இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற கொடூரமான குண்டுத்தாக்குதல்கள் பயங்கரத்திற்கு எதிரான உலகளாவிய போர் தொடர்பிலான விவாதத்தை மீண்டும் மூள வைத்திருக்கிறது. அந்தத் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அரசு இயக்கம் உரிமை கோரியிருக்கும் நிலையில் சிரியாவிலிருந்த இஸ்லாமிய அரசின் முன்னாள் இராச்சியத்துடன் இலங்கைக் குண்டுதாரிகளுக்கு இருந்த தொடர்புகள் குறித்து உலகம் பூராகவுமுள்ள கல்விமான்களும், அதிகாரிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். குண்டுதாரிகளில் குறைந்தது இருவராவது சிரியாவிற்குச் சென்று வந்தார்களென்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் உலகளாவிய பரிமாணங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தற்போது பல தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கைத் தாக்குதல்கள் பயங்கரவாதம் மீதான உலகளாவிய போரொன்றின் கோட்பாட்டில் பல வெடிப்புக்கள் ஏற்பட்டிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், இது காலவரையில் அந்தப் போரினால் சாதித்திருக்கக்கூடியவை குறித்து பல்வேறு கேள்விகளைக் கிளப்பவும் செய்கின்றன. 2001 செப்டெம்பர் 11 இல் அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் வாஷிங்டன் ஆகிய நகரங்களில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களை அடுத்து அன்றைய ஜனாதிபதி ஜோர்ஜ்.டபிள்யு.புஷ் தான் பயங்கரவாதம் மீதான போரென்ற புதுச்சொல்லைப் புனைந்தவராவார்.
தடுமாற்றமான போர்
முதலாவதாக பயங்கரம் மீதான போரென்று பெயரிடப்பட்ட முதன்முதலான இராணுவ நடவடிக்கையே தடுமாற்றமானதாக அமைந்திருக்கிறது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை முடிவிற்குக் கொண்டு வருவதற்கென முன்னெடுக்கப்பட்ட நிலைபேறான சுதந்திரத்திற்கான நடவடிக்கைக்கு சுமார் 60 நாடுகள் அவற்றின் படைகளை அனுப்பியதுடன், இராணுவ தளபாட ஆதரவையும் வழங்கின. அமெரிக்கா தலைமையிலான அந்த 60 நாடுகள் கூட்டணியின் இராணுவ நடவடிக்கைகள் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரத் தவறிவிட்டன. 2001 டிசம்பரில் தோற்கடிக்கப்பட்ட ஒடுக்குமுறை தலிபான் ஆட்சியின் கையிலேயே ஆப்கானிஸ்தான் மீண்டும் விழுந்துவிடும் சூழ்நிலை தோன்றியிருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகளின் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதும் பாகிஸ்தானில் தங்களது புகலிடங்களிலிருந்து செயற்படும் பயங்கரவாதக் குழுக்கள் எல்லை கடந்து சென்று ஆப்கானிஸ்தானுக்குள் அனர்த்தங்களை விளைவிக்கமாட்டாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.
பயங்கரவாதம் மீதான போரின் பெயரில் அமெரிக்கா தலைமையில் அமைக்கப்பட்ட பல கூட்டணிகளில் ஒன்று மாத்திரமே ஆப்கானிஸ்தானில் போரை நடத்தியது. 2003 ஆம் ஆண்டில் ஈராக்கில் சதாம் ஹுசைனை வீழ்த்துவதற்கு அமைக்கப்பட்ட கூட்டணியில் 46 நாடுகள் இணைந்து கொண்டன. 2011 ஈல் லிபியாவில் கேர்ணல் மும்மர் கடாபியை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்த கூட்டணியில் 19 நாடுகள் அங்கம் வகித்தன.
2011 இல் மேற்காசியாவில் வெடித்த அரபு வசந்தம்” அமெரிக்காவினதும், அதன் நேச நாடுகளினதும் கவனத்தைத் திசை திருப்பிவிட்டது. அதன் விளைவாக அந்த நாடுகள் சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல்-அஸாத்திற்கு எதிரான குழுக்களை வலுப்படுத்த ஆரம்பித்தன. இது இறுதியில் சிரியாவிலும், ஈராக்கிலும் உள்ள பிராந்தியங்களில் இஸ்லாமிய அரசு இயக்கம் அதன் இராச்சியத்தை நிறுவுவதற்கு வழிவகுத்தது. அதனையடுத்து இஸ்லாமிய அரசின் பயங்கரத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு அடுத்த கூட்டணி அமைக்கப்பட்டது.
வருடாந்தம் இடம்பெற்ற உலகளாவிய பயங்கர தாக்குதல்களின் எண்ணிக்கை 2004 ஆம் ஆண்டில் ஆயிரமாக இருந்தது. அந்த எண்ணிக்கை 2014 இல் 17 ஆயிரமாக உயர்ந்தது.
(1970–2018) வரையான நிகழ்வுகள் தொடர்பில் மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தால் பேணப்பட்ட உலகளாவிய பயங்கரவாதம் குறித்த தரவுகளிலிருந்து பெறப்பட்ட புள்ளிவிபரம்) அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளான ஆப்கானிஸ்தான், சிரியா, லிபியா மற்றும் ஈராக் ஆகியவை பயங்கரவாத அச்சுறுத்தலிலிருந்து விடுபட்டவையாக இல்லை என்பதே தெளிவாகின்றது. சிரியாவிற்கும், ஈராக்கிற்கும் இடைப்பட்ட பிராந்தியத்தில் இஸ்லாமிய அரசு நிறுவி வைத்திருந்த இராச்சியம் தோற்கடிக்கப்பட்ட போதிலும் அந்த இயக்கமும், அதன் சார்புக் குழுக்களும் உலகத்தின் புதிய பாகங்களில் இப்பொழுது காணப்படுகின்றன. அந்தப் பட்டியலில் தற்போது இலங்கையும் இடம்பெற்றுள்ளது.
இரண்டாவதாக தனி இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவுவதிலும் பார்க்க பயங்கரவாதத்தின் மீதான இந்தப் போர் இஸ்லாமிய அரசு இயக்கத்திற்கும், அல்-கைதா இயக்கத்திற்குமே கூடுதலாக உதவியிருக்கிறது போல் தெரிகிறது. அதாவது அந்த இயக்கங்களின் உண்மையான ஆற்றல்களுக்குப் பொருத்தமில்லா அளவு பெரியதொரு ஆதிக்கநிலைத் தோற்றப்பாட்டைக் கொடுத்திருக்கிறது. அது உலகளாவிய ரீதியில் முஸ்லிம் இளைஞர்களை அந்த இயக்கங்கள் அணி சேர்க்கவும், தீவிரவாத மயப்படுத்தவும் உதவியதுடன் தங்களது பயங்கரவாதிகளை உலகம் பூராகவும் வைத்திருக்கக்கூடிய நிலை உருவானது. இதனை இஸ்லாமிய அரசு இயக்கத்தின் தலைவர் அண்மையில் வெளியிட்ட வீடியோவில் அவரது உரை மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.
இஸ்லாத்துக்கான போராட்டமல்ல
மூன்றாவதாக இஸ்லாத்துக்கான போராட்டம்” என்ற கருத்துருவாக்கத்தை அவர்கள் கட்டிவளர்த்திருப்பதும் தவறானதே. உலகளாவிய பயங்கரவாதத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். (அதிகளவான உயிரிழப்புக்கள்) 81 பயங்கரவாதத் தாக்குதல்களில் 70 இற்கும் அதிகமானவை இஸ்லாமிய நாடுகளில் அல்லது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளிலேயே நடத்தப்பட்டிருக்கின்றன. 2001 இற்குப் பிறகு பெருமளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்ட மத நிறுவனங்கள் மீதான தாக்குதல்களைப் பொறுத்தவரை பட்டியலில் அதியுயரத்திலிருக்கும் 20 தாக்குதல்களில் 18 தாக்குதல்கள் இஸ்லாமியக் குழுக்களினால் பள்ளிவாசல்கள் மீதே நடத்தப்பட்டிருக்கின்றன.
அதனால் பயங்கரத்திற்கு எதிரான போரென்பது பெரும்பாலும் தனி இஸ்லாமியக் குழுக்களினால் பிரசாரப்படுத்தப்படும் ஒரு கோட்பாடாகவும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான நோக்கத்திற்கான ஏனைய மதங்களைச் சேர்ந்த தீவிரவாதிகளால் பிரசாரப்படுத்தப்படும் கோட்பாடாகவும் தோன்றுகிறது. ஏனைய மதங்களைச் சேர்ந்த தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முனைப்பான உதாரணங்களாக நோர்வேயின் உடோயா தீவில் 2011 இல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அல்லது இவ்வருடம் மார்ச்சில் நியூசிலாந்தின் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைக் கூறலாம். பயங்கரவாதிகளால் பாதிக்கப்படும் நாடுகளின் அரசாங்கங்கள் மேற்கூறப்பட்ட இக்கோட்பாட்டை கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ளக் கூடாது.
உதாரணமாக இலங்கையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் உறுப்பினர்கள் அவர்களின் கொடிய சதித்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கக்கூடியதாக இருந்ததற்குக் காரணம் இந்தியாவினால் வழங்கப்பட்ட புலனாய்வுத் தகவல்களை இலங்கை அரசாங்கம் அலட்சியம் செய்தமையே ஆகும். விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பிறகு இலங்கை அரசாங்கம் பாதுகாப்பு விடயத்தில் சற்றே மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்ததுடன், மறுபுறத்தில் உள்ளுக்குள்ளாக வளர்ந்து வந்த வெடிப்புக்களைக் கவனிக்கத் தவறிவிட்டது. அதன் விளைவாக ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் சூத்திரதாரி என்று சந்தேகிக்கப்படும் மொஹமட் சஹ்ரான் காசீம் கிழக்கு மாகாணத்தின் பள்ளிவாசல்களில் செய்த பிரசங்கங்கள் பற்றிய முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதிலும் கூட, அவரால் தொடர்ந்து செயற்படக் கூடியதாக இருந்திருக்கின்றது. மத்திய கிழக்கில் இஸ்லாமிய அரசு பிராந்தியத்திற்கு 32 இலங்கையர்கள் மாத்திரமே சென்று வந்ததாக நம்பப்படுகின்ற போதிலும், தேசிய தௌஹீத் ஜமாஅத் குண்டுதாரிகள் மீது கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள இலங்கைப் பொலிஸாரும், புலனாய்வுப் பிரிவினரும் தவறிவிட்டனர்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அணுகுமுறைகள்
நான்காவதாக பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் நாடுகளைப் பொறுத்தவரை அவை தங்களது அனுபவங்களைப் பொதுப்படையாக்குவதற்கு முயற்சிப்பதை விடுத்து, தங்களுக்கிடையிலான வேறுபாடுகளிலிருந்து நெருக்கமான படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடியேற்றவாசிகள் இஸ்லாமிய அரசு இயக்கத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது சொற்ப எண்ணிக்கையானோரே சிரியாவிற்குச் சென்றதாக நம்பப்படுகின்றது. இஸ்லாமிய அரசிடம் பயிற்சி பெற்றுவிட்டு திரும்பி வந்தவர்களை தீவிரவாதமயப் போக்கிலிருந்து விடுபடச் செய்வதில் பெருமளவிற்குத் தாங்கள் வெற்றிகண்டிருப்பதாகவும் இந்திய அதிகாரிகள் உரிமை கோருகின்றார்கள். இதற்குக் காரணம் தீவிரவாதமய நீக்க செயற்பாடுகளில் இந்த இஸ்லாமிய அரசு உறுப்பினர்களின் முழுக் குடும்பங்களையும், அயலவர்களையும், உள்ளூர் மௌலவிகளையும் சேர்த்துக் கொண்டமையே ஆகும்.
பங்களாதேஷில் கூட 2016 இல் ஹோலி ஆட்டிஸன் பேக்கரி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு தாய்மார்கள் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டுமெனக் கோரி அரசாங்கம் விளம்பரங்களைச் செய்தது. தீவிரவாத மயப்படுத்தப்பட்ட பயங்கரவாதிகள் ஒரு சமூகத்தின் அங்கம் என்று ஏற்றுக்கொள்ளும் இந்தப் போக்கு பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது மூண்டிருக்கும் விவாதத்திற்கு முற்றிலும் முரணானதாக இருக்கின்றது. இஸ்லாமிய அரசுடன் சேர்ந்து இயங்கிவிட்டு மத்திய கிழக்கிலிருந்து திரும்புகின்றவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் திரும்ப ஏற்றுக்கொள்வதற்கு இந்த ஐரோப்பிய நாடுகள் மறுக்கின்றன.
அதேபோன்றே பல மத்திய ஆசிய அரசுகள் தாடி வளர்ப்பதையும், ஹிஜாப் அணிவதையும் தடை செய்வதன் மூலம் தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கும் அதேவேளை, சீனாவில் சின் ஜியாங் மாகாணத்தில் நடைமுறையில் இருக்கின்ற மீள்போதனை முகாம்கள் மனித உரிமைகள் பற்றிய பல கேள்விகளைக் கிளப்புகின்றன. இந்த அணுகுமுறைகளை வேறெங்காவது பிரயோகிப்பது குறித்துத் தீர்மானிப்பதற்கு முன் அவற்றின் வெற்றி அல்லது தோல்வி குறித்து ஆராய வேண்டும்.
ஐந்தாவதாக பயங்கரம் மீதான போரிலுள்ள முரண்பாடுகளை உலக சமுதாயம் சரியாக அடையாளங்கண்டு கையாள வேண்டும். இருபது வருடங்களாக பயங்கரவாதத்துக்கான பொதுவான வரைவிலக்கணம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் உலகம் இணக்கமொன்றைக் காணத் தவறியிருக்கிறது. இதனால் சர்வதேச பயங்கரவாதம் மீதான விரிவான சாசனமொன்றைக் கொண்டு வருவதற்கு இந்திய அனுசரணையுடன் முன்வைக்கப்பட்ட யோசனை இன்னும் நிறைவேற்றப்படாமல் தடங்கலுக்கு உள்ளாகியிருக்கிறது.பாகிஸ்தானில் ஜாயிஷ்-இ-மொஹம்மட் இயக்கத்தின் தலைவர் மசுத் அஸ்கர் பல வருடங்களாக இடையறாது இந்தியர்களை இலக்குவைத்து வருகின்ற போதிலும்கூட அவரை ஒரு உலக பயங்கரவாதி என்று பிரகடனம் செய்யும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தில் இந்தியாவில் அவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பற்றிக்குறிப்பிடுவது தவிர்க்கப்பட்ட பின்னரே சீனா அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குத் தனது சம்மதத்தை வழங்கியது. இது ஏனென்று உலகம் கேட்க வேண்டும்.இஸ்லாமியப் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவியும், புகலிடமும் வழங்குகின்ற பாகிஸ்தான் மற்றும் சவூதிஅரேபியா போன்ற நாடுகள் இன்னமும் கூட பயங்கரவாதத்திற்கு எதிரான முன்னரங்கு நேச அணிகளாக நடத்தப்படுகின்ற அதேவேளை, உலகின் மிகப்பெரிய பயங்கரவாத அனுசரணை நாடாக ஈரானைப் பட்டியலிடுவதில் அமெரிக்கா ஏன் கவனம் செலுத்துகின்றது என்று உலகம் கேட்க வேண்டும்.அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் கூட்டணியிடம் பெரும் வளங்களும், நிபுணத்துவமும் இருந்தபோதிலும் கூட இலங்கையில் நேரவிருந்த அச்சுறுத்தலை உலகளாவிய புலனாய்வு அமைப்புக்களினால் ஏன் கண்டுகொள்ள முடியாமல் போனது? உலகம் இதுபோன்ற பிரச்சினைகளில் உண்மையில் ஐக்கியப்பட்டு முரண்பாடுகளுக்குத் தீர்வு காணாத பட்சத்தில் பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் பலவீனமானதாக மாத்திரமே தொடரும்.
நன்றி
த இந்து