தயாரிப்பாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு செவிசாய்ப்பதோ, பயப்படுவதோ இல்லை, பணியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புவதாக நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் நித்யா மேனன். தமிழில் கடைசியாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் நடித்திருந்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் தி அயர்ன் லேடி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.
இடையில் என்டிஆரின் வாழ்க்கை படமான ‘கதாநாயகுடு’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது 12 படங்களில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கேரளாவில் தட்சமயம் ஒரு பெண்குட்டி என்ற படத்தின் படப்பிடிப்பின்போது நித்யா மேனனை சந்திக்க வந்த தயாரிப்பாளர்களை அவர் சந்திக்க மறுத்ததாக ஒரு சர்ச்சை எழுந்தது. நித்யா மேனன் திமிர் பிடித்தவர் எனவும், அவரை மலையாள திரையுலகிலிருந்து தடை செய்ய வேண்டும் எனவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்து வந்தனர்.
முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் சந்திக்க வந்த தயாரிப்பாளர்களை, தனது சொந்த காரணங்களுக்காக நித்யா மேனன் சந்திக்க மறுத்துவிட்டார். இதை தனிப்பட்ட முறையில் அவமதிப்பாக எடுத்துக் கொண்ட தயாரிப்பாளர்கள் நித்யா மேனன் குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நித்யா மேனன் இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
‘இந்த சம்பவம் நடைபெற்ற போது தான் எனது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்து இருந்தது. அப்போது அவருக்கு புற்றுநோய் மூன்றாம் நிலையை எட்டிஇருந்தது. படப்பிடிப்பின்போதே நான் கேரவனுக்குள் நுழைந்து தாயை நினைத்து அழுதேன். அழுது அழுது ஒற்றைத் தலைவலியாலும் பாதிக்கப்பட்டேன்.
அந்த சமயத்தில் யாருடனும் பேசும் மனநிலையில் இல்லை. தயாரிப்பாளர்களின் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு செவிசாய்ப்பதோ பயப்படுவதோ இல்லை. பணியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்’. இவ்வாறு நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal