அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோர் நகரில் தேவாலயம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த தேவாலயத்துக்கு அருகே திறந்தவெளி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், கலந்துகொண்ட மக்கள் பலர் உணவை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்த அனைவரையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் பீதியடைந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து காவல் துறையினர் , படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Eelamurasu Australia Online News Portal