நியூசிலாந்து தாக்குதலுக்கு முன்பே இலங்கை தற்கொலைப்படை தாக்குதல் திட்டமிடப்பட்டதாக நியூசிலாந்து தகவல் வெளியிட்டு உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் வேதனை இன்னும் அனைவரது நெஞ்சையும் விட்டு விலகவில்லை. தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என பல இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவரான ஜஹ்ரான் ஹாஷிம் என சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கையில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது என நியூசிலாந்து பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார். கிறிஸ்சர்ச் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னரே இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து கிறிஸ்சர்ச்சிலுள்ள இரு பள்ளிவாசல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தினால் 40-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் நோக்கில் இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன தெரிவித்திருந்தார்.
எனினும் இதனை மறுத்திருந்த நியூசிலாந்து பிரதமர் இலங்கை தாக்குதலுக்கும் நியூசிலாந்து தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என அறிவித்திருந்தார். இந்நிலையில் நியூசிலாந்தின் துணைப் பிரதமர் வின்சென்ட் பீட்டர் அந்த தகவலை மறுத்து நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.தற்கொலை படை தாக்குதல் தொடர்பாக நியூசிலாந்தை இலங்கை தவறாக பயன்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அத்தோடு இவ்வாறான சம்பவங்கள் தொடர்பான ஆதாரங்கள் ஒன்றும் இல்லாமல் அடிப்படையற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கிறிஸ்சர்ச் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னரே இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்ததாக நிபுணர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.