அவுஸ்திரேலியாவில் மீண்டும் இரு அகதிகள் தற்கொலை முயற்சி!

மனுஸ்தீவிலுள்ள இரண்டு அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் மேற்கொண்டு அந்த முயற்சியில் ஈடுபடுவதிலிருந்து தடுப்பதற்கு பொலிஸ் நிலைய தடுப்புக்காவலறையில் கொண்டுபோய் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு நிலைகொண்டுள்ள Refugee Action Coalition-இன் பேச்சாளர் Ian Rintoul இதனை தெரிவித்துள்ளார்.

மனுஸ் தீவிலுள்ள அகதிகள் அங்கு தொடர்ச்சியாக வைக்கப்பட்டிருப்பதால் மிகவும் விரக்தியடைந்துள்ளார்கள் என்றும் அவர்கள் தங்களுக்கான வழிகளை இதுபோன்ற சம்பவங்களின் ஊடாக நாடுவதற்கே விரும்புகிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எந்தக்குற்றமும் செய்யாத அகதி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார் என்பதற்காக அவரை பொலிஸ் தடுப்பறையில் கொண்டுபோய் வைத்திருப்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாதது என்று Ian Rintoul கூறியுள்ளார்.

விரக்தியடைந்து மனதளவில் பாதிப்படைந்துள்ள ஒரு நபர் இவ்வாறு கையாளப்படுவதெல்லாம் பெருங்கொடுமை என்று தெரிவித்துள்ளார்.

மனுஸ் தீவிலுள்ள ஈராக்கிய அகதி ஒருவரே கடந்த செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்று தடுக்கப்பட்டவர்.

சில நாட்களுக்கு முன்னர் சூடானிய அகதி ஒருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்து தடுக்கப்பட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.