உள்நாட்டு போர் நிறைவுகண்டு ஒரு தசாப்தத்தை சந்தித்துள்ள இலங்கை மற்றுமொரு காரிருளுக்குள் தள்ளப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு உலகவாழ் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகின்ற முக்கிய பண்டிகையாகும். அன்றைய தினத்தில் சற்றும் எதிர்பார்த்திராத வகையில் முக்கிய மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலை தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த தாக்குதல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது மாத்திரமல்ல நாட்டில் மீண்டும் அச்சசூழலை உருவாக்கியது.
உலகப் பயங்கரவாத அமைப்பாக கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புபட்ட உள்ளூர் தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பின் செயற்பாட்டாளர்கள் தான் இலங்கையில் தொடர் தற்கொலை தாக்குதல்களை மேற்கொண்டனர் என்ற உறுதிப்பட்ட தகவல்கள் வெளிவந்தவுடன் நாடளாவிய ரீதியில் பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் நடவடிக்கைகளை தற்போது வரை முன்னெடுத்து வருகின்றனர்.
இஸ்லாமிய மதசார் அமைப்பு என்பதால் இலங்கையில் பரந்து வாழும் முஸ்லிம் மக்கள் மீது சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் ஒரு நிலைமை ஏற்பட்டது. அத்துடன் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் மற்றும் அங்கு மீட்கப்பட்ட ஆயுதங்கள் என்பன அந்த சமூகத்தின் மீதான ஒரு மாறுபட்ட நிலைப்பாட்டை ஏனைய சமூகத்தினர் கொள்வதற்கு காரணமாகியது. குறிப்பாக தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அதன் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடனான தொடர்புகள் அவர்களின் கருத்துக்கள் ஏனைய மதத்தவர்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் மீதும் ஒரு வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாகவே அமைந்தது.
காத்தான்குடி சமூகத்தைச் சார்ந்த ஒருவராக தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் காணப்பட்டமையானது கிழக்கு மீதான பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம்கள் செறிந்து வாழும் காத்தான்குடியில் தற்போது ஒரு அச்சம் நிறைந்த சூழலே காணப்படுகின்றது. மக்கள் மத்தியில் வழமைக்கு மாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஏனைய முஸ்லிம் மக்களை விட காத்தான்குடி வாழ் முஸ்லிம்கள் அந்த சமூகத்தில் சற்று வேறுபட்டவர்களாக காணப்படுகின்ற னர். இஸ்லாமிய பயன்பாடுகள் மரபுரீதியான இஸ்லாமிய கொள்கைகள் என்பவற்றில் தன்னிறைவாக உள்ள காத்தான்குடி முஸ்லிம்கள் தற்போது ஒரு கலக்கமடைந்தவர்களாக உள்ளனர்.
தீவிரப் போக்குடைய சில அமைப்புக்கள் தொடர்பில் பெரிய பள்ளிவாயலோ அங்கி ருக்கும் அனைத்துப் பள்ளிவாயல்கள் மற் றும் இஸ்லாமிய நிறுவன சம்மேளனமோ கருத்தில் கொள்ளாமையினால் ஒட்டுமொத்த காத்தான்குடி சமூகத்திற்கே களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பு செயற்பட்டுள்ளதாகவே பிரதேச மக்களின் கருத்துக்கள் காணப்படுகின்றன. இதனால் தான் காத்தான்குடியின் உண்மையான நிலைமையை அறிய அங்கு விஜயம் செய்தோம்.
காத்தான்குடி மக்களின் கருத்து
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற சம்பவம் மனித சமூகம் விரும்பாத கொலைச் சம்பவமாக நாம் சந்தித்த புத்திஜீவிகள் குறிப்பிடுகின்றனர். ஒரு பாடசாலை அதிபர் என்ற வகையிலும் காத்தான்குடி முஹ்யித்தீன் மெத்தைப் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் என்ற வகையிலும் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன். எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவமாகும். காத்தான்குடி சமூகத்தை பொறுத்த வரையில் இவ்வாறான பல சம்பவங்களை அனுபவித்த சமூகமாகும். ஆகவே இவ்வாறான தாக்குதல்களின் வலியும் தாக்கத்தையும் அனுபவித்த சமூகம் என்ற வகையில் எவ்விதத்திலும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என எம்.சி.எம்.ஏ. ஷதார் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் செறிவாக வாழும் ஒரு பிரதேசமாகவே காத்தான்குடி காணப்படுகின்றது. அது மாத்திரமல்ல இலங்கைக்கு அப்பால் பல உலக நாடுகளிலும் காத்தான்குடி சமூகம் பரந்து வாழ்கின்றது. எனவே காத்தான்குடியை மையப்படுத்தி ஏதேனும் ஒரு சம்பவம் இடம்பெற்றால் அதன் தாக்கம் பரந்து வாழ்கின்ற காத்தான்குடி மக்களுக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே அங்குள்ள வர்த்தக சமூகத்தினரின் நிலைப்பாடாகும். எனவே தான் கடந்த காலங்களில் ஏற்பட்ட இனப்பிரச்சினை என்றாலும் சரி கலவரங்கள் என்றாலும் சரி காத்தான்குடி சமூகம் மிகவும் நிதானமாக நடந்துகொண்டுள்ளதாகவும் அவர்கள் எமக்கு தெரியப்படுத்தினர்.
காத்தான்குடியின் பார்வையில் சஹ்ரான்
எவ்வாறாயினும் காத்தான்குடியை சேர்ந்த ஒரு சிறு குழு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டதும் அதற்கு சஹ்ரான் என்ற நபர் தலைமை தாங்கியமை காத்தான்குடி சமூகம் அறிந்திராத ஒன்று என்பதும் அங்குள்ள புத்திஜீவிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினரின் ஒருமித்த கருத்தாக காணப்படுகின்றது. ஆனால் சஹ்ரான் காத்தான்குடியில் இருக்கின்ற மத்ரஸா ஒன்றில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காலக்கட்டத்தில் முரண்பாட்டு கருத்துக்களை கொண்டிருந்தமையினால் அவர் இடையில் நீக்கப்பட்டுள்ளார்.
ஆசான்களுக்கு மதிப்பளிக்காது தவறான கருத்துக்களை பரப்பி வந்துள்ளார். ஆசிரியர்கள் வரும் போது மாணவர்கள் எழுந்து மரியாதை செய்ய வேண்டியதில்லை போன்ற முரண்பாடான கருத்துக்களையும் மாணவர்கள் மத்தியில் பரப்பினார். இவ்வாறான முரண்பட்ட கருத்துக்களை கொண்டிருந்தமையினால் காத்தான்குடி பாடசாலைகளில் ஒழுக்கம் சார்ந்த விடயங்களிலும் தாக்கம் செலுத்தியது. அது மாத்திரமன்றி வேறு ஒரு இயக்கத்துடன் இணைந்து தொடர்ச்சியாக தவறான பிரசாரங்களை செய்து வந்தார். அனைத்து முஸ்லிம் தரப்புகளையும் எதிர்த்து செயற்பட்டார். ஆகவே சஹ்ரானின் அனைத்து செயற்பாடுகளுமே சமூகத்துடன் முரண்பட்டதாகவே காணப்பட்டதாகவே கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
அரசியல்வாதிகள் தொடக்கம் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் வரை அனைவரையும் விமர்சித்துள்ளார். காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் நிறுவனங்கள் சம்மேளனம் என்ற அமைப்பு அங்குள்ளது. காத்தான்குடியில் என்ன பிரச்சினை நடந்தாலும் அதனை கையாண்டு இறுதி தீர்மானத்தை இந்த சம்மேளனமே எடுக்கும். சம்மேளனத்திற்கும் கட்டுப்படாத நிலையிலேயே சஹ்ரானின் செயற்பாடுகள் காணப்பட்டுள்ளன.
2 வருடங்களுக்கு முன்பதாக பாடசாலை கட்டடம் ஒன்றிக்கு அடிக்கல் நாட்டு விழா இடம்பெற்ற போது தரம் – 5 மாணவர்களின் கலை நிகழ்ச்சியைக் கடுமையாக விமர்சித்த சஹ்ரான் அமைப்பினர் மனைவியையோ பிள்ளையையோ ஆட விடுவானா”? என்று மோசமாகவும் பகிரங்கமாகவும் விமர்சித்தாக குறிப்பிடுகின்றனர்.
சமூகத்தில் சஹ்ரானின் செயற்பாடுகள் தீவிரமடைந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு மற்றுமொரு தரப்பினருடன் ஏற்பட்ட மோத லின் பின்னர் ஊரை விட்டு சென்றுள்ளார். அதற்கு பின்னர் காத்தான்குடிக்குள் சஹ்ரானின் செயற்பாடுகள் காணப்பட வில்லை என ஒரு தரப்பு மறுதலிக்கின்றது.
சஹ்ரான் ஆளுநர் ஹிஸ்புல்லாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டதாக புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. தேர்தல் காலங்களில் தான் வழங்கும் ஒப்பந்தங்களின் பிரகாரமே அரசியல் தரப்புகள் நடந்துகொள்ள வேண்டும் என்று எழுத்து மூலமாக கோரிக்கையினை சஹ்ரான் விடுத்துள்ளார். மரபுரீதியான இஸ்லாமிய வழிமுறைகளுக்கு முரணாக தீவிரப்போக்குடையவராக சஹ்ரானும் அவரது குழுவும் செயற்பட்டுள்ளனர்.
சஹ்ரானின் வழி நடத்தல்களை பின்பற்ற காத்தான்குடியிலும் ஒரு கூட்டம் இருந்துள்ளது. அவரது பேச்சுக்களை கேட்டு அதில் ஈடுபாடு கொண்ட அந்த கூட்டம் காலப்போக்கில் எண்ணிக்கைகளினால் அதிகரிக்கப்பட்டு வெளி உலகத் தொடர்புகள் வரை விஸ்தரித்துள்ளது. ஆனால் காத்தான்குடி சமூகத்தினருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட மரபு ரீதியான முறுகல்நிலை 2017 ஆம் ஆண்டிற்கு பின்னர் காத்தான்குடியில் சஹ்ரான் குழுவினரால் வெளிப்படையாக செயற்பட முடியா நிலையை உருவாக்கியுள்ளது. ஏதேனும் ஒரு வழியில் தன்னை பெரியவராக காண்பிக்கும் நோக்கிலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்து இத்தகைய செயலை செய்துள்ளார் என்றும் காத்தான்குடி வாசிகள் சிலர் கூறுகின்றனர்.
இஸ்லாத்தை பொறுத்த வரையில் அமைதியான – சாந்தியான மார்க்கமாகும். வன்முறைக்கு இடமில்லை. சௌபான் காலத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை இஸ்லாத்தை பெரிதும் பாதித்துள்ளது. இஸ்லாமிய போர் இடம்பெற்ற காலங்களில் கூட சௌபான் காலத்தில் போரிடக் கூடாது என்று மரபு ரீதியான செயற்பாடு இருந்துள்ளது. அதே போன்று குழந்தைகள், பெண்கள் மற்றும் மத ஸ்தலங்களைத் தாக்க வேண்டும் என்று இஸ்லாத்தில் சொல்லப்படுள்ளதாக பிரசாரம் செய்வதோ -சஹ்ரான் குறிப்பிட்டது போன்று இஸ்லாம் அல்லாதவர்களை கொலை செய்வதன் மூலம் சொர்க்கம் செல்லலாம் என்பதும் வெறும் கற்பனையான கதையாகும்.
ஆகவே இஸ்லாத்திற்கு முரணான விடயத்தை செய்வதற்கு சஹ்ரான் ஏதோவொரு வகையில் தூண்டப்பட்டுள்ளதாகவே குறிப்பிடுகின்றனர். இஸ்லாத்தில் இல்லாத விடயங்களை கூறிக்கொண்டு, அதுதான் இஸ்லாம் என்று இளைஞர்களை தூண்டி இவ்வாறான மோசமான காரியத்தை செயதமையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று காத்தான்குடி மக்கள் கூறுகின்றனர். இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறும் என்று நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரியவில்லை. பாரியதொரு தாக்குதலை செய்துவிட வாய்ப் பில்லை என்று தவறான கணிப்பு இருந்திருக்கலாம் என்பதும் பிரதேசவாசிகளின் கருத்துகளாகவும் கேள்விகளாகவும் காணப்படுகின்றன.
தற்போதைய நிலைமை
ஆனால் சம்பவத்தின் பின்னரான நிலைமை குறித்து அந்த மக்கள் குறிப்பிடும் போது, காத்தான்குடி சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினை பாரியதொன்றென்கின்றனர். முஸ் லிம் பிரதேசங்களில் கூட காத்தான்குடி என்று சொன்னால் சந்தேக கண்கொண்டு பார்க்கும் நிலையில் இது வேதனையான விடயமாகும். வாடகை வீடுகளிலிருந்து கூட வெளியேற்றும் நிலையே காணப்படுகின்றது. இதனால் வேதனைப்படுகின்றோம். வெட்கப்படுகின்றோம் என்கின்றனர்.
சம்பவத்தின் பின்னர் முஸ்லிம்களின் வியாபாரங்கள் பாதித்துள்ளன. இந்த நிலைமை விரைவில் மாறவேண்டும். ஒரு சிறிய குழு வால் செய்த அழிவாக ஏனைய சமூக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு கோரிக்கையினை காத்தான்குடி புத்திஜீவிகள் முன்வைக்கின்றனர்.
காத்தான்குடியில் உள்ள 78 பள்ளிவாயல் கள் மற்றும் 108 இஸ்லாமிய நிறுவனங்கள் உள்ளடங்கும் சம்மேளனத்தில் சஹ்ரானின் இயக்கம் அங்கத்துவம் பெறவில்லை. காத்தான்குடியை சேர்ந்த ஒருசில நபர்கள் சம்ப வத்துடன் தொடர்புபட்டிருக்கிறார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த காத்தான்குடி சமூகத்தையும் சந்தேக கண்கொண்டு பார்க்க வேண்டாம். தனக்கு சார்ந்தவர்களை மூளைச் சலவை செய்து இத்தகைய செயலை செய்துள்ளனர் என்பதே சஹ்ரான் குறித்தும் அவரது தேசிய தௌஹீத் அமைப்பு குறித்தும் காத்தான்குடி மக்களின் மனநிலை அமைந்துள்ளது.
தௌஹீத்
தௌஹீத் என்பது ஏகத்துவம் எனக் குறிப்பிடுகின்றது. இதில் எவ்வாறு அடிப்படைவாதம் உருவாக்கப்படுகின்றது என்பதற்கு யாரிடமும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பதிலில்லை. ஆனால் தௌஹீத் கொள்கையுடையவர்கள் சாதாரண இஸ்லாமிய கட்டமைப்பிலிருந்து விலகி செயற்படுவதனால் முரண்பாடுகள் உருவாகின்றது. இந்த முரண்பாடுகள் இஸ்லாமிய மார்க்க ரீதியான கருத்து முரண்பாடுகளாகும். உதாரணமாக நோன்பு பிறை என்பதிலும் கருத்து முரண்பாடுகள் உள்ளன. சர்வதேச பிறை உள்ளூர் பிறை என பின்பற்றப்படுகின்றது. உலகம் முழுவதும் ஒரே தினத்தில் நோன்பு பிடிக்க வேண்டும் என்ற கருத்தை தௌஹீத் அமைப்பினர் கொண்டிருப்பார்கள். ஆனால் பிறை கண்ட பின்னர் தான் நோன்பு பிடிக்க வேண்டும். பெருநாள் கொண்டாடப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காத்தான்குடி சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து தரப்புகளும் உள்ளது. மற்றுமொரு உதாரணமாக கூட்டு துஹாவை எடுத்துக்கொள்ளலாம். தனித்தனியே இறைவனிடம் கேட்கலாம் என்று தௌஹீத் குழுவினர் கூறுவார்கள். இவ்வாறான முரண்பாடுகளைத் தவிர பாரிய ஒரு வேறுபாட்டிற்குள் தௌஹீத் அமைப்புகள் செல்ல வில்லை. அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை என்பது போல் இஸ்லாமிய மரபுக்குள் இடையில் புகுத்தப்பட்ட விடயங்களை செய்ய முடியாது என்பதே தௌஹீத் அமைப்புகளின் நிலைப்பாடாக உள்ளன.
ஆயுதம் – வாள் – பயிற்சி முகாம்
இந்த முரண்பாடுகளை தவிர்த்து செயற்படுவது குறித்து கலந்தாலோசிக்கும் வகை யில் பல முறை தௌஹீத் அமைப்புக்களை அழைத்துள்ள போதிலும் சஹ்ரான் குழுவி னர் கருத்தில் கொள்ளவில்லை. காத்தான்குடியில் உள்ள ஏனைய சில தௌஹீத் அமைப்புகள் ஒரு நிதானமான போக்கில் செயற்படுகின்ற நிலையில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினர் தீவிரப் போக்குடையவர்களாக செயற்பட்டுள்ளனர். இவ்வாறான தீவிர போ க்கு பல்வேறு சந்தேகங்களை ஆரம்பத்தில் தோற்றுவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற அமைப்புகளுடன் சஹ்ரான் குழுவினருக்கு தொடர்புகள் இருக்குமோ என்ற ஐயப்பாடு ஒரு கட்டத்தில் காணப்பட்டதாக காத்தான்குடியினர் வெளிப்படுத்தினர். அதற்காக ஐ.எஸ் ஐ.எஸ். அமைப்பின் ஒரு மையமாக காத்தான்குடி உள்ளது என்பது முற்றிலும் தவறான கருத்தாகும் என்கின்றனர்.
ஒல்லிக்குளம் பகுதியில் அமையப்பெற்றதாக கூறப்படுகின்ற பயிற்சி முகாம் குறித்து கருத்து வெளியிடுவதில் பெரிதும் மக்கள் விரும்பவில்லை. பலரிடம் கேட்டும் மௌனமே பதிலாகியது. காத்தான்குடி பொலிஸார் குறித்த முகாமின் நிலப்பரப்பு குறித்து கூறுகின்றனரே தவிர அவ்வாறானதொரு முகாம் அங்கு எவ்வாறு இரகசியமாக நடத்தப்பட்டுள்ளது என்பதற்கு பதிலில்லை. குறித்த ஒல்லிக்குளம் முகாம் பகுதியை சேர்ந்துள்ள மக்களும் கருத்துரைப்பதில் மௌனித்து விட்டனர். பிரதான வீதியிலிருந்து வெறும் அரை கிலோமீற்றருக்கு குறைவான தூரத்திலேயே சஹ்ரானின் ஒல்லிக்குளம் பயிற்சி முகாம் காணப்படுகின்றது. பாதுகாப்புத் தரப்பிற்கு எவ்வாறு இந்த விடயம் தெரியாமல் போனது என்பது மர்மமான விடயமாகும். கண்காணிக்கப்பட்டு வந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பினரின் பயிற்சி முகாம் பாதுகாப்பு தரப்பின் கண்களிலிருந்து மறைந்தமை கேள்விக்குரிய விடயமாகும்.
பள்ளிவாயல்களில் கத்திகள் இருக்கலாம். ஆனால் வாள் ஏன் வைத்திருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. தனது பள்ளிவாயலில் கத்திகள் வைத்துள்ளதாக காத்தான்குடி பெரிய பள்ளிவாயலின் தலைவர் குறிப்பிட்டார். ஹஜ்ஜி காலங்களில் குர்பான் கொடுப்பதற்காக கத்திகள் வைத்திருப்போம். ஆனால் 47 வாள் என்பது கொழும்பு – கொம்பனிதெரு பள்ளிவாயலுக்கு தேவையில்லாத விடயமாகும். எந்தவொரு பள்ளிவாயல்களுக்கும் வாள்கள் தேவையில்லை என்பதே அவரது மேலதிக உறுதிப்பாடாக காணப்படுகின்றது.
சாய்ந்தமருது – 9 ஆம் குறிஞ்சி
அதே போன்று சஹ்ரானின் குடும்பத்தினர் தற்கொலை செய்துகொண்ட சாய்ந்தமருது – 9 ஆம் குறிஞ்சி பகுதியில் சுமார் 600 குடும்பங்கள் வாழ்கின்றன. சஹ்ரானின் குடும்பம் வாழ்ந்த நீண்ட வரிசையில் தொடர்வீடுகளை கொண்ட பகுதியில் நடுப்பகுதியில் அமைந் துள்ளது. இதனால் தான் வீட்டிற்குள் தற் கொலை செய்துகொண்ட போது பக்கத்து வீட்டின் படுக்கையறை சுவரும் வெடி த்து சிதறியுள்ளது. 50 ஆயிரம் ரூபா முற்பணத்தில் மாதம் 5 ஆயிரம் வாடகைக்கு குறித்த வீட்டை பெற்றுள்ள சஹ்ரானின் குடும்பம், அப்பகுதி மக்களுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக தெரியவில்லை. வாடகைக்கு சென்று ஒரு மாதத்திற்கும் குறுகிய காலம் என்பதால் அவ்வாறு இருந்திருக்கலாம்.
ஆனால் சஹ்ரானின் அமைப்பினர் குடும் பமாக தற்கொலை குண்டுதாரிகளாகியமை சாதாரண விடயமாக கருதி விட முடியாது. பயங்கரவாத அமைப்பில் தற்கொலை குண் டுதாரிகள் இருப்பது சாதாரண விடயமா கும். சஹ்ரான் தலைமைதாங்கிய தேசிய தௌஹீத் அமைப்பில் தற்கொலை குண்டு தாரிகளாகிய குடும்பத்தினரே மாறியுள்ளனர். தெமட்டகொடை சம்பவம் என்றாலும் சரி சாய்ந்தமருது உள்ளிட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை கவனத்தில் கொண் டால் அனைவருமே அண்ணன் – தம்பி, தந்தை, – மகன், கணவன் -மனைவி மற்றும் மச்சான் என தற்கொலை தாக்குதலில் ஈடு பட்டுள்ளனர்.
இதனால் தான் ஏனைய சஹ்ரான் அமை ப்பினரின் தற்கொலை தாக்குதல்கள் பாது காப்புத் துறைக்கும் அத்துறைசார் நிபுணர் களுக்கும் பல்வேறு வகையிலான சந்தேகங் களுக்கு காரணமாகியுள்ளது. எவ்வாறாயி னும் சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங் கள் கடந்துள்ளன. சிறிய குழுவினரால் மேற் கொள்ளப்பட்ட சம்பவம் என்றாலும் அச்ச சூழலிலிருந்து மக்களால் விடுபட முடியாத நிலையே உள்ளது. இந்தத் தீவிரவாதத் தற் கொலைக் குண்டுதாரிகளின் இலக்கு சாதா ரண பொதுமக்கள் என்பதால் பாதுகாப்பு உறுதிப்பாட்டிற்கான உத்தரவாதம் அவசிய மாகின்றது.
– லியோ நிரோஷ தர்சன்