அன்னை தெரசாவுக்கு இன்று(4) வாடிகன் நகரில் நடக்கும் பிரமாண்ட விழாவில் ‘புனிதர்’ பட்டம் வழங்கப்படுகிறது. ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த இவர், கருணையின் வடிவமாக திகழ்ந்தார்.
அல்பேனியாவில் 1910, ஆக., 26ம் தேதி பிறந்தார் தெரசா. இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ. இளம் வயதிலேயே சமூக சேவையில் ஆர்வமாக இருந்தார். 18-வது வயதில் ‘சிஸ்டர்ஸ் ஆப் லொரேட்டோ’ என்ற கன்னியாஸ்திரிகள் இல்லத்தில் சேர்ந்தார்.
1929ல் மேற்கு வங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வந்தார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சகோதரி தெரசா மார்டின் நினைவாக தனது பெயரை தெரசா என மாற்றிக் கொண்டார்.
கோல்கட்டாவில் தங்கிய இவர், சேவை பணிகளோடு ஆசிரியையாகவும் பணியாற்றினார்.
1950, அக்.,7ல் ‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்’ என்ற அறக்கட்டளையை துவக்கினார். இதன் மூலம் பசியால் வாடுபவர், வீடின்றி தவிப்பவர், கண்பார்வை இல்லாதவர், சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர் என எண்ணற்ற ஏழைகளுக்கு உதவி செய்தார். 1957-ல் முதல் முறையாக தொழுநோயாளிகளுக்கான நடமாடும் மருத்துவமனையை துவக்கினார்.
அன்னை தெரசாவின் பணியைப் பாராட்டி 1979ல் உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தியாவை தன் தாய்நாடாக போற்றிய இவருக்கு மத்திய அரசு 1980ல் ‘பாரத ரத்னா’ விருது வழங்கியது. 1997ல், செப்., 5ம் தேதி தனது 87-வது வயதில் கோல்கட்டாவில் தெரசா
காலமானார்.
புனிதர் பின்னணி:
புனிதர் பட்டம் வழங்கும் அதிகாரம் வாடிகன் கத்தோலிக்க திருச் சபைக்கு உள்ளது. சம்பந்தப்பட்டவர் ‘அருளாளர்’ என அங்கீகரிக்கப்பட வேண்டும். புனிதர் பட்டம் பெறுவதற்கு 2 அற்புதங்களையும் நிகழ்த்தியிருக்க வேண்டும்.
மேற்குவங்கத்தை சேர்ந்த மோனிசா என்ற பெண் வயிற்று புற்றுநோய் கட்டியால் அவதிப்பட்டார், பின் தெரசா உருவம் பதித்த சங்கிலியை அணிந்து பிரார்த்தனை செய்ததும் புற்றுநோயில் இருந்து மீண்டது தெரியவந்தது. இதை ஆய்வு செய்த வாடிகன் 2003ல் அன்னை
தெரசாவை ‘அருளாளர்’ என அங்கீகரித்தது.
பிரேசில் நாட்டில் ஒருவர் மூளை காய்ச்சல் காரணமாக ‘கோமா’ நிலைக்கு தள்ளப்பட்டார்.
அவரது குடும்பத்தினர் அன்னை தெரசாவை பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து அவர்
குணமடைந்துள்ளார். இந்த 2-வது அற்புதத்தையும் போப் பிரான்சிஸ் அங்கீகரித்து, அன்னை தெரசாவுக்கு ‘புனிதர்’ பட்டம் வழங்க ஒப்புதல் அளித்தார்.
Eelamurasu Australia Online News Portal