சமூகமும் சினிமாவும் இரட்டைக் குழந்தைகள் போல. சினிமா சமூகத்தை பிரதிபலிக்கிறது. சமூகம் சினிமாவை பிரதிபலிக்கிறது. இன்று செய்தித்தாளைப் பிரித்தாலே கள்ளக்காதல் செய்திகள் தான் அதிகம் தென்படுகின்றன.
இன்றைய கள்ளக்காதல் கொலைகள் என்று தனி பக்கமே கொடுக்கும் அளவுக்கு கணவன் அல்லது மனைவியின் தகாத உறவின் விளைவால் நடக்கும் கொலை, குற்றங்கள் ஏராளம்.
இந்த சூழ்நிலையில், கணவன் மனைவிக்கிடையேயான அன்னியோன்யத்தையும், அந்த அன்னியோன்யம் கெடுவதால் ஏற்படும் விளைவுகளையும் சொல்லும் ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகிறது ஓடு குமார் ஓடு படம். ஐடி துறையில் வேலை பார்க்கும் அழகான ஆதர்ஸ தம்பதிகளாக இருக்கும் குடும்பத்தில் திடீரென ஒரு புயல் உருவாகி, மனைவியை விவாகரத்து கேட்க வைக்கிறது.
குடும்பம் தான் முக்கியம் என நினைக்கும் கணவன், மனைவி எவ்வளவோ வற்புறுத்தியும் விவாகரத்து தர மறுக்கிறான். ஒரு காரசார வாக்குவாதத்துக்கும் மறுநாள் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள் மனைவி. பழி கணவன் மீது விழுகிறது.
அந்த பழியில் இருந்து மீண்டு வந்தானா அந்த அப்பாவி கணவன்? உண்மையில் மனைவியை கொலை செய்தது யார்? இதனை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சிவசங்கர் மணி. சென்னை டூ பெங்களூரு, பெங்களூரு டூ கோவா என பயணத்திலேயே நடக்கிறது இந்தக் கதை. இந்த படத்தில் நாயகனாக மறைந்த மக்கள் திலகம் எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன் நடிக்கிறார்.
கதாநாயகிகளாக புதுமுகம் இரண்டு பேர் அறிமுகமாகிறார்கள். செப்டம்பர் இரண்டாம் வாரம் ராமாவரம் தோட்டத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தொடர்ந்து பெங்களூரு, கோவா நெடுஞ்சாலைகளில் நடைபெறுகிறது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த 30 ஆம் தேதி ராமாவரத்தில் நடிகர் விஜய்சேதுபதியால் வெளியிடப்பட்டது. இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சிவசங்கர் மணி.
Eelamurasu Australia Online News Portal