ஆரவாரமின்றி நாட்டுக்குள் நுழைந்துள்ள உலக பயங்கரவாதம், உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 253 அப்பாவிகளின் உயிர்களை கொடூரமாகக் குடித்திருக்கின்றது.
பயங்கரவாதத்தின் இந்தப் பிரவேசம் குறித்து சர்வதேச உளவுத் தகவல்களின் மூலம் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும், அதனை நாட்டின் பாதுகாப்புத்துறை தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
இந்திய உளவுத் தகவல்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் உளவுத் தகவல்களும் கூடிய கால இடைவெளியில் பயங்கரவாதிகளின் உருவாக்கம் குறித்தும், அவர்களின் நோக்கங்கள் குறித்தும் தகவல்களை வழங்கியதுடன் எதிர்கால நிலைமைகள் குறித்த எச்சரிக்கையையும் விடுத்திருந்தன.
இந்த நிலைமைகள் குறித்து காலம் கடந்து பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிகொண்ட இலங்கை அரசுகள், புலிப் பயங்கரவாதத்தையே இலக்கு வைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தன. அளவுக்கு மிஞ்சிய எச்சரிக்கை உணர்வுடன் பாதுகாப்புப் பிரிவினர் அந்தச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனரே தவிர, உண்மையான தேசிய பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியிருக்கவில்லை.
தடுக்கப்பட்டிருக்கக் கூடிய உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் போனதற்காக ஆட்சியாளர்களினாலும், தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களினாலும் ஆளை ஆள் குற்றம்சாட்டி வெளியிட்டு வருகின்ற கருத்துக்கள் இதனை உறுதி செய்வதாக உள்ளன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவடைந்ததன் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளிலும், அந்த யுத்த வெற்றியின் அரசியல் ரீதியான மமதையிலேயே ஆட்சியாளர்கள் மூழ்கிக் கிடந்தார்கள். அந்த வெற்றி என்பது, தேசிய நலன்சார்ந்த நிலையில் வெறுமனே போதை தருகின்ற ஒரு மாயை என்பதை இன்னுமே அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தேசிய பாதுகாப்புக்கான பொறுப்புக்களில் ஏற்பட்டிருந்த கவனக்குறைவு அல்லது மோசமான சரிவு காரணமாகவே 253 அப்பாவிகள் மடிந்து போனார்கள். அத்துடன் அந்த உயிரிழப்புக்கள் முற்றுப் பெறவில்லை. பல்வேறு இடங்களிலும் பதுங்கியிருக்கின்ற பயங்கரவாதிகளைப் படையினர் நெருங்கும் போது, இடம்பெற்று வருகின்ற தற்கொலைக்குண்டு வெடிப்புக்களினால் ஏற்படுகின்ற உயிரிழப்புக்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
இந்தச் சம்பவங்களில் அடிப்படை இஸ்லாமிய மதவாத உணர்வில் ஆழ்ந்து மத வெறியின் உச்சநிலையில் உள்ள பூவுலகப் பயங்கரவாதிகள் மட்டும் உயிரிழக்கவில்லை. அவர்களுடன் அவர்களுடைய குடும்பத்தினரும் எல்லாவற்றுக்கும் மேலாகப் பச்சிளம் குழந்தைகளும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
இது, புலிப்பயங்கரவாத எண்ணத்திலும், அந்த அரசியல் சாயம் தோய்ந்த மோகத்திலும் மூழ்கியிருந்த அரச பாதுகாப்புத் துறையினருக்கு, பூவுலகப் பயங்கரவாதத்திடம் இருந்து ஒரு பேரிடியாகவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் வந்து இறங்கியிருக்கின்றன. அரச தலைவர்களினால் தேசிய பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்ட ஒரு மோசமான கட்டத்தை நாடு, கடந்து வந்திருக்கின்றது. இதனை பாதுகாப்பு அமைச்சராகிய ஜனாதிபதியும், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய பொறுப்புக்குரிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
அரச தலைவர்களான இருவருக்கும் இடையில் ஏற்பட்டிருந்த அரசியல் ரீதியான பிளவு மற்றும் அதிகாரப் போட்டி காரணமாக 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணான வகையில் பதவி நீக்கம் செய்து ஆட்சியைக் குலைத்திருந்தார்.
உச்ச நீதிமன்றம் தனது அரசியலமைப்புப் பொருள்கோடலின் ஊடாக அன்றைய அரசியல் ஸ்திரத்தன்மையை நிவர்த்தி செய்து ஜனநாயகத்திற்கு மீண்டும் உயிரூட்டி இருந்தது. அந்தச் சந்தர்ப்பத்திற்குப் பின்னர், தேசிய பாதுகாப்பு விடயங்களில் ஜனாதிபதி, பிரதமரைப் புறந்தள்ளி தன்னிச்சையான போக்கிலேயே முடிவுகளை மேற்கொண்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களின் போது சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, தனக்குப் பதிலாகப் பதில் பாதுகாப்பு அமைச்சரையோ பதில் ஜனாதிபதியையோகூட நியமித்திருக்கவில்லை. இதனால் உடனடியாக, நாட்டின் பாதுகாப்புச் சபை கூட்டத்தைக் கூட்டுவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்த போதிலும், பாதுகாப்புத் துறையினர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் பாதுகாப்புத்துறையினருடைய இடங்களுக்கே செல்ல வேண்டிய நிலைமைக்கு அவர் உள்ளாகியிருந்தார். அந்தக் கூட்டத்திற்கு அவரே தலைமை தாங்கியிருந்தார்.
இருப்பினும், பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து அவசரமாக நாடு திரும்பியதும் ஜனாதிபதி கூட்டிய பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். அதேபோன்று சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு தொடர்பான முடிவுகளை மேற்கொள்கின்ற பாதுகாப்புச் சபைக் கூட்டங்களுக்கு (2018 ஒக்டோர் ஆட்சி கவிழ்ப்புக்குப் பின்னர் 37 தடவைகள் பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டதாக ஒரு தகவல் உண்டு) நாட்டின் பிரதமராகிய தன்னை ஜனாதிபதி அழைக்கவில்லை என்ற தகவலை ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஏன் இதுகால வரையிலும் வெளிப்படுத்தவில்லை என்ற கேள்வி பல தரப்பினராலும் எழுப்பப்பட்டிருக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் நாடு மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்டதன் பின்னரான சந்தர்ப்பத்தைத் தேர்வு செய்து அந்த விடயத்தை அவர் வெளிப்படுத்தியதற்குக் காரணம் என்ன? பத்தொன்பதாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் பின்னர் அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பைக் கொண்டுள்ள பிரதமர் பதவியை வகிக்கின்ற ரணில் விக்கிரமசிங்க இதன் மூலம் தனது பாரிய பொறுப்பைப் புறக்கணித்துள்ளார் அல்லவா என்ற வினாக்களும் வினவப்பட்டிருக்கின்றன.
பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய புலனாய்வுத் தகவல்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு வேளைக்கே கிடைக்கப் பெற்றிருந்த போதிலும், எவரும் அவற்றைத் தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று ஜனாதிபதியும் பிரதமரும் கூறியிருப்பது வேடிக்கையாகத் தோன்றுகின்றது. பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் நாட்டு மக்களுக்குத் தகவல்களை வழங்கும் வகையில் பல்வேறு விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்கூட்டியே கிடைத்த பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய தகவல்களைத் தன்னிடம் இருந்து மறைத்ததற்குப் பாதுகாப்புச் செயலாளரே காரணம் என கூறியிருந்தார்.
தமிழ், சிங்களப் புத்தாண்டு தினத்தன்று தனக்கு வெற்றிலை கொடுத்து வரவேற்ற சந்தர்ப்பத்திலும்கூட இந்தத் தாக்குதல்கள் பற்றிய முன்கூட்டிய தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை என்று கூறியிருப்பது சிறுபிள்ளைத்தனமான கூற்றாகவே தோன்றுகின்றது. நாட்டின் தலைவர்களாகிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவருக்கு மட்டுமே பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய அபாய எச்சரிக்கைத் தகவல்கள் கிடைக்கவில்லை என்பதையே அது பற்றி வெளியாகிய ஊடகத் தகவல்களும் பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளின் கருத்துக்களும் வெளிப்படுத்தியிருக்கின்றன.
அரச தலைவர்களும், பாதுகாப்புப் பிரிவினராகிய முப்படைகளும் இருகூறாக துருவமயமாகி நாட்டில் அரசாங்கம் பிளவுபட்டு பலவீனமடைந்திருக்கின்றது என்பதையே இந்த நிலைமைகள் சுட்டிக்காட்டுகின்றன.
திட்டமிட்ட வகையில் துணிகரமாக மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களின் பின்னர், தேசிய பாதுகாப்பில் விழுந்துள்ள ஓட்டை எவ்வளவு மோசமானது என்பதை பலரும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
‘அரசாங்கம் எங்களைக் கைவிட்டு விட்டது. நாங்கள் அநாதைகளாக ஆக்கப்பட்டு விட்டோம்’ என்று, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, மனம் உடைந்த நிலையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர் பாதுகாப்புத் துறையினருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்ற மூன்றாவது எச்சரிக்கைகூட உரிய தரப்பினரால் கவனத்திற் கொள்ளப்படவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது. இந்த நிலையிலாவது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டிருக்கலாம். அதன் மூலம் முற்றாகப் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுத்திருந்திருக்க முடியாது போயிருந்தாலும், உயிரிழப்புக்களையாவது கூடிய அளவில் குறைத்திருக்கலாம்.
பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய எச்சரிக்கையாவது தங்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் தாங்கள் அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுத்திருந்திருக்கலாம் என்று அவர் ஆதங்கத்துடன் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்குத் தகவல் தெரிவிக்கும் போது கூறியிருக்கின்றார்.
‘இனிமேல் என்ன செய்வது எங்களுக்கு உயிரிழப்புக்கள் ஏற்பட்டுவிட்டன. யாரை நோவது? யாரைக் குற்றம் சுமத்துவது என்று தெரியவில்லை. தவறிழைத்தவர்களைத் தண்டிப்பதால் இழந்த உயிர்களை மீளப் பெற முடியாதே….’ என்று மிகுந்த ஆதங்கத்துடன் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டிருக்கின்றார்.
அவருடைய கூற்று கொடூரமான குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்துள்ள நூற்றுக்கணக்கான ஆன்மாக்களின் இறந்தவர்களுடைய நேசம் நிறைந்த, பல நூற்றுக்கணக்கான உறவினர்களினதும், இந்தத் தாக்குதல்களினால் அதிர்ச்சியடைந்து உறைந்து போயுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களினதும் உள்ளக் குமுறலாகவும் வெளிப்பட்டிருக்கின்றது.
மறுபுறத்தில் புதிய அவசரகால சட்டவிதிகள் பற்றிய விவாதத்தின்போது பாராளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் இராணுவத் தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள உணர்வு ரீதியான கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
‘நாட்டின் பாதுகாப்பு என்பது கேலிக்குரியதாகிவிட்டது. இராணுவ நுண்ணறிவுக் (புலனாய்வுக்) கருவி நாட்டைத் தோல்வியடையச் செய்துள்ளது’ என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
‘இங்கு நடைபெற்றது போன்ற குழப்ப நிலைமையொன்று வேறு நாட்டில் ஏற்பட்டிருந்தால் அந்த அரசு முழுமையாக பதவி துறக்க நேரிட்டிருக்கும். ஆனால் இங்கு ஒருபோதும் அது நடைபெறப் போவதில்லை’ என்றும் அவர் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்று செயற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக்குண்டுத்தாக்குதல்கள் ஓரிரவில் திட்டமிட்டு நடத்தப்படவில்லை. குறைந்தது ஏழு அல்லது எட்டு வருடகாலம் திட்டத்தில் இருந்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
சரத் பொன்சேகாவுடைய இந்தக் கூற்று, தொடர் தற்கொலைத் தாக்குதல்கள் நியூசிலாந்தின் கிறிஸ்சேர்ச் பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குப் பழிவாங்கும் வகையிலேயே நடத்தப்பட்டிருக்கின்றது என்ற பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவின் கூற்றை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றது.
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் வரையில் நாட்டைப் பாதுகாப்பதற்கு அரசியல்வாதிகளும் பாதுகாப்புத் துறைசார்ந்த திணைக்களத் தலைவர்களும் காத்திருக்க வேண்டியதில்லை. நாங்கள் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றோமோ இல்லையோ எந்த வேளையிலும் நாட்டைப் பாதுகாக்க வேண்டியது அவர்களுடைய பொறுப்பாகும். அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் தவறிழைத்திருக்கின்றோம். அதற்குபல காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. ஏற்பட்டுள்ள துன்பியலுக்கு நாங்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் இருந்து ஒருவர் மீது ஒருவர் மாறிமாறி அதற்கான பழியை சுமத்திக் கொண்டிருந்த நிலைமை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வெளியிட்டுள்ள கருத்தும் முக்கிய கவனத்திற்குரியது.
‘பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இந் தத் தாக்குதல்களுக்கான பொறு ப்பை ஏற்க வேண்டும். நாங் கள் எல்லோரும் இங்கு வந்து ஆளாளுக்கு சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் ஒவ்வொருவரும் எங்களைப் பற்றி மட்டுமே கரிசனை கொண்டிருக்கின்றோம். நாட்டைப்பற்றி கரிசனை கொண்டிருக்கவில்லை என அவர் இடித்துரைத்திருக்கின் றார்.
இந்தத் தாக்குதல்களுக்கு ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய பேரரசு என்ற பொருளைக் கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற சர்வதேச பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியிருக்கின்றது. உண்மையில் அந்த அமைப்பின் பயிற்சி மற்றும் அறிவூட்டல் வழிநடத்தலின் கீழ் பயங்கரவாதத்தில் பயிற்றப்பட்டுள்ள தேசிய தவ்ஹித் ஜமா அத் என்ற அமைப்பினரே இந்தத் தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்தத் தாக்குதல்களில் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி இயக்கம் என்ற அமைப்பினர் உடனிருந்து உதவிபுரிந்துள்ளதாகவே பாதுகாப்புத் தரப்பினர் தமது விசாரணைகளின் பின்னர் தெரிவித்துள்ளனர்.
முஸ்லிம்களின் மத ரீதியான நலன்களை மேம்படுத்தவும், அதனை மட்டுமே நிலவச் செய்ய வேண்டும் என்ற அடிப்படைவாதத்தை வகுத்துப்பிரிக்க முடியாத வகையில் கொள்கையாக வரித்துக்கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினர் இலங்கையில் கத்தோலிக்கர்களையும், கிறிஸ்தவர்களையும், சுற்றுலாப் பயணிகளையுமே இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி கொன்றிருக்கின்றார்கள்.
உண்மையில் இங்குள்ள கத்தோலிக்கர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாம் மதத்திற்கு எதிரானவர்களுமல்ல. பகையாளிகளுமல்ல. இந்த நிலையில் மற்றுமொரு முக்கிய விடயமும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றது.
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களில் தமிழ் மக்களே கொல்லப்பட்டிருக்கின்றார்கள். தமிழர்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்துவதற்கு அல்லது அவர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்றொழிப்பதற்கு உலக பயங்கரவாத அமைப்பாகிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கும் சரி, அதன் வழிநடத்தலில் இயங்குகின்ற தேசிய தவ்ஹித் ஜமா அத் மற்றும் ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செய்லானி என்ற இரண்டு உள்ளூர் அமைப்புக்களுக்கும் சரியான காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.
குறுகிய நேரத்திலான தொடர் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் என்ற கொடூரமான தாக்குதல்கள் இலங்கைக்குப் புதிய பயங்கரவாத அனுபவமாகும். இந்தத் தாக்குதல்களினால் நாடே நிலைகுலைந்து போயுள்ளது. தற்கொலைத் தாக்குதல்கள் எந்த இடத்திலும் எந்தவேளையிலும் நடைபெறலாம் என்று நாட்டு மக்கள் அனைவருமே இனந்தெரியாத அச்சத்தில் உறைந்து போயுள்ளார்கள். நிம்மதி இழந்த நிலையில் அவர்களின் நாளாந்த நடவடிக்கைகள் சீர்குலைந்திருக்கின்றன. இந்த நிலைமை எத்தனை நாட்களுக்குத் தொடரும் என்ற கேள்வி அவர்கள் மனங்களில் விசுவரூபமெடுத்து மிரட்டிக் கொண்டி ருக்கின்றது.
தாக்குதல்களினால் ஏற்பட்ட கொடூரமான பேர னர்த்தத்தையடுத்து, தேசிய அளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு பல்வேறு மட்டங்களில் நாடளா விய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப் பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு இடங்களிலும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். பெருந்தொகையான வெடிபொருட்களும், துப்பாக்கிகள் மட்டுமல்லாமல் கத்தி, வாள்கள் போன்ற ஆயுதங்களும், தற்கொலைத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுகின்ற உபகர ணங்கள் பொருட்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டு, இவற்றுடன் நேரடியாக சம்பந்தப் பட்டவர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கின்றன. பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழு கைகளை இரத்து செய்யுமாறு கோரியிருந்த அரசாங்கம், மே தின ஊர்வலங்கள், கூட்டங்கள் என்பவற்றையும் ரத்துச் செய்துள்ளது. சுற்றிவளைப்புக்கள் தேடுதல் நடவடிக்கைகளினால் மக்கள் அசௌகரியமும், அச்ச மும் கொண்டிருக்கின்றார்கள்.
மொத்தத்தில் விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பத்து வருடங்களில் நாடு தோல் வியடைந்த நாடாகத் தவித்து, தடுமாறிக் கொண்டி ருக்கின்றது. இந்த நிலைமையை அரசாங்கத்தினால் எத்தனை நாட்களுக்குள் அல்லது எத்தனை வாரத் திற்குள், எத்தனை மாதத்திற்குள் சீராக்க முடியும் என் பது தெரியவில்லை.
பி.மாணிக்கவாசகம்