சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹீம் இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான, குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இடங்களில் ஒன்றான வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையில் சேவையாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஊழியர்கள் 9 பேருக்கு பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் காவல் துறை தலைமையகத்தின் எஸ்.ஐ.யூ. எனப்படும் விஷேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த ஒன்பது பேரும் வெல்லம்பிட்டி காவல் துறை ஊடாக மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் போது ஏற்பட்ட தவறுகள் அல்லது சரியான முறையில் விடயங்களை சமர்ப்பிக்காமை அல்லது அசமந்தப் போக்கு காரணமாக பிணையில் விடுவிக்கப்பட்டனரா என விஷேட விசாரணைப் பிரிவின் விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் காவல் துறை அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
குறித்த ஒன்பது பேருக்கும் பிணை வழங்கப்பட்டமை தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள
தகவல்களை மையப்படுத்தியே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலை தொடர்ந்து, சினமன் கிராண்ட் ஹோட்டலில் தாக்குதல் நடத்திய இன்சாப் அஹமட்டுக்கு சொந்தமான வெல்லம்பிட்டியில் உள்ள செப்பு தொழிற்சாலை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அங்கிருந்த 9 பேர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதிவான் முன் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த 6 ஆம் திகதி அவ்வழக்கு மீள விசாரணைக்கு வந்தது. அப்போது சந்தேக நபர்கள் 9 பேரும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல கொழும்பு மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே அனுமதி அளித்தார். இந்நிலையிலேயே எவ்வாறு சந்தேக நபர்களுக்கு பிணை கிடைத்தது என விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Eelamurasu Australia Online News Portal