நீதித்துறைக்கு அவமதிப்பினை ஏற்படுத்தும் விதமாக கருத்துரைத்த மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் உள்ளிட்டவர்கள் தொடர்பில் நீதித்துறைசார்ந்த அமைச்சர் ஏன் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்று எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த கேள்வியெழுப்பினார்.
இன்று சட்டவாட்சிக் கோட்பாடு நடைமுறையில் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் காணப்படுகின்றது. அரசாங்கத்தின் இயலாமையினை மறைப்பதற்கு சட்டத்தின் மீது பழி சுமத்தப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பயங்கரவாத அமைப்புக்களுடன் நீதிபதிகளுக்கும் தொடர்புண்டு என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி பகிரங்கமாக தெரிவித்துள்ள கருத்து நீதித்துறையினை அவமதிப்பதாகவே காணப்படுகின்றது. நீதிபதிகளுக்கு அவப்பெயரினை ஏற்படுத்தும் விதமாக கருத்துரைத்துள்ளமை சட்டத்தின் பிரகாரம் தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும். ஆனால் இவரது கருத்துக்கு எதிராக நீதியமைச்சர் தலதா அத்துக்கோரல வெறும் மறுப்பு மாத்திரமே தெரிவித்தார். மாறாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும் போதும் கூட அரசியல்வாதிகளின் தலையீடு அனைத்து செயற்பாடுகளிலும் காணப்பட்டுள்ளன. தாக்குதலுடன் தொடர்புடையவர்களாக சந்தேகத்தின் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு இராணுவ தளபதிக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்ததாக குறிப்பிட்டமையின் பின்னணி என்ன? நெருக்கடி காலத்தில் கூட பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமைகளுக்கு விளைவுகளை ஏற்படுத்தியமையும் தண்டனைக்குரிய செயற்பாடாகும். இவ்விடயம் தொடர்பிலும் நீதியமைச்சர் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையில் இருந்து கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டமையின் பின்னணியில் நிச்சயம் அரசியல் தலையீடு காணப்படுகின்றது. அவசரகால சட்டம் நடைமுறையில் இருக்கும்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்படாமல் சாதாரண சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இவ்விடயத்தில் நீதிமன்றத்திற்கும் தவறான விடயங்களே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்விடயம் தொடர்பில் ஏன் நீதியமைச்சர் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. இன்று சாதாரண மக்களுக்கு மாத்திரமே சட்டம் முறையாக செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. பெயரள விலே சட்டவாட்சிக் கோட்பாடு செயற்படுத்தப்படுகின்றது.
அரசாங்கம் ஒரு தரப்பினருக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்து கொண்டு வர முனைகின்ற ஒவ்வொரு விடயங்களும் அரசாங்கத்திற்கே எதிர் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை தேவையற்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ தற்போது குறிப்பிடுவது பயனற்றது.
தீவிரவாதத்தை இல் லாதொழிக்க புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்க வேண்டியதில்லை. 2015.09. 29 ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவே செயற்படுகின்றது. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவையற்றது என்று மக்கள் மத்தியில் குறிப்பிடுவதால் எவ்வித பயனும் ஏற்படாது. எந்த இடத்தில் எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டுமோ அவ்விடத்தில் எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அமைச்சர் சஜித் பிரேமதாஸ இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் பாரிய விளைவுகள் தொடர்பில் உரிய தெளிவில்லாமலேயே சபை முதல்வர் லக் ஷமன் கிரியெல்லவும், ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களும் போலியான கருத்துக் களை குறிப்பிடுகின்றார்கள். புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் உள்ளடக்கியுள்ள ஏற்பாடுகளினால் ஏற்படவுள்ள விளைவுகளையும், நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் சிறப்பியல்புகளையும் ஆளும் தரப்பினருக்கு எடுத்துரைக்க தயார் . அரசாங்கத்தின் இயலாமையினை மூடி மறைக்க சட்டத்தின் மீது குற்றஞ்சாட்டுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.