பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும் ஒத்த செருப்பு படத்தின் அறிமுக விழாவில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், பார்த்திபன் குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று பாராட்டினார்.
பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ் சார்பில் இயக்குநர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. உலக அளவில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் மட்டுமே இடம்பெறும்படியாக 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், ஷங்கர், பாக்யராஜ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் பாக்யராஜ் பேசியதாவது,
இந்த விழாவை பொறுத்தவரை பார்த்திபனை விட எனக்கு தான் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏனென்றால் பார்த்திபன் என் சிஷ்யன். சிஷ்யன் என்பதை தாண்டி அவர் குருவை மிஞ்சிய ஒரு சிஷ்யன். 16 வயதினிலே படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை செய்த போது ஒரு காட்சியில் நான் சொன்ன ஒரு விஷயத்தை ஏற்று, கமல் சார் அப்படியே செய்தார்.
உதவி இயக்குனர்கள் என்பவர்கள் படத்தின் இயக்குனராக தன்னை நினைத்து வேலை செய்ய வேண்டும். கடமைக்கு வேலை செய்யக்கூடாது என்றார்.