இலங்கை அணிக்கெதிரான கடைசி போட்டியில் அவுஸ்ரேலியா வெற்றி

இலங்கை அணிக்கெதிரான கடைசி போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 4-1 எனக் கைப்பற்றியது. வார்னர் சதம் அடித்து அசத்தினார்.

இலங்கை – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பல்லேகெலேயில் இன்று நடைபெற்றது. இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதனால் விக்கெட் கீப்பர் சண்டிமால் கப்டன் பதவியை ஏற்றார்.

டாஸ் வென்ற சண்டிமால் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் தனஞ்செயா டி சில்வா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் ஸ்டாக், ஹாஸ்டிங் மற்றும் போலந்து ஆகியோரின் வேகத்தை சமாளித்து ரன்கள் சேர்த்தனர்.

இருவரும் முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர். 13.5 ஓவரில் 73 ரன்கள் எடுத்திருக்கும்போது இலங்கை அணி முதல் விக்கெட்டை இழந்தது. டி சில்வா 47 பந்தில் 34 ரன்கள் சேர்த்தார். அடுத்து குசால் மெண்டிஸ் களம் இறங்கினார்கள்.

குணதிலகா 39 ரன்களும், மெண்டிஸ் 33 ரன்களும் சேர்த்து ஆட்டம் இழந்தனர். அதன்பன் வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி இலங்கை அணி 40.2 ஓவர்களிலேயே 195 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அவுஸ்ரேலியா அணி சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட்டும், சம்பா மற்றும் ஹெட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியாவின் கப்டன் வார்னர், விக்கெட் கீப்பர் வடே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வடே 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கவாஜா 6 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் பெய்லி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. பெய்லி 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

ஆனால், வார்னர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். சதம் அடித்த அவர் 106 ரன்களில் ஆட்டம் இழந்தார். வார்னர் அவுட்டானாலும், அவுஸ்ரேலியா 43 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்ரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 4-1 எனக் கைப்பற்றியுள்ளது.