இந்தியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை நிறுவி உள்ளதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2013-ன் இறுதிக்கட்டம் அது. மத்திய கிழக்கு ஆசியாவில், சிரியா அரசுப்படைகளை எதிர்த்து போர் புரிந்த அல்நுஸ்ரா முன்னணி என்கிற அமைப்பும், அல்கொய்தாவின் ஈராக் பிரிவும் ஒன்றிணைந்து ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ என்கிற புதிய அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பு, தெற்கு சிரியாவின் பெரும்பகுதிகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 2014 தொடக்கத்தில் இருந்து ஈராக்கிற்குள் நுழைந்த ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலுஜா, மொசூல் ஆகிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். சுமார் 30 ஆயிரம் வீரர்கள் அந்த இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.
ஆனால் ஈராக், சிரியாவில் இதன் ஆதிக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இவர்கள் உலகம் முழுவதும் தங்கள் அமைப்பை ஏற்படுத்தும் ரகசிய முயற்சிகளில் ஈடுபட்டு வந்தனர்.
சமீபத்தில் நிகழ்ந்த இலங்கை பயங்கரவாதி தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது, இந்தியாவில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு மாநிலத்தையே நிறுவியுள்ளதாகக் கூறியுள்ளனர் ஐ.எஸ். அமைப்பினர். இது இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய கிளைக்கு அரபு பெயர் “ஹிந்த் இன் வாலே” என பெயரிடப்பட்டு உள்ளது. இந்தியாவின் அமாம் நியூஸ் ஏஜென்சி இதனை தெரிவித்துள்ளது. இந்த கூற்றை ஒரு மூத்த ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி நிராகரித்தார்.