தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்பட்ட சஹ்ரான் ஹாஷிமின் மரணத்தை உறுதிப்படுத்துவதற்கு, உடற்கூற்று மற்றும் டீ.என்.ஏ பரிசோதனைகளை மேற்கொண்டு, அறிக்கையை கையளிப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுமதியளித்துள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்பட்ட, உயிர்த்த ஞாயிறு தற்கொலைத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிம், கொழும்பு ஷங்கரில்லா ஹோட்டலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் மரணமடைந்துவிட்டார் என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் ரங்க திஸாநாயக்கவின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
மரணமடைந்த பயங்கரவாத குழுவின் தலைவர் சஹ்ரானின் சகோதரி, மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அந்த சந்தேகநபரினதும், சஹ்ரானினதும் டீ.என்.ஏ-ஐ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குகு அனுமதியளிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் கோரிநின்றனர்.
சிறைச்சாலையில் இருக்கும் சஹ்ரானின் சகோதரியை அம்பாறை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று இரத்த மாதிரியை பெற்று, அதனை அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பி, டீ.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அதன் அறிக்கையை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒப்படைக்குமாறு இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு நீதவான் உத்தரவிட்டார்.
தற்கொலைத் தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் தலையின் பகுதிகள் மற்றும் உடற்பாகங்களில் இரசாயன திரவியங்கள் உள்ளடங்கியுள்ளதா என்பது தொடர்பில் தேடியறிவதற்காக, அதன் பகுதிகளையும் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்து பரிசோதனைக்கு அனுமதியளிக்குமாறு நீதவான் கோரிநின்றார். அதற்கும் நீதவான் அனுமதியளித்தார்.
அதேபோல, குண்டுதாரிகள் போக்குவரத்து செய்ததாகக் கூறப்படும், இதுவரையிலும் கைப்பற்றப்பட்ட ஏழு வாகனங்களிலும் குண்டுகள், வெடிப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும் இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு நீதவான் அனுமதியளித்தார்.
அதேபோல, தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள தெமட்டகொடை மஹவில பூங்காவை வசிப்பிடமாகக் கொண்ட மசாலாப் பொருட்களை இறக்குமதிய செய்தவரான இப்ராஹிம் மொஹமட் என்பவருக்கு, பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு, சர்வதேச ரீதியிலிருந்து நிதி கிடைத்துள்ளனவா என்பது தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இஷானா என்டர்பிரைஸஸ் என்ற நிறுவனத்தின் கணக்காளர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், மேற்படி விவகாரம் தொடர்பில், அவரிடம் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
ஷங்கரில்லா மற்றும் கிங்ஸ்பெரி ஹோட்டல்களில் தாக்குதல்களை நடத்திய இரண்டு தற்கொலைத்தாரிகளுக்கும் அறைகளை ஒருநபரை ஒதுக்கியுள்ளார் என்பது விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது எனத் தெரிவித்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர், குண்டுத்தாக்குதலில் அவரும் மரணமடைந்துவிட்டார் என நீதிமன்றத்துக்கு அறிவித்தனர்.
பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் நீண்ட விசாரணைகளை மேற்கொண்டிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், அதன் முன்னேற்ற அறிக்கையை, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் (06) சமர்ப்பித்தே, மேற்கண்ட விவரங்களை நீதவான் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிம், இந்தியாவிலுள்ள சில நகரங்களுக்குப் பிரயாணம் செய்துள்ளபோது, தமிழ்நாட்டுக்கும் சென்றிருக்கலாம் என்று இலங்கை அதிகாரிகள், இந்திய ஊடகமான த ஹிந்துவுக்குத் தெரிவித்துள்ளனர்.
மன்னாரிலிருந்து கடல்வழியாக தமிழ்நாட்டுக்கு சஹ்ரான் சென்றிருக்கலாம் என்றும் தாக்குதல்களுக்கு டி.ஏ.டி.பி வெடிமருந்துகளே பயன்படுத்தப்பட்டுள்ளன என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளன. சலவை இயந்திர நேரக்கணிப்பு பொறிகள் வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ள அந்த செய்தியில், இணையத்தள வழிகாட்டல்களைப் பயன்படுத்தி இவற்றை உள்ளூரில் குண்டுதாரிகள் தயாரித்திருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவர் இந்தியாவுக்கு விமானத்தின் மூலமாகச் சென்றமைக்கான எந்தவொரு விமானப் பயண பதிவுகளும் அதிகாரிகளினால் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை. அதற்கான குடியேற்ற பதிவுகளும் உறுதிப்படுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஆனால், மன்னாரிலிருந்து, தமிழ்நாட்டுக்கு, கடல் வழியாக அவர் சென்றிருக்கலாம்” என்றும், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், இது குறித்து, இந்தியா, இலங்கை உள்ளிட்ட பிராந்தியங்களைச் சேர்ந்த புலனாய்வுப் பிரிவினர் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலைகுண்டுதாரிகள், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையிலான புலன்விசாரணைகளின் போது, கிழக்கு கடற்கரையோரப்பகுதின் மட்டக்களப்பு மற்றும் மேற்கு கடற்பகுதியிலுள்ள கொழும்பு பகுதிகளிலேயே, இவர்களது ஆதாரங்கள் அதிகமாகப் பெறப்பட்டுள்ளதாகவும் இந்தத் தற்கொலைகுண்டுத்தாரிகளின் பல செயற்பாடுகள், இந்த இரண்டு நகரங்களிலுமே இடம்பெற்றுள்ளன என்றும் தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுள் விசாரணைகளின் பிரகாரம், சஹ்ரான் ஷாசிம், பெங்களூர், காஷ்மீர், கேரளா ஆகிய பகுதிகளுக்கு, 2018ஆம் ஆண்டு இறுதியில் சென்றுள்ளார் என்றும் சக பயங்கரவாதிகள் மற்றும் ஜிகாதிகளுடன் வலையமைப்பை ஏற்படுத்திக்கொள்ளவே இவர் அங்கு சென்றிருக்கலாம் என்றும் லெப்டினன்ட் ஜெனரல் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்குச் சென்றவர்கள் அங்கு என்ன செய்தார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை என்றும் ஆனால், அவர்கள் நிச்சயமாக பாதயாத்திரைக்காகச் சென்றிருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.