அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற நாற்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று அவுஸ்ரேலியா ஏ அணியை 57 ரன்களில் வீழ்த்தி மணீஷ் பாண்டே தலைமை இந்தியா ஏ அணி கோப்பையை வென்றது.
இதன் மூலம் தொடர்ச்சியாக 3-வது முறையாக கோப்பையை வென்ற்து இந்தியா ஏ அணி.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய அவுஸ்ரேலியா ஏ அணி 209 ரன்களுக்குச் சுருண்டது.
இந்தியா ஏ ஸ்பின்னர்கள் யஜுவேந்திர சாஹல் (4), கருண் நாயர் (2), அக்சர் படேல் (2) ஆகியோர் தங்களிடையே 8 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக தொடக்க வீரர் மந்தீப் சிங் 108 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 95 ரன்களையும் மணீஷ் பாண்டே நிதானமாக ஆடி 61 ரன்களையும் எடுக்க, ஸ்ரேயஸ் ஐயர் 41 ரன்களையும் கேதர் ஜாதவ் 25 ரன்களையும், அக்சர் படேல் 22 ரன்களையும் சேர்க்க, வைடுகள், இதரவகைகளில் 21 ரன்கள் சேர இந்தியா ஏ 266 ரன்களை எட்டியது.
தொடர்ந்து ஆடிய அவுஸ்ரேலியா ஏ அணி 6.4 ஓவர்களில் 31 ரன்கள் என்ற நிதானத் தொடக்கத்தைக் கண்டது. அப்போது பேட்டர்சன் 19 ரன்களில் தவல் குல்கர்னி பந்தில் பவுல்டு ஆனார். மேடின்சன், பாங்க்ராப்ட் இணைந்து அரைசதக் கூட்டணி அமைத்தனர். 19 ஓவர்களில் 82 என்ற நிலையில் பேங்க்ராப்ட் 34 ரன்களில் நாயரிடம் பவுல்டு ஆனார். மேடின்சனையும் உடனேயே கருண் நாயர் வீழ்த்தினார்.
91/3 என்ற நிலையில் கேப்டன் ஹாண்ட்ஸ்கோம்ப் (43), ராஸ் (34) ஆகியோர் 11 ஓவர்களில் 77 ரன்களைச் சேர்த்தனர், இந்த நிலையில் ஆஸ்திரேலியா வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பது போல்தான் தெரிந்தது. ராஸை குல்கர்னி வீழ்த்த, ஹாண்ட்ஸ்கோம்பை அக்சர் படேல் வீழ்த்தினார்.
உடனடியாக சாஹல் புகுந்தார், 183/5 என்ற நிலையிலிருந்து ஆஸ்திரேலியா ஏ 45-வது ஓவரில் 209 ரன்களுக்குச் சுருண்டது. தவல் குல்கர்னி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்பின்னர்கள் சாஹல், படேல், கருண் நாயர் மீதி 8 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். இந்திய அணி கோப்பையை வென்றது.
ஆட்ட நாயகனாக மந்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார்.