நாடுகடத்தல் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நடேசலிங்கம், ப்ரியா குடும்ப விடயத்தை மீள்பரிசீலனை செய்ய உள்ளதாக அவுஸ்திரேலிய தொழில் கட்சியின் தலைவரான பில் சோட்டன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய பிரதமராக தான் தெரிவானால், உடனடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெல்பனில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம், ப்ரியா குடும்பத்தினர், தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு அந்நாட்டு உயர் நீதிமன்றத்தால் கடந்த தினம் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து குறித்த குடும்பம் விரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
நடேசலிங்கமும், பிரியாவும் புகலிடம் கோரும் நோக்கில் கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் படகு மூலம் தனித்தனியாக அவுஸ்திரேலியாவை சென்றடைந்தனர்.
குயின்ஸ்லாந்தின் பிலோலே பகுதியில் வசித்து வந்த அவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் நடேசலிங்கம் மற்றும் ப்ரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட விசாவும் கடந்த வருட ஆரம்பத்துடன் காலாவதியானது.
இதையடுத்து, குறித்த குடும்பத்தை நாடுகத்துவதற்கு அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
எனினும், அவர்களின் நாடுகடத்தலை தடுப்பதற்கு, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவர்களின் மேன்முறையீட்டு மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், நடேசலிங்கம், ப்ரியா குடும்பத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய தேர்தலுக்கு முன்னதாக நாடுகடத்தக் கூடாது என தொழில்கட்சித் தலைவர் பில் சோட்டன் வலியுறுத்தியுள்ளார்.
பிலோலே வாழ் மக்கள் குறித்த குடும்பத்தினரை தங்களுடன் வைத்திருக்க விரும்பினால், அது நல்ல யோசனை என்று தான் கருதுவதாகவும் பில் சோட்டன் மேலும் தெரிவித்துள்ளார்.