அவுஸ்திரேலிய பிரதமரை முட்டையால் அடித்த பெண்ணுக்கு நீதிபதியின் உத்தரவு!

அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison மீது முட்டையால் தாக்கிய பெண்ணுக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்கள்.

தாக்குதல் நடத்திய 24 வயதான பெண் எதிர்வரும் மே 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகும்படி உத்தரவிட்டுள்ளது.

கடும் நிபந்தனையுடன்கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பிரதமர் Scott Morrison   Albury பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தவேளை, அவருக்கு பின்புறமாக வந்த பெண்மணி அவரது தலையின் பின்புறமாக முட்டையால் தாக்குதல் நடத்தியிருந்தார்.

பிரதமரின் பாதுகாவலர்களால் உடனடியாகவே மடக்கிப்பிடிக்கப்பட்ட குறிப்பிட்ட பெண்மணி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

அவரை சோதனையிட்டபோது அவரது கைப்பையிலிருந்து போதைப்பொருளும் மீட்கப்பட்டது.

முட்டையால் தாக்குதல் நடத்தியமை மற்றும் போதைப் பொருள் வைத்திருந்தமை ஆகியவற்றுக்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ள பிணை நிபந்தனையின்கீழ், பிரதமர் Scott Morrison-க்கு அருகில் போகக்கூடாது என்றும் அவருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட பெண்மணி, நேற்றைய தினம் பிரதமர் Scott Morrison கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார களத்துக்கு வெளியில், நவுறு – மனுஸ் தீவுகளிலுள்ள அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவரவேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்தவர்களில் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.