அவுஸ்ரேலியாவில் மே 20ம் திகதி புதிய சட்டம்!

காவல் துறையிடம்  சிக்கும் சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரம் அந்த இடத்தில் வைத்தே ரத்துச் செய்யப்படும்வகையில் சட்டமாற்றம் கொண்டுவரப்படவுள்ளது.

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் அதிகமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் போது இந்த நடவடிக்கை பின்பற்றப்படும்.

எதிர்வரும் மே 20ம் திகதி இப்புதிய சட்டத்தின் பிரகாரம் நடைமுறைக்கு வரவுள்ளது.

வாகன ஓட்டி ஒருவரை பரிசோதிக்கும் போது 0.05 என்ற அனுமதிக்கப்பட்ட blood alcohol concentration(BAC) அளவைவிடவும் சற்று அதிகமாக இருந்தால்கூட (low-range drink-drivers blood alcohol concentration of 0.05 to less than 0.08) அவரது சாரதி அனுமதிப்பத்திரம் அந்த இடத்தில் வைத்தே 3 மாதங்களுக்கு ரத்துச் செய்யப்படும் அதேநேரம் ஆகக்குறைந்தது 561 டொலர்கள் அபராதமும் விதிக்கப்படும்.

இதேவேளை L Plate மற்றும் P Plate வாகன ஓட்டிகளுக்கு அனுமதிக்கப்பட்ட blood alcohol concentration அளவு என்று எதுவும் கிடையாது என்பதுடன் இவர்களது BAC பூச்சியமாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று போதைப்பொருள் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டாலும் இதே தண்டனை வழங்கப்படும்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 68 பேர் மதுப்பாவனையுடன் தொடர்புடைய வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ள பின்னணியில் வீதிவிபத்து மரணங்களைத் தடுக்கும் நோக்கில் அம்மாநில அரசு இச்சட்டத்தை அமுல்படுத்துகிறது.

நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் முதன்முறையாக அமுல்படுத்தப்படும் இச்சட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு தெரிவிக்கப்படும் அதேநேரம் இச்சட்டம் ஆஸ்திரேலியா முழுவதும் அமுல்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.