இந்து தந்தைக்கும் முஸ்லிம் தாய்க்கும் பிறந்த குழந்தைக்கு சான்றிதழ்!

சகிப்புத்தன்மையை நோக்கி முன்னேறிச் செல்லும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முஸ்லிம் தாய்க்கும் இந்து தந்தைக்கும் பிறந்த குழந்தைக்கு முதல்முறையாக பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள சட்டத்திட்டங்களின்படி ஒரு முஸ்லிம் ஆண்மகன் பிறமதத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு. அதேவேளையில், ஒரு முஸ்லிம் பெண் பிறமதங்களை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடையாது.

இந்நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த கிரண் பாபு என்பவர் அதே மாநிலத்தை சேர்ந்த சனம் சாபூ சித்திக் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், பிழைப்புக்காக ஐக்கிய அமீரக நாடுகளின் தலைநகரான அபுதாபி நகருக்கு தனது மனைவியுடன் வந்து இங்கு குடியேறினார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்குள்ள ஒரு மருத்துவமனையில் இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், முஸ்லிம் தாய்க்கு பிறந்த அந்த குழந்தையின் தந்தை இந்து என்பதால் அக்குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் கிடைப்பதில் சட்டரீதியான சிக்கல் எழுந்தது.
பிறப்புச் சான்றிதழை பெறுவதற்காக இங்குள்ள நீதிமன்றத்தில் ‘தடையின்மை சான்றிதழ்’ பெற கிரண் பாபு தொடர்ந்த வழக்கு 4 மாதங்களுக்கு பின்னர் தள்ளுபடியானது.
பின்னர், இந்திய தூதரக அதிகாரிகளின் துணையுடன் இந்த 2019-ம் ஆண்டை சகிப்புத்தன்மை ஆண்டாக கடைபிடிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு அளித்த சலுகையை பயன்படுத்தி நீண்ட, நெடிய போராட்டத்துக்கு பின்னர் அரசின் பொதுமன்னிப்பு முறையில் தற்போது தங்கள் மகளின் பிறப்பு சான்றிதழை பெற்றுள்ளார் கிரண் பாபு.
தலைமை நீதிபதிக்கு அவர் அனுப்பிய விண்ணப்பக் கடிதத்துக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்ததையடுத்து, ஐக்கிய அரபு அமீரக வரலாற்றில் முதன்முறையாக இந்து தந்தைக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் பிறந்த குழந்தைக்கு தற்போது பிறப்புச் சான்றிதழ் கிடைத்துள்ளது.
இது மிகவும் முன்னோடியான மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்கிறார், கிரண் பாபுவின் சட்டப் போராட்டத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த இந்திய தூதரக உயரதிகாரி ராஜமுருகன்.