நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்கால முதலாவது நேரடி அவை அமர்வு!

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது தவணைக்கால முதலாவது நேரடி அவை அமர்வு இன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் அரசியல் சாசனம் வரையப்பட்ட வரலாற்று மையமான (National Constitution Centre) அமெரிக்க அரசியல் சாசன கூடத்தில், தமிழீழத் தேசியக் கொடி பட்டொளிவீச இந்த அமர்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது புலம்பெயர் நாடுகளில் தேர்தல் மூலம் தேர்வாகிய உறுப்பினர்கள், தமிழீழம் நோக்கிய தமது உறுதிப்பாட்டுடன் அரசவை பிரதிநிதிகளாக சத்தியப்பிரமாணம் எடுத்துள்ளனர்.

அரசவைத்தலைவர், உதவி அரசவைத்தலைவர், பிரதமர் ஆகியோரை அரசவை பிரதிநிதிகள் ஜனநாயக முறைப்படி இந்த அமர்வின் போது தேர்வு செய்யப்படுவர்.

இதன்போது மே 17,18,19 ஆகிய நாட்களுக்கு இடம்பெறுகின்ற இந்த அமர்வில் பல்வேறு விடயங்கள் வள அறிஞர் பெருமக்களுடன் விவாதிக்கப்பட்டுள்ளன.

ஈஷ்டர் குண்டு வெடிப்பின் விளைவுகளும் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் எதிர்கொள்ளும் சவாலும்

முள்ளிவாய்க்காலின் பின்னரான பத்து ஆண்டுகளில் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான செயல்வழிப்பாதையின் மதிப்பீடுகள்

நீதியினை வென்றடைவதற்கான புதிய களங்களை உருவாக்குதல்

தமிழர் தலைவிதி தமிழர் கையில், பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்

தமிழீழத் தேசக் கட்டுமானம், ஆகிய தொனிப்பொருட்களில் கலந்தாய்வுக் கூட்டங்கள் இடம்பெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

2009ம் ஆண்டு பெரும் அழிப்பொன்றின் ஊடாக தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்புச் செய்த சிங்கள அரசு, நிறுவப்பட்டிருந்த நடைமுறைத் தமிழீழ அரசினை அழித்திருந்தது.

தமக்கான அரசியல் வெளி இலங்கைத்தீவில் இல்லாத நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எனும் ஜனநாயகப் போராட்ட வடிவத்தினை இலங்கைத்தீவுக்கு வெளியே நிறுவுவதாக தமிழர் தரப்பு 2009 ஜூனில் உலகிற்கு அறிவித்திருந்தது.

தமிழர்களின் போராட்டத்தினை அழித்துவிட்டதான போர் வெற்றி முழக்கமிட்ட மே-18ல் (2010) தோற்றம் பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர்களின் போராட்ட உயிர்ப்பினை உலகிற்கு பறை சாற்றியிருந்தது.

பல்வேறு சவால்களையும், வெற்றிகளையும் எதிர்கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது மூன்றாவது தவணைக்காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.