ஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த விடுதியை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த பெண்ணியவாதிகள் சிலர் கடந்த 2017-ம் ஆண்டு ‘ஹன்ட்சம் ஹெர்’ (அவள் அழகானவள்) என்ற பெயரில் விடுதி ஒன்றை துவங்கினர்.
இந்த விடுதியில் பெண்களுக்கு தான் முதல் முன்னுரிமை. பெண்களின் இருக்கைகள் நிறைந்த பிறகு, இடம் இருந்தால் மட்டும் ஆண்கள் அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் ஆண்கள் தாங்கள் சாப்பிடும் உணவுக்கு கூடுதலாக 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஆண்களிடம் இருந்து வசூலிக்கப்படும் இந்த கூடுதல் தொகை பெண்களுக்கான நலத்திட்டங்களுக்காக செலவிடப்படும்.
இந்த ஓட்டலுக்கு பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்த அதே வேளை, சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த விடுதி குறித்த எதிர்மறையான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டன. இதனால் சமீபகாலமாக இந்த ஓட்டலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.
இந்த நிலையில், இந்தவிடுதியை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இன்று(ஞாயிற்றுக்கிழமை) விடுதி மூடப்படுவதாக தங்களின்முகநூல் பதிவில் தெரிவித்துள்ள அவர்கள், “ஆண்களின் எதிர்ப்புக்கு பயந்தோ, பணம் சாம்பாதிக்க முடியவில்லை என்றோ ஓட்டலை மூடவில்லை” என குறிப்பிட்டுள்ளனர். விடுதி மூடும் அறிவிப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.