தேசியத்தலைவர்பிரபாகரனின் பிறந்த தினம் : சிவாஜிலிங்கத்துக்கு எதிராக வழக்குப் பதிவு

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடியமை மற்றும் விடுதலை புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் மாகாணசபை உறுப்பினா் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 26 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனின் பிறந்த நாளில் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதற்கு சிவாஜிலிங்கம் முயற்சித்திருந்தாா். எனினும் அப்போது காவல் துறை  அதனை தடுத்திருந்ததுடன், வழக்கு பதிவு செய்வோம் என  கூறியிருந்தனா்.

இந்த சம்பவம் நடைபெற்று 4 மாதங்கள் கடந்திருக்கும் நிலையில் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம், பதாகைள் மற்றும் பிறந்தநாள் கொண்டாடுவதற்கான கேக் ஆகியன வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கான அழைப்பாணையை கடந்த  செவ்வாய்க்கிழமை  இரவு 9 மணியளவில் வீதியால் சென்று கொண்டிருந்த சிவாஜிலிங்கத்தை வழிமறித்த காவல் துறையினர் வழங்கியுள்ளனா்.

இந்த அழைப்பாணையின் பிரகாரம் இம்மாதம் 31 ஆம் திகதி சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவா் கோ.கருணானந்தராசா, மற்றும் நகரசபை உறுப்பினா் பொ.சிவஞானசுந்தரம் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும்.