தற்கொலை தாக்குதலின் போது உயிரிழந்த டென்மார்க் கோடீஸ்வரரின் 3 பிள்ளைகளது இறுதி கிரியைகள்!

கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது உயிரிழந்த, டென்மார்க்கைச் சேர்ந்த அன்டர்ஸ் பொவ்ல்சன் எனும் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகளதும் இறுதிக் கிரியைகள், நேற்று முன்தினம் சனிக்கிழமை (04), டென்மார்க்கின் ஆருஷ் (Aarhus) மாகாணத்தில் இடம்பெற்றது.

குறித்த குண்டுத் தாக்குதலின் போது, மேற்படி கோடீஸ்வரரின் மூத்த இரு பெண் பிள்ளைகளும் நான்காவது மகனுமே உயிரிழந்தனர். சம்பவத்தில், கோடீஸ்வரரும் அவரது மனைவியும், மூன்றாவது மகளும் உயிர்த் தப்பினர்.

குண்டுத் தாக்குதலில் உயிரிந்த கோடீஸ்வரரது இரு பெண் பிள்ளைகளதும் உடல்கள், அடையாளம் காணப்படும் வகையில் இருந்துள்ள போதிலும், மகனின் உடலை அடையாளங்காண முடியாதளவுக்கு சிதைவடைந்துக் காணப்பட்டதாகவும் அந்த உடல், டீ.என்.ஏ பரிசோதனை மூலமே கண்டறியப்பட்டதாகவும், இதற்கான நடவடிக்கைகள், டென்மார்க் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில், அதிகளவு காணிகளுக்குச் சொந்தமான டென்மார்க்கைச் சேர்ந்த கோடீஸ்வரரான அன்டர்ஸ் ஹொல்ஷ் பொவ்ல்சன், தன்னுடைய மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுடன், சுற்றுலாப் பயணத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த போதே, இந்த விபத்தை எதிர்நோக்கினர்.

தங்காலையிலிருந்து திரும்பி, ஷங்கிரி-லா ஹோட்டலில் தங்கியிருந்த இவர்கள், சம்பவ தினத்தன்றே நாடு திரும்புவதற்கான ​ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற போது, பொவ்ல்சனின் மனைவியும் இளைய மகளும், நீச்சல் தடாகத்தில் குளித்துக்கொண்டு இருந்துள்ளனர். ஏனைய இரு மகள்களும் மகனும், தமது தந்தையுடன் ஹோட்டலுக்குள் சென்றிருந்த போதே, முதலாவது குண்டு வெடித்துள்ளது. இருப்பினும், இதில் உயிர் தப்பியுள்ள இவர்கள், அந்த சம்பவத்திலிருந்து காத்துக்கொள்வதற்காக, மின்னுயர்த்திக்கு (லிப்ட்) அருகில் சென்றுள்ளனர்.

இருப்பினும், அது ​அப்போது செயலிழந்த காரணத்தால், அவ்விடத்திலேயே தன்னுடைய மூன்று பி​ள்ளைகளையும் நிறுத்திவிட்டு, தன்னுடைய மனைவி மற்றும் இளைய மகளைத் தேடுவதற்காக, பொவ்ல்சன் சென்றுள்ளார். இதற்கிடையிலேயே, இரண்டாவது குண்டு வெடித்துள்ளது. இதன்போதே, அந்த மூன்று பிள்ளைகளும், அதில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.