அவுஸ்திரேலியாவில் இதுவரை 17 பேரை பலியெடுத்த நோய்!

அவுஸ்திரேலியாவில் பருவ கால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சலில் (flu) இதுவரை பலர் உ யிரிழந்துள்ளனர்.

தெற்கு அவுஸ்திரேலியாவில் இந்த வருடம் மாத்திரம் 17 பேரை இந்த வைரஸ் பலியெடுத்துள்ளது.

அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தெற்கு அவுஸ்திரேலியாவில் இந்த வைரஸ் காய்ச்சல் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் தெற்கு அவுஸ்திரேலியாவில் இந்தக்காலப்பகுதியில் 1328. ஆனால், இந்த வருடம் இதுவரை 12 ஆயிரத்து 339 பேர் இந்தக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியிருக்கிறது.

தெற்கு அவுஸ்திரேலியாவில் முதியோர் இல்லங்களில் உள்ளவர்கள் மிக அதிக எண்ணிக்கையில் இந்தக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அங்கு நிகழ்ந்த மரணங்களில் 13 மரணங்கள் முதியோர் இல்லங்களிலேயே இடம்பெற்றுள்ளன. இதனையடுத்து, தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள 17 முதியோர் இல்லங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடப்படுவதன் மூலம் இந்தக்காய்ச்சலின் பரவலைத்தடுப்பதற்கு முழு முயற்சிகளை மேற்கொண்டுவரும் மருத்துவ வட்டாரங்கள் இதுவரை சுமார் நான்கரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளதாக கூறியுள்ளன.