மாணவர்களின் பாதுகாப்புக்காக என்ன செய்யலாம்?

பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் எழுந்துள்ள அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் தவணைக் காலம் ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில், அவர்களது பெற்றோர் மாத்திரமன்றி, அனைத்துத் தரப்பினரும் எண்ணத் தொடங்கியுள்ளனர்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதலின் போது, சிறு பிள்ளைகள் அறுவரும் கொல்லப்பட்டிருந்தனர். அந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, பயங்கரவாதிகளால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களுக்கு வீடியோக்கள் சிலவும் வெளியிடப்பட்டிருந்தன.

அந்த வீடியோக்களில், தங்களுடைய பிள்ளைகளை அருகில் வைத்துக்கொண்டே, தாம் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குத் தயாராகியிருந்த விடயத்தை, பயங்கரவாதிகள் வெளிப்படுத்தியிருந்தனர். சொன்னதைப்போல, அந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலையும் நடத்திக்கொண்டு உயிரிழந்தனர். கூடவே, ஒன்றுமறியா அந்தப் பச்சிளங் குழந்தைகளையும் பலியெடுத்துக்கொண்டே சென்றனர்.

இவ்வாறிருக்க, தங்களுடைய பிள்ளைகள் பற்றியே கவலைப்படாத பயங்கரவாதிகள், பிறர் பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படுவார்களா? அவ்வாறிருக்க, எங்களுடைய பிள்ளைகளை எவ்வாறான நம்பிக்கையில் நாம் பாடசாலைகளுக்கு அனுப்ப முடியுமென்ற மனக்குமுறலை, பெற்றோர் வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால், அரசாங்கமானது தங்களது பிள்ளைகளின் பாதுகாப்புக்கு விசேட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் கோரி வருகின்றனர்.

இதன்படி, கல்வி அமைச்சானது, மாணவர்களின் பாதுகாவலராக முன்வந்து, அவர்களுடைய பாதுகாப்புக்கான முழுப் பொறுப்பையும், பாடசாலை அதிபர்களிடத்திலும் அவர் சார்ந்த நிர்வாகத்திடமும் ஒப்படைத்து, அதற்கான சுற்றுநிருபத்தையும் வெளியிட்டுள்ளது.

அந்தச் சுற்றுநிருபத்தில், பாடசாலை மாணவர்கள், தங்களுடைய அன்றாட நடவடிக்கைகளில் பெரும்பகுதியை பாடசாலைக் காலத்துக்கெனச் செலவிடுவதால், பாடசாலைக்கு வருகைதரும் ஒவ்வொரு மாணவரதும் பாதுகாப்பும் அவர்கள் தொடர்பான பொறுப்பும், பாடசாலை அதிபர் மற்றும் அவர் சார்ந்த நிர்வாகத்திடம் கையளிக்கப்படுகிறது என்றும் அதுவே, பாடசாலை நிர்வாகத்தின் கடமையும் ஆகுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலைச் சமூகத்தை அறிவுறுத்தல் 

மாணவர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தின் பாதுகாப்பு, ஆபத்தான சந்தர்ப்பங்களில் செயற்பட வேண்டிய முறை, ஆபத்து மற்றும் அச்சுறுத்தலான விடயங்களை இனங்காணுதல் மற்றும் அதைத் தவிர்த்துக்கொள்ளல் போன்ற விடயங்கள் குறித்து அவதானத்தைச் செலுத்தி, அவை தொடர்பில், பாடசாலையின் நிர்வாகப்பிரிவு, பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களுக்கு அறிவுறுத்துதல்.

பாதுகாப்புக் குழுக்களை நியமித்தல்

பாடசாலைக்குள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக, பாதுகாப்புக் குழுவொன்றையும் அது சார்ந்த உப குழுக்களையும் நியமித்து, அவற்றுக்குள், அதிபர், பிரதி அதிபர் உள்ளிட்ட ஆசிரியர் குழாம், பெற்றோர், பழைய மாணவர் குழுக்களின் உறுப்பினர்கள் ஆகியோரைப் பங்குபெறச் செய்தல். இந்தக் குழுக்களின் உறுப்பினர் தொகையானது, பாடசாலை முகாமைத்துவத்தினால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதோடு, தேவைகளைக் கருத்திற்கொண்டு, பாதுகாப்புக் குழுக் கூட்டங்களையும் நடத்த வேண்டும்.

பாதுகாப்புக்கான படிமுறைகள் 

மேற்படி குழுக்களால், பாடசாலையின் பாதுகாப்பு தொடர்பான வேலைத்திட்டமொன்று குறித்துக் கலந்துரையாடப்பட வேண்டுமென்பதோடு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும். இது தொடர்பில், தங்களது பிரதேசப் பொலிஸ் நிலையத்தினால் விசேட பாதுகாப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டி​ருப்பின், அக்குழுவின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடிப்படைக் காரணிகள்

1. பாடசாலை மற்றும் அதைச் சூழவுள்ள பிரதேசத்தைச் சோதனையிட்டு, அச்சுறுத்தல் இல்லையென்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

2. பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தரும்போது, பாடசாலையின் பிரதான வாயில் உட்பட அனைத்து வாயில்கள் உள்ள பகுதிகளிலும், நெருக்கடி நிலைமை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3. பாடசாலைக்குள் நுழைபவர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்துகொள்வதோடு, பயணப் பொதிகள், பாடசாலைப் பொதிகள் மற்றும் ஏனைய அனைத்துப் பொருட்கள், உபகரணங்களையும் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே, அவற்றைப் பாடசாலைக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க வேண்டும்.

4. வகுப்பறை மற்றும் வகுப்புக்குப் பொறுப்பாசிரியரின் மேற்பா​ர்வையின் கீழ், வகுப்பறையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

5. அநாவசியமான முறையில், வகுப்பறையை விட்டு மாணவர்கள் வெளியேறுதல், அநாவசியமாக பாடசாலை வளாகத்துக்குள் சுற்றித்திரிதல் போன்றவற்றைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

6. மாணவர்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளப்படும் பாடசாலைச் செயற்பாடுகள் அல்லது பாடசாலைக்கு வெளியே, மாணவர்களை அழைத்துச் சென்று முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை, முடிந்தளவுக்கு தவிர்த்துக்கொள்ளல் அல்லது, அவ்வாறான சந்தர்ப்பங்களின் போது, பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

7. பாடசாலை இடைவேளை நேரத்தின் போதும் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணையும் காலைநேர ஒன்றுகூடலின் போதும், ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களின் தலைமையில், விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

8. பாடசாலைக்குள் அன்றாடம் பயன்படுத்தப்படும் சிற்றுண்டிச்சாலை, விளையாட்டிடங்கள் மற்றும் மாணவர்கள் சென்றுவரும் ஏனைய இடங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்துவதோடு, அவ்விடங்களுக்கான மாணவர் நடமாட்டங்களைக் குறைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தல்.

9. அதிபர் அல்லது ஆசிரியர்களைச் சந்திப்பதற்கான விசேட தினங்கள் மற்றும் சான்றிதழ்கள் வெளியிடப்படும் தினங்களின் போது, பாடசாலைக்குள் பிரவேசிப்பவர்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படல் வேண்டும்.

10. அவசர நிலைமைகளின் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகப் பிரிவினருக்கு அறிவுறுத்தும் தொலைத்தொடர்பு முறைமையொன்றைப் பின்பற்றுதல்.

11. பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு, மாணவர்கள் தங்களது வீடு திரும்பத் தயாராகும் நேரத்தில், வாயிற்பகுதிகளில் எவ்வித நெருக்கடி நிலைமைகளும் ஏற்படாவண்ணம் பார்த்துக்கொள்ளல் வேண்டும். (இதற்காக,  ஒவ்வொரு வகுப்பும் தனித்தனியே, குறிப்பிட்ட நேர இடைவெளியில் விடுவிக்கப்படல் சிறந்தது)

12. விளையாட்டு அல்லது வேறு நடவடிக்கைகளின் நிமித்தம், பாடசாலை நேரத்துக்குப் பின்னர் மாணவர்கள், பாடசாலைக்குள் நிலைகொள்வார்களாயின், அதற்கு, ஆசிரியர்களின் விசேட கண்காணிப்பு அவசியம்.

13. பாடசாலை வளாகத்துக்குள், பாடசாலை நேரத்துக்குள்ளோ அல்லது அதன் பின்னரோ எவரேனும் நுழைவதற்கான வாய்ப்புகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்தல்.

14. பாடசாலை விளையாட்டு மைதானம், கட்டடங்கள் போன்றவற்றின் பாதுகாப்பு குறித்து, எந்​நேரமும் அவதானத்துடன் இருத்தல்.

15. அவசரத் தேவைகளின் போது அறிவிக்கக்கூடிய தொலை​ (அலை)பேசி இலக்கங்கள் மற்றும் வேறு தகவலளிக்கும் முறைகள் தொடர்பான தொலைத்தொடர்பு வேலைத்திட்டத்தை அமைத்து, அவற்றை, பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் வழங்குதல்.

16. பாடசாலைகளுக்கான பல்வேறு சேவைகளை வழங்கும் நபர்கள், அவர்களது வாகனங்கள், அவர்கள் கொண்டுவரும் பொருட்கள் தொடர்பில், உரிய சோதனைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரே, பாடசாலை வளாகத்துக்குள் பிரவேசிக்க இடமளிக்கப்பட வேண்டும்.

17. பாடசாலை வளாகத்தை முறையாகச் சிரமதானம் செய்து, எந்நேரமும் சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். சேதமடைந்த மற்றும் பயன்படுத்தப்படாத உபகரணங்கள் தொடர்பில், முறையான ​வேலைத்திட்டமொன்று பின்பற்றப்படல் வேண்டும்.

18. பாடசாலை வளாகத்துக்குள்ளான பாதுகாப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக்கிக்கொள்ள, மாணவப் படையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த விடயங்கள், வெறும் ஆலோசனைகள் மாத்திரமே. இவற்றை நடைமுறைப்படுத்தி, பாடசாலையினதும் பாடசாலைச் சமூகத்தினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, இவ்வாறான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகத்திடமே உள்ளது. இதற்கு, பெற்றோரது பங்களிப்பு, அதிகப்படியான பலத்தைக் கொடுப்பதோடு, அவர்களுக்கான பொறுப்பும் அதிகரிக்கப்படுகிறது.

ஏதேனும் அசம்பாவிதம் நடந்தேறுவதற்கு முன்னர், அவ்வாறான அசம்பாவிதங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதே புத்திசாதுரியமாகும்.

பேனை, பென்சில், புத்தகம், இறப்பர் பந்து போன்ற வடிவங்களிலும், ஆபத்து நெருங்கலாம். அதனால், தங்களுடைய பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து, அவர்களது பெற்றோரே அதிக அவதானம் செலுத்த வேண்டும். அடுத்தகட்டமாகத் தான், அதற்கான பொறுப்பு, ​பாடசாலைக்கும், அதிபரிடத்திலும், நிர்வாகத்திடமும் கையளிக்கப்படுகிறது. அது மாத்திரமன்றி, பிள்ளைகளுக்கு வெளியிடங்களிலிருந்து கிடைக்கும் உணவு, நீர் போன்ற விடயங்கள் குறித்தும், அவதானம் செலுத்தப்படல் வேண்டும்.

அனைத்து மாணவர்களிடத்திலும், தங்களுடைய பெற்றோர், ஆசிரியர்களின் அலைபேசி இலக்கங்கள் காணப்பட வேண்டும். அந்த இலக்கங்களை, தம்முடைய பிள்ளை அதிகமாகப் பயன்படுத்தும் பொருளிலோ அல்லது வழியில் அல்லது, எவரேனும் அவசர நேரத்தில் அழைப்பை மேற்கொண்டு, பிள்ளை தொடர்பில் தகவல் அளிக்கக்கூடிய வகையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடசாலை அதிபர் அல்லது பாதுகாப்பு தொடர்பான வேறு ஆசிரியருக்கு, 24 மணிநேரமும் அழைப்பை ஏற்படுத்தக்கூடிய இலக்கமொன்றும், மாணவரிடத்தில் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த இலக்கத்தை, பாடசாலை நுழைவாயிலில் காட்சிப்படுத்தி வைப்பது சிறந்தது.

தமது பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்தும் அதேபோன்று, ஏனைய பிள்ளைகளது பாதுகாப்பு குறித்தும் பெரியவர்கள் சிந்திக்கவில்லையாயின், அது, மனிதப் படுகொலைக்கு வழங்கும் மாபெரும் ஒத்துழைப்பாகும்.

ஆபத்தான சந்தர்ப்பத்தில் ‘புத்திசாதுர்யமாக நடந்துகொள்ளுங்கள்’

நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையின் போது, அல்லது, அச்சுறுத்தலான சந்தர்ப்பங்களின் போது, பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. அவ்வாறான சந்தர்ப்பங்களின் போது, புத்திசாதுர்யமாக நடந்துகொள்வதே, இனியும் ஏற்படக்கூடிய ஆபத்துகளிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ள உதவும்.

அவ்வாறான ஆபத்துமிக்க சந்தர்ப்பங்களின் போது நடந்துகொள்ள வேண்டிய சில நடைமுறைகள் பின்வருமாறு,

தமக்குப் பாதுகாப்பு இல்லையென்று உணர்ந்தால், உடனடியாக அந்த இடத்தைவிட்டுச் சென்றுவிடுங்கள். காரணம், இரண்டாவது, மூன்றாவதெனவும் குண்டுகள் வெடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

குண்டுவெடிப்புச் சம்பவங்களின் போது, நீங்கள் ஏதேனும் உயர்ந்த கட்டடத்துக்குள் இருப்பீர்களேயானால், மின்னுயர்த்தியைப் (லிஃப்ட்) பயன்படுத்தாது, படிக்கட்டுகளைப் பயன்படுத்தி, கட்டடத்தை விட்டு இறங்கி, பாதுகாப்பான இடத்தை நோக்கி நகருங்கள்.

வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடங்கள், கைவிடப்பட்ட கட்டடங்கள் போன்றவற்றை, பாதுகாப்புக்கான இடங்களாகத் தெரிவுசெய்யாதீர்கள்.

பாதுகாப்பான இடத்துக்கு வந்​துவிட்டோம் என்று உணர்ந்தீர்களானால், உடனடியாக உரிய பிரிவுகளுக்கு (பொலிஸ், இராணுவம், அம்பியூலன்ஸ் சேவை) அழைப்பை ஏற்படுத்தி, அவர்களை அறிவுறுத்துங்கள். எந்​தவொரு சந்தர்ப்பத்திலும் உங்களிடம், தீயணைப்புப் பிரிவு, வைத்தியசாலை இலக்கங்கள், பொலிஸ் இலக்கங்கள் என்பன, கட்டாயமாகக் காணப்படல் வேண்டும். அவ்விலக்கங்களை, உங்களது அலைபேசிகளிலும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

உரிய தரப்புக்கு அழைப்பை ​ஏற்படுத்தும் போது, சம்பவம் இடம்பெற்ற இடம், ஆபத்தின் தன்மை போன்றவற்றை, சிறந்த பிரஜை என்ற அடிப்படையில், தெளிவாக விளக்குங்கள்.

உங்களுக்கும் ஏதேனும் ஆபத்து நேர்ந்திருந்தால், அது தொடர்பிலும் அறிவியுங்கள்.

நிறுவன ரீதியில், வீட்டு உறுப்பினர்கள் என்ற ரீதியில், பொதுமக்கள் என்ற ரீதியில், தாம் இருக்கும் இடத்தின் பாதுகாப்பு தொடர்பில், அவதானமாக இருப்பது, தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அத்தியாவசியமாகும்.

வீட்டுக்குள் அல்லது நிறுவனத்துக்குள் ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், மறைந்திருக்கக்கூடிய பாதுகாப்பான இடம் குறித்தும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறக்கூடிய இடம் குறித்தும், வெளியேறக்கூடிய முறைமை குறித்தும் சிந்தித்து, அதற்கேற்ற ஏற்பாடுகளைச் செய்து வைத்திருப்பது கட்டாயமாகும்.