இணைய உலகில் வாழும் நமக்கு இணையமே எதிர்காலத்தில் பாரிய தலையிடியாக அமையப்போகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வீடியோ, புகைப்படங்கள் மற்றும் கோப்புகளை ஆன்லைனில் சேமித்து வைக்கும் சேவையை வழங்கி வரும் 50 கோடி பயனாளர்களை கொண்ட ‘டிராப் பாக்ஸ்’ நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் திடீரென ‘டிராப் பாக்ஸ்’ பயனாளர்களின் ஈ-மெயில் முகவரிகளுடன், பாஸ்வேர்டுகளும் குறிப்பிடப்பட்டு ஒரு பட்டியல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
6.8 கோடி பயனாளர்களின் கணக்கு விபரங்களும் அதில் இடம்பெற்றிருந்தன. இதை ‘டிராப் பாக்ஸ்’ நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் கடந்த 2012-ம் ஆண்டில் திருடப்பட்டிருக்கலாம் என ‘டிராப் பாக்ஸ்’ சந்தேகிக்கிறது.
எனவே, அதன் பயனாளர்கள் உடனடியாக தங்கள் பாஸ்வேர்டுகளை புதுப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. 6.8 கோடி பயனாளர்களின் தகவல்களை திருடியது யார் என்ற விபரம் இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. பாஸ்வேர்டுகள் திருடப்பட்டிருந்தாலும், இதுவரை கணக்குகளுக்குள் ஊடுருவி எவ்வித தகவல்களும் மாற்றம் செய்யப்படவில்லை என ‘டிராப் பாக்ஸ்’ நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.
2012-க்கு பிறகு ‘டிராப் பாக்ஸ்’ சேவையில் புதிதாக இணைந்து கொண்டவர்கள் தங்கள் பாஸ்வேர்டுகளை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எனினும், கணக்குகளை சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அவ்வப்போது மாற்றிக் கொள்வது நல்லது என ‘டிராப் பாக்ஸ்’ தெரிவித்துள்ளது. இதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது பொருத்தமானதாகும்.