ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இடைவெளி சற்று அதிகம் என்றாலும் தனது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர் அருள்நிதி. தற்போது ‘கே 13’ என்ற திரில்லர் மூலம் திரும்பியிருக்கிறார். அவருடன் உரையாடியதன் தொகுப்பு இது:
கே 13’ படம் குறித்து ஒரு சில படங்களைப் பற்றி, நாம் என்ன சொன்னாலும் கதையை எளிதாக ஊகித்துவிட முடியும். அப்படியொரு கதைக்களம்தான் ‘கே 13’. படத்தில் நான் ஒரு உதவி இயக்குநர், ஷ்ரத்தா நாத் ஒரு எழுத்தாளர். இதைத் தாண்டி எதைச் சொன்னாலும் திரைக்கதையின் புதிர் உடைந்துவிடும். இது ஒரு முழுமையான சைக்கோ திரில்லர் படம். காயத்ரி, ரமேஷ் திலக், ஆதிக் ரவிச்சந்திரன் எனப் பலரும் இருக்காங்க. ‘கே 13’ என்ற வீட்டில் ஒரு நாளில் நடப்பதுதான் கதை.
கதைத் தேர்வில் அதிக கவனமாக இருப்பதுபோல் தெரிகிறதே… எப்போது கமர்ஷியல் படங்களில் உங்களைப் பார்ப்பது?
இப்போது மட்டுமல்ல, தொடக்கத் திலிருந்தே கதைத் தேர்வில் அதிகக் கவனம் காட்டுகிறேன். நான் தேர்வு செய்த அனைத்துப் படங்களுமே கமர்ஷியல் படங்கள்தான். இசைக்கும் நகைச்சுவைக்கும் காதலுக்கும் முக்கியத்துவம் இருப்பது மாதிரியான படங்களும் பண்ணியிருக்கேன்.
நான் ஜீவாவுடன் நடித்து முடித்திருக்கும் ஒரு முழுமையான கமர்ஷியல் படம் விரைவில் வெளிவரும். அதற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஒரு படம் முடிந்தவுடன் நிறையக் கதைகள் கேட்பேன். அந்தக் கதைகளில் சில கதைகளைத் தேர்வு செய்வேன்.
அதில் திரில்லர் கதைகள் ரொம்ப பிடித்துவிட்டதால், சமீபமாக நிறைய திரில்லர் படங்கள் பண்ணினேன். சில படங்களில் கதாபாத்திரம் செமயாக இருக்கும், ஆனால் கதை வீக்காக இருக்கும். ஆனால், கதையும் நன்றாக இருக்கணும் கதாபாத்திரமும் நன்றாக இருக்கணும் அப்படிப்பட்ட படங்கள்தான் மினிமம் வெற்றிக்கு உத்தரவாதம் தரக்கூடியது. அப்படியொரு கமர்ஷியல் படம்தான் ஜீவாவுடன் நடித்திருப்பது.
முறையாக உங்களுக்கு மல்டி ஸ்டாரர் படம் எனலாமா?
என்னோட பல படங்கள் மல்டி ஸ்டாரர் தான் என்று சொல்வேன். முழுக்க என்னை வைத்தே கதை பயணம் செல்வதுபோல இருக்காது. என்னைப் பொறுத்தவரை கதைதான் எப்போதுமே ஹீரோ. அது சரியாக இருந்தால் போதும், கதாபாத்திரங்கள் உட்பட மற்றவை அனைத்துமே தானாக அமையும்.
திடீரென்று ஜீவாவுடன் நடிக்கும் வாய்ப்பு எப்படி அமைந்தது?
முன்பு ‘உங்களது கதைத் தேர்வு எல்லாமே நல்லாயிருக்கு’ என்று போனில் ஜீவா பேசியிருக்கார். ‘மாப்ள சிங்கம்’ படத்தின் இயக்குநர் ராஜசேகர் ஒரு நல்ல கதை வைச்சிருக்கார் என்று திடீரென்று ஒரு நாள் ஜீவாவே பேசினார். ‘நல்ல கதை, அதைக் கேட்டுப் பாருங்கள்’ என்றவுடன், கேட்டேன். கதை பிடித்துவிட்டது. சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பு. பாரம்பரியம் மிக்க பெரிய நிறுவனம்.
கதையை எவ்வளவு நம்புறேனோ, அந்த அளவுக்கு இந்தத் தயாரிப்பு நிறுவனத்தையும் நம்புறேன். கண்டிப்பா பண்றேன்’ என்று சொன்னேன். என்ன கதை சொன்னீங்களோ அதை அப்படியே எடுங்க என்று வேண்டுகோள் வைத்து ஒப்பந்தமானேன்.
அப்படத்தின் கதை பற்றி…
நானும் ஜீவாவும் நண்பர்கள். எனக்கு ஜோடி ப்ரியா பவானி சங்கர், ஜீவாவுக்கு ஜோடி மஞ்சிமா மோகன். இசை யுவன். இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இருவருமே கபடி வீரர்கள். அந்த விளையாட்டில் ஒருவர் ‘கபடி.. கபடி..’ என்று பாடிச்செல்லும் ரைடராக நானும், தடுத்தாடும் வீரனாக ஜீவாவும் வருகிறோம். முழுக்க நட்பைப் போற்றும் படமாக இருக்கும்.
உங்கள் அண்ணன் உதயநிதியுடனும் இதுவரை சேர்ந்து நடிக்கவில்லையே…
எனக்கும் அண்ணனுக்கும் யாராவது நல்ல கதை வைத்திருந்தால், இணைந்து நடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அது அமைய வேண்டும். எப்போதுமே ஓடுற படத்தில் நான் இருக்கணும். அதுதான் எனது பாலிசி.