இந்திய சுற்றுலாவாசியை வெளியேற்றிய ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற 45 வயது இந்தியர் ஒருவரின் செல்போனில் வெறுக்கத்தக்க காணொலி இருந்ததால், அவரை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

கடந்த மே 2ம் திகதி மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த அவரிடம் பரிசோதனை நடத்திய போது இக்காணொலி கண்டெடுக்கப்பட்டதாக இன்று (மே 05) ஆஸ்திரேலிய எல்லைப்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையை தொடர்ந்து அவரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவரின் சுற்றுலா விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே 2ம் திகதி முதல் பெர்த் குடிவரவு தடுப்பு மையத்தில வைக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய சமூகத்துக்குள் இதுபோன்ற அனுமதிக்கப்படாத காட்சிகளை கொண்டு வருவதைப் பற்றி எச்சரித்துள்ள ஆஸ்திரேலிய எல்லைப்படையின் பிராந்திய தளபதி ராட் ஓ’டோன்னெல், “அக்காணொலியில் பாலியல் தன்மையிலான காட்சி எதுவுமில்லை. ஆனால் ஒரு குழந்தை உடல்ரீதியாக துன்புறுத்தப்படுவது போன்ற காட்சி இருந்தது. இதுபோன்ற காட்சிகள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என்பது குறித்து ஆஸ்திரேலியாவுக்கு வரக்கூடியவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,” எனக் கூறியிருக்கிறார்.

அப்படியான காட்சி ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டு வரப்பட்டால் குறிப்பிடத்தக்க அபராதத்தையும் பின்விளைவுகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.