விரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ள தமிழ்க் குடும்பம்!

தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மெல்பர்னில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்துவைக்கப்படிருந்த நிலையில் இந்த குடும்பத்தின் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த குடும்பம் விரைவில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் நடேசலிங்கமும் பிரியாவும் தனித்தனியாக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தடைந்தனர்.

இத்தம்பதிக்கு அவுஸ்திரேலியாவில் பிறந்த இரு சிறு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தநிலையில் நடேசலிங்கம் மற்றும் பிரியாவின் புகலிடக்கோரிக்கை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது.

அதேநேரம் இவர்களுக்கு வழங்கப்பட்ட bridging விசாவும் கடந்த வருட ஆரம்பத்துடன் காலாவதியாகிவிட்டது. அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை இறங்கியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இக்குடும்பம் பல காலமாக வாழ்ந்துவந்த குயின்ஸ்லாந்தின் Biloela பகுதியிலிருந்து அவர்களை பலவந்தமாக அழைத்துச்சென்று நாடுகடத்த முற்பட்டனர்.

இதன் போது சட்டநடவடிக்கை காரணமாக அம்முயற்சி இறுதிநேரத்தில் தடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மெல்பன் குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டனர்.

இதையடுத்து நடேசலிங்கம்-பிரியா குடும்பம், நாடுகடத்தப்படக்கூடாதென வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த ஆண்டு ஜுன் 21 அன்று மெல்பன் பெடரல் circuit நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மீண்டும் இக்குடும்பத்தை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய குடிவரவுத்துறை அதற்கான கடிதத்தையும் தீர்ப்பு வெளியான அடுத்தநாளே கையளித்தது.

ஆனால் நீதிமன்றின் தீர்ப்பிற்கெதிராக நடேசலிங்கம்-பிரியா குடும்பம் மேன்முறையீடு செய்திருந்ததால் குறித்த குடும்பம் நாடுகடத்தப்படுவது இரண்டாவது தடவையாகவும் தடுக்கப்பட்டது.

ஆனால் இக்குடும்பத்தின் மேன்முறையீட்டு மனுவை கடந்த டிசம்பர் 21ம் திகதி விசாரித்த பெடரல் நீதிமன்றம் அதனைத் தள்ளுபடி செய்ததுடன் இக்குடும்பத்தை நாடுகடத்துமாறும் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து இறுதி முயற்சியாக உயர்நீதிமன்றில் இக்குடும்பம் மனுத்தாக்கல் செய்திருந்தநிலையில் அதுவும் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க நடேசலிங்கம்-பிரியா குடும்பம் வாழ்ந்துவந்த Biloela பகுதி மக்கள் இக்குடும்பத்தை தமது பகுதியில் தொடர்ந்தும் வாழ அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் பேரணி, கையெழுத்து வேட்டை என பலவகையான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ள போதும், இக்குடும்பத்திற்கு கருணைகாட்ட முடியாது என உள்துறை அமைச்சர் Dutton தொடர்ந்தும் மறுத்துவருகிறார்.

இக்குடும்பத்தை அலுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி நாளை பிற்பகல் மெல்பன் state library முன்பாக பேரணி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.