வடக்கு கிழக்கில் மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடலாம். அவர்களின் உணர்வுகளுக்கும் உரிமைக்கும் மதிப்பளிக்கவேண்டும்.
எனவே நினைவேந்தலை இராணுவம் ஒரு போதும் தடுக்காது என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். எனினும் அவசரகால சட் டம் நடைமுறையில் உள்ளதை கருத்தில் கொண்டு அமைதியாக அனைவரும் செயற்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
இராணுவ வெற்றிதின கொண்டாட்டங்கள் குறித்து இராணுவ தளபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் வடக்கின் நினைவேந்தல் நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு 10 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் சமாதானத்தின் தசாப்த நினைவுதினம் இம்முறையும் கொண்டாடப்படவுள்ளது.எனினும் இப்போது நாட்டில் சற்று அமைதியின்மை நிலவுகின்ற நிலையில் அதுவும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் யுத்த வெற்றியை மக்களுக்கு நினைவுபடுத்த வேண்டும். இந்த யுத்தத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். நாட்டுக்காக உயிர் நீத்த இவர்களை நினைவுபடுத்த வேண்டும்.
ஆகவே தான் மே மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரையில் இராணுவ வெற்றி தினம் மற்றும் நினைவுதின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
யுத்தத்தில் தமிழ் மக்களும் அதிகமாக இறந்துள்ளனர். தமது உறவுகளை உடைமைகளை என பல இழப்புகள் அவர்களுக்கும் ஏற்பட்டுள்ளன.
ஆகவே தமிழ் மக்களின் உறவினர்களுக்கும் அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நினைவஞ்சலி செலுத்துகின்றனர்.இவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை நாம் ஒருபோதும் தடுக்க மாட்டோம்.
வடக்க- கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்களை இழந்தவர்கள் தமது உறவினர்களை நினைவுகூர்வதில் எந்த தவறும் இல்லை.அதில் எந்த தடையும் இல்லை.அது நடத்தப்பட வேண்டும்.
இந்த நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஒன்று இடம்பெற்றது.இதில் கொல்லப்பட்ட அனைவரும் இலங்கை மக்கள்.ஆகவே அவர்களுக்காக பிரார்த்தனைகளை செய்யவும் நினைவுகூரவும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் உள்ளன.
அதனை தடுக்க எவருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.
இன்று நாட்டில் சில அசாதாரண நிலைமைகள் உள்ள காரணத்தினால் அதனையும் சகலரும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவசரகால சட்டம் நடைமுறையில் உள்ளது ஆகவே அதில் மக்கள் அமைதியாக நடந்துகொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுக்கின்றோம்.
வடக்கின் அரசியல் வாதிகள் மக்கள் அனைவரும் அமைதியாக நினைவேந்தல் பகுதிகளில் தமது பிரார்த்தனைகளை செய்துவிட்டு அமைதியாக வீடு திரும்பினால் யாருக்கும் எந்த பிரச்சினையும் வராது என்றார்.