அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருந்த ரன்வித் கவுர் என்ற கர்ப்பிணி பெண்மணி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய பெண் டிஎன்ஏ சோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Gold Coast பகுதியில் வசித்து வரும் ரன்வித் கவுர் என்ற பெண்மணி கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் திகதி இந்தியா வந்துள்ளார்.
மார்ச் மாதம் 22 ஆம் திகதி மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தார் . இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி பஞ்சாப்பிலுள்ள Bagge Ke Pipal என்ற பகுதியில் தனது கணவரின் வீட்டுக்கு வெளியே நின்று கணவருடன் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த சில மர்மநபர்கள் அவரை கடத்திசென்றுள்ளனர். கடத்தி சென்று 11 நாட்கள் கழித்து இவரது சடலம் மார்ச் 27 ஆம் திகதி கால்வாய் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது.
ரன்வித் கவுரின் கணவருக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும்,பஞ்சாப்பில் ரன்வித் கவுர் கொலை செய்யப்பட்டபோது அந்த பெண்ணும் இந்தியாவில் இருந்ததாகவும், கொலை நடந்தஅடுத்தநாளே அவர் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.
முக்கிய குற்றவாளி என கூறப்படும் கிரண், கொலை செய்யப்பட்ட ரன்வித் கவுரின் கணவரின் காதலி என கூறப்படுகிறது. கணவரின் உத்தரவுப்படி பஞ்சாப்பில் உள்ள சில நபர்களோடு இந்த கொலையை கிரண் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவுஸ்திரேலிய பொலிசார், பஞ்சாப் பொலிசுடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், முக்கிய குற்றவாளி என கருதப்படும் கிரணிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள பொலிசார் கேட்டுக்கொண்டபோது அவர் மறுத்துவிட்டார்.
ஏனெனில், அவுஸ்திரேலியாவில் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான சட்டப்படி குற்றச்சாட்டில் நேரடியாக தொடர்பில் இருக்கிறார் என்று நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டதையடுத்து அனுமதியின் படி டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொண்டாலே தவிர கட்டாயப்படுத்தி டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.