சிட்னியில் இறந்த பெற்றோருக்கு அருகில் உறங்கிய 3 வயது சிறுமி

சிட்னி, Smithfield இல் உள்ள வீடொன்றில்,உயிரிழந்த தந்தைக்கும் தாய்க்கும் அருகில் 3 வயதுச் சிறுமி உறங்கிக் கொண்டிருந்த சம்பவம், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பங்களாதேஷ் பின்னணி கொண்ட டஸ்மின் பஹார் என்ற பெண்ணும் தேவ் பிள்ளை என்பவரும் கடந்த ஆறு வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், டஸ்மின் பஹார் தனது 3 வயது மகளுடன் சமீபத்தில் தனியாகச் சென்று வேறு வீட்டில் குடியேறினார்.

குடும்ப வன்முறையே தனது பிரிவுக்குக் காரணம் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில் தனது மகளை தேவ் பிள்ளையைச் சந்திப்பதற்காக Smithfieldஇலுள்ள வீட்டிற்கு டஸ்மின் பஹார் அழைத்துச் சென்றிருந்தார்.

இதன்பின்னர் நடந்த ஏதோவொரு சம்பவத்தினால் தம்பதி இருவரும் உயிரிழந்துவிட அவர்களது மகள் தனது பெற்றோருக்கருகில் படுத்து உறங்கிவிட்டாள்.

இந்தநிலையில் குறித்த வீட்டிற்கு வந்த தேவ் பிள்ளையின் உறவினர் ஒருவர் குழந்தையையும் மீட்டு காவல்துறைக்கும் அறிவித்திருந்தார்.

இவர்களில் யாரோ ஒருவர் மற்றவரைக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர்  சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் தேவ் பிள்ளை தனது மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதுடன் டஸ்மின் பஹாரையும் கொலை செய்யப்போவதாக மிரட்டியதால் நிச்சயம் அவர்தான் இந்தக் கொலையைச் செய்துவிட்டு தானும் உயிரிழந்திருக்கலாம் என டஸ்மினின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை எவ்வித ஆபத்துமின்றி மீட்கப்பட்ட குழந்தையை டஸ்மின் பஹாரின் சகோதரி பொறுப்பேற்கவுள்ளார்.