கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் வெடிப்பொருட்களை வெடிக்க வைத்து உயிரிழந்த தீவிரவாத குழுவின் உறுப்பினர்களுக்கு மீரிகம- கிரிஉல்லயில் உள்ள ஆடை விற்பனை நிலையமொன்றிலிருந்து ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகக் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள்கள் தொடர்பில், மேல் மாகாண வடக்கு பிரிவு குற்ற விசாரணைப் பிரிவினரும் மீரிகம காவல் துறை இன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற சாய்ந்தமருது வீட்டில் காணப்பட்ட பையில் குறிப்பிட்டப்பட்ட முகவரித் தொடர்பில் விசாரணைகளை நடத்தியகாவல் துறை, கடந்த 19ஆம் திகதி முகத்தை முழுவதுமாக மறைத்த நிலையில், குறித்த வர்த்தக நிலையத்தில் 3 பெண்கள் ஆடைக்கொள்வனவில் ஈடுபட்டிருந்தமை பாதுகாப்பு கமரா மூலம் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இவர்களால் குறித்த வர்த்தக நிலையத்தில் 30,000 ரூபாய்க்கு ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காக இவர்கள் வௌ்ளை நிற வானில் அங்கு வருகைத் தந்ததாகவும், ஆடைக் கொள்வனவு செய்தவர்கள் சாய்ந்தமருதில் உயிரிழந்த தீவிரவாத உறுப்பினர்களின் உறவினர்களா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.