மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடாதது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்றத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என பரவலாக பேசப்பட்டது. கட்சி மேலிடம் கூறினால் போட்டியிட தயாராக இருப்பதாக பிரியங்காவும் கூறியிருந்தார். ஆனால், அவர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. கடந்த முறை போட்டியிட்ட அஜய் ராய், மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வாரணாசியில் மோடி ஆதரவு அலை வீசுவதால், காங்கிரஸ் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், வாரணாசியில் போட்டியிடாததற்கான காரணம் குறித்து பிரியங்கா காந்தி கூறியதாவது:-
நான் போட்டியில் இருந்து வெளியேறவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சக தலைவர்களின் ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளேன். உத்தரப்பிரதேசத்தில் உள்ள 41 தொகுதிகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
எங்கள் கட்சியின் அனைத்து வேட்பாளர்களும், நான் அவர்களின் தொகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என விரும்புகின்றனர். நான் ஒரு தொகுதியில் மட்டும் அதிக கவனம் செலுத்தினால், அவர்கள் சற்று ஏமாற்றம் அடைவார்கள் என நினைத்தேன். அதனால்தான் தேர்தலில் போட்டியிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள 41 மக்களவைத் தொகுதிகளுக்கும் பிரியங்கா காந்தி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 39 தொகுதிகளுக்கும் மற்றொரு பொதுச்செயலாளரான ஜோதிராதித்ய சிந்தியா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.