உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு , பாதுகாப்பு படையினர் நாடளாவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அதற்கமைய கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப் பொருட்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எரக்கன்டி பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி கிழக்கு கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது வெடிப் பொருட்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 16 வோட்டர் ஜெல் ஸ்ட்ரீக், 160 டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடி பொருட்களும் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த பிரதேசத்தின் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 48 வோட்டர் ஜெல் ஸ்ட்ரீக் , 55 டெடனேட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சிவேலி காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கடந்த 28 ஆம் திகதி கிழக்கு கடற்படையினர் சின்னப்புறம் பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது வோட்டர் ஜெல் ட்ரீயுப் , 5 டெடனேட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புல்மோட்டை காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தெற்கு கடற்படையினர் கடந்த 29 ஆம் திகதி பானம – பொத்துவில் பகுதி ஹொடவோய பாலத்திற்கருகில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றை சோதனைக்குட்படுத்திய போது 5 டெடனேட்டர்கள் உள்ளிட்ட சில வெடி பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொத்துவில் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேற்கு கடற்படையினர் வெலிசரை மற்றும் மாபோலை பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை சுற்றிவளைத்த போது , அங்குள்ள தையல் நிலையங்களில் இராணுவத்தின் வனப்பகுதிக்கு பொறுப்பான பிரிவின் அதிகாரிகளின். அணியும் ஆடையை ஒத்த பூரணமாக தைக்கப்பட்ட 140 ஆடைகளும் , 14 முழுமையாக தைத்து முடிக்கப்படாத ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வத்தளை காவல் துறைக்கு ஒப்படைக்கப்பட்டள்ளன.