியை தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சாம்பவி அவர்களும் ஏற்றிவைத்தனர்.
தொடர்ந்து நினைவுச்சுடரை, முள்ளிவாய்க்காலில் தனது உறவுகளை இழந்த சுதாகர் ஏற்றிவைத்ததை தொடர்ந்து, அகவணக்க நிகழ்வு நடைபெற்றது. அதனையடுத்து வருகைதந்த அனைவரும் வரிசையாக வந்து மலர் அஞ்சலி செலுத்தினர்.
மலர் அஞ்சலியை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் அவலத்தை பிரதிபலிக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து தமிழ்ச்செயற்பாட்டாளரும் தொழிலாளர் கட்சியில் நியுசவுத் வேல்ஸ் மாநில தேர்தலில் போட்டியிட்டவருமான துர்க்கா ஓவன் அவர்கள் சிறு நினைவுரை ஆற்றியதுடன், மாநில அவை உறுப்பினர்கள் அனுப்பிய நினைவுநாள் செய்தியை வாசித்தார்.
தொடர்ந்து தொழிலாளர் கட்சியின் புறஸ்பெக்ற் தொகுதி மாநில அவை உறுப்பினர் Dr Hugh McDermott, MP for Prospect அவர்களும் கிறீன் கட்சியின் முன்னாள் செனட்டர் லீ றியானன் அவர்களும் கலந்துகொண்டு தமது நினைவுநாள் உரையை பதிவுசெய்தனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்ச்செயற்பாட்டாளர் அவனிதா செல்வராஜ் ஆங்கிலத்தில் தனதுரையை பதிவு செய்தார். அவர் தனதுரையில், இளையோராகிய நாங்கள் ஒதுங்கி நிற்காமல் எமக்கான வரலாற்றுக் கடமையை உணர்வோடு பொறுப்பெடுத்து செய்யவேண்டும் எனவும் தாயகத்தில் எமது உறவுகளின் விடுதலைக்காக குரல்கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தமிழில் நினைவுரையை பதிவுசெய்த தமிழ்ச்செயற்பாட்டாளர் வித்தி அவர்கள், பத்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னமும் சிறிய விடயங்களுக்காக கூட பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுமென்றே கைதுசெய்யப்படுவதாகவும் அதற்கு கூட குரல் கொடுக்கின்ற நிலையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் செயற்படவில்லை எனவும் அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழர்களின் நீதியான நீதிக்காக அனைவரும் செயற்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அடுத்து தாயகத்தில் நிலவிடுவிப்பிற்காக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கும் போராட்டங்கள்இஅந்த மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக “தசாப்தமும் நாங்களும்” என்ற காணொளித் தொகுப்பு திரையிடப்பட்டது.
இந்நிகழ்வின்போது முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த பாடல்கள் பாடப்பட்டதுடன் இறுதியாக தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு, இரவு 9.00 மணியளவில் தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2019 நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.
இந்நிகழ்வின் இறுதியில், தமிழக ஓவியர் புகழேந்தி அவர்களின்“போரின் முகங்கள்” (Faces of war) என்ற ஓவியபுத்தகமும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.